நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் மனைவியை கழுத்தறுத்து படுகொலை செய்த கணவன்

 

தர்மபுரி: பாப்பாரப்பட்டி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு, காதல் மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்த கொலை செய்த கணவன், தானும் கழுத்தை அறுத்து கொண்டு, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த நல்லப்பநாயக்கனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்(25). இவர் பென்னாகரம் அருகே உள்ள சலூன் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் ஏரியூர் அருகே உள்ள பாகிபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி(23) என்பவரை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இந்த நிலையில், முருகேசன் விஜயலட்சுமியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று விஜயலட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாததால் முருகேசன், பாப்பாரப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு டாக்டரை பார்த்த பின், விஜயலட்சுமியை அழைத்துக் கொண்டு, மீண்டும் வீட்டுக்கு நடந்து சென்றார். வழியில் பாப்பாரப்பட்டி ஏரிக்கரை அருகே, மாட்டு சந்தை வளாகத்தில் உள்ள பொது கழிப்பறை வளாகத்துக்குள் விஜயலட்சுமியை அழைத்து சென்ற முருகேசன், திடீரென அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த விஜயலட்சுமி துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து முருகேசன், தானும் கழுத்தை அறுத்துக்கொண்டார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், விஜயலட்சுமி கழுத்தறுபட்டு இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், கழுத்தறுப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிய முருகேசனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: