திருமலை: ரூ.150 கோடி மோசடி செய்த வழக்குகளில் 9 மாநிலங்களை சேர்ந்த 32 வங்கி அதிகாரிகள் உட்பட 52 பேரை ‘ஆக்டோபஸ்-2.0’ ஆபரேஷன் மூலம் ஐதராபாத் போலீசார அதிரடியாக கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் நாடு முழுவதும் தொடர்புகளை கொண்ட பெரிய சைபர் மோசடி வலையமைப்பை முறியடித்துள்ளனர்.
ஆபரேஷன் ‘ஆக்டோபஸ்-2.0’ என்ற பெயரில், 16 குழுக்கள் 9 மாநிலங்களில் சோதனைகளை நடத்தி சைபர் குற்றங்களின் முக்கிய பங்கு கொண்டவர்களை கைது செய்தனர். இந்த சைபர் குற்ற கும்பல்களுக்கு ஆதரவளிக்கும் 9 மாநிலங்களைச் சேர்ந்த 52 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பல வங்கிகளின் மேலாளர்கள் உள்பட மூத்த அதிகாரிகள் என 32 பேர் அடங்குவர். மற்றவர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர்.
முதலீட்டு மோசடிகள், வர்த்தக மோசடிகள் மற்றும் டிஜிட்டல் கைதுகள் என்ற பெயரில் இவர்கள் அனைவரும் அப்பாவி மக்களை ஏமாற்றி வருவதை ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்துள்ளனர். கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையின்போது அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன.
இவர்கள் சைபர் குற்றவாளிகளுடன் கூட்டுச்சேர்ந்து சட்டவிரோதமாக வங்கி கணக்குகளை திறந்து, அவற்றை இடைத்தரகர் கணக்குகளாக பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை திசைதிருப்புவதற்காக மொத்தம் 350 வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கணக்குகள் மூலம் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட சுமார் 850 சைபர் வழக்குகளுடன் தொடர்புடைய, சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான மோசடிகள் நடந்துள்ளதாக ஐதராபாத் சைபர் குற்றப்பிரிவு துணை ஆணையர் அரவிந்த் பாபு தெரிவித்தார்.
