சென்னை: நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை சாந்தினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொலியில் கூறியுள்ளதாவது: திருவள்ளூர் தொகுதி தவெக வேட்பாளர் அருண்குமார் தன்னை மருத்துவர் எனச் சொல்லிக்கொள்கிறார். ஆனால், அது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியவில்லை. கடந்த 2021ம் ஆண்டு முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது என்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியது தொடர்பாக புகார் அளித்திருந்தேன். அந்த புகாரில் சட்டவிரோத கருக்கலைப்பு செய்ய வைத்தார் என்ற புகாரும் அளித்திருந்தேன்.
அதில், இந்த தவெக வேட்பாளர், மருத்துவர் அருண்குமார் தான் முக்கியக் குற்றவாளி. தவெக பெண்கள் பாதுகாப்பு எனக் கூறுகிறார்கள். ஆனால், இவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பெண்களுக்கு ஆபத்தானவர் இவர். இந்த அருண்குமாரைப் போல மகாப்பாவி, கெட்டவன் உலகத்தில் இருக்க முடியாது. அதனால், மக்களே உங்கள் ஓட்டு மிகவும் முக்கியம். பெண்கள் இந்த வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடுவதற்கு முன்பு கொஞ்சம் யோசியுங்கள். தவெக வேட்பாளார் அருணுக்கு தயவு செய்து வாக்களிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை சாந்தினி கடந்த 2021ம் ஆண்டு முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது, தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி என்னுடன் 5 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார் எனவும், தன்னைச் சிலமுறை சட்டவிரோதமாக கருக்கலைப்புச் செய்ய வைத்ததாகவும் குற்றஞ்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, சட்டவிரோதக் கருக்கலைப்பில் ஈடுபட்ட மருத்துவர் தற்போது திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர்தான் என்று நடிகை சாந்தினி குற்றஞ்சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
