ேசலம் தெற்கு தொகுதியை திமுகவிடம் ஒப்படைக்கணும்

சேலம், ஏப்.14: சேலம் தெற்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் லோகநாதன் நேற்று 55வது வார்டுக்குட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அந்த வார்டுக்குட்பட்ட அம்பாள் ஏரி ரோடு, திருஞானம் நகர், காமராஜர் நகர், மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் லோகநாதன் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது அங்குள்ள திமுக நிர்வாகிகள் கிரீடமும், மாலையும் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பிரசாரத்தில் வேட்பாளர் லோகநாதன் பேசியதாவது:

சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளுக்கு நேரில் சென்று ஆதரவு திரட்டி வருகிறேன். ஒவ்வொரு பகுதியிலும் அடிப்படை பிரச்னைகள் பல இருக்கிறது. அவையெல்லாம் சரிசெய்யப்பட்டு மாற்றப்பட வேண்டும். சேலம் மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் தெற்கு தொகுதி உள்கட்டமைப்பில் வளர்ச்சி இன்றி காணப்படுகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இவை அனைத்தும் மாற்றப்பட வேண்டும் என்றால் நெடுங்காலமாக அதிமுக வசம் இருக்கும் தெற்கு தொகுதியை திமுக வசம் ஒப்படைக்க வேண்டும்.

தெற்கு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். மாற்றத்தை நீங்கள் தாருங்கள், தெற்கு தொகுதியை நான் மாற்றி காட்டுகிறேன். அரசு தொகுதி மேம்பாட்டிற்காக ஒதுக்கும் நிதியை ஒரு சட்டமன்ற உறுப்பினர் முறையாக பயன்படுத்தி இருந்தாலே போதும். வளர்ச்சி தானாக வரும். ஆனால் உங்கள் வாக்குகளை வாங்கி எம்.எல்.ஏ.க்களான அதிமுகவினர் இந்த தொகுதியை மேம்படுத்தினார்களா? இனி இந்த நிலை மாறவேண்டாமா? சாக்கடை கால்வாய்கள், தரமான சாலைகள், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கழிப்பிடங்கள், மாணவ மாணவிகள் நலனுக்காக டிஜிட்டல் நூலகங்கள் உள்ளிட்ட அனைத்தும் தேவையான இடங்களில் அமைத்து கொடுக்கப்படும். தொடரப்போவது திமுக ஆட்சிதான். திராவிட மாடல் 2.0 திட்டங்கள் உங்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க தெற்கு தொகுதியிலும் உதயசூரியனை வெற்றி பெற செய்திடுங்கள். இவ்வாறு லோகநாதன் பேசினார். இந்த பிரசாரத்தின்போது கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவர் அசோகன், மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவர் சரவணன், 55வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: