சேலம், ஏப்.18: சித்திரை அமாவாசையையொட்டி சேலம் மாவட்ட உழவர்சந்தைகளில் நேற்று 304 டன் 960 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ.1 கோடியே 19லட்சத்திற்கு விற்பனையானது. சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, இளம்பிள்ளை உள்பட 13 இடங்களில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தைகளில் வழக்கமான நாட்களில் நடக்கும் வியாபாரத்தைவிட, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் கூடுதலாக காய்கறிகள் விற்பனையாகும். அதன்படி நேற்று சித்திரை அமாவாசையையொட்டி காய்கறிகளின் விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. 13 உழவர் சந்தைகள் மற்றும் காய்கறிகடைகளில் கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், அவரைக்காய், பூசணிக்காய், வாழைப்பழம், வாழை இலை உள்பட பல வகை காய்கறிகள் அதிகளவில் விற்பனை நடந்தது.
13 உழவர்சந்தைகளிலும் 1047 விவசாயிகள் கொண்டு வந்திருந்த 304 டன் 960 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ.1கோடியே 19லட்சத்து 30ஆயிரத்திற்கு விற்பனையானது. இதனை 73ஆயிரத்து 239நுகர்வோர்கள் வாங்கிச்சென்றனர். தாதகாப்பட்டி உழவர்சந்தையில் தக்காளி கிலோ ரூ.14-20, சின்ன வெங்காயம் ரூ.35-40, பெரிய வெங்காயம் ரூ.26-30 பச்சைமிளகாய் ரூ.32-34, கத்தரிக்காய் ரூ.26-30, வெண்டைக்காய் ரூ.45-50, முருங்கைக்காய் ரூ.20-40, பீர்க்கங்காய் ரூ.40-44, புடலங்காய் ரூ.30-32, தேங்காய் ரூ.50-55, வாழைப்பழம் ரூ.40-60, ஒரு வாழை இலை ரூ.4 முதல் ரூ.6 என்று விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சின்ன, பெரிய கடைவீதி, ஆற்றோர மார்க்கெட், பழைய பஸ் ஸ்டாண்ட், பால் மார்க்கெட் உள்ளிட்ட தினசரி காய்கறி மார்க்கெட்டில் வழக்கத்தைவிட நேற்று விற்பனை அதிகமாக நடைபெற்றது.
