உத்தரபிரதேசத்தில் கல்வீச்சு, தீ வைப்பு சம்பவம்: ஊதியத்தை உயர்த்த கோரி போராடிய 350 பேர் கைது; பாகிஸ்தான் சதி என்று பாஜக அமைச்சர் விளக்கம்

நொய்டா: டெல்லியை அடுத்த நொய்டாவில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், இதில் பாகிஸ்தான் மற்றும் தீவிரவாத அமைப்புகளின் சதி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரியானா மாநிலத்தில் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவிலும் ஊதியத்தை உயர்த்தக் கோரி சுமார் 40,000 முதல் 45,000 தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று செக்டார் 62 மற்றும் 63 உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட இடங்களில் திரண்ட தொழிலாளர்களின் போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது.

போராட்டக்காரர்கள் தொழிற்சாலைகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன், போலீஸ் வாகனங்கள் உட்பட 12க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்தனர். இந்த மோதலில் 5 போலீசார் காயம் அடைந்தனர். வன்முறை தொடர்பாக இதுவரை 350க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறை குறித்து உத்திரப்பிரதேச தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அனில் ராஜ்பர் கூறுகையில், ‘நொய்டா போராட்டம் திட்டமிடப்பட்ட சதியாகும். சமீபத்தில் மீரட் மற்றும் நொய்டாவில் பாகிஸ்தான் தொடர்புள்ள பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதைக் கருத்தில் கொண்டு, இந்த வன்முறையிலும் பாகிஸ்தான் சதி இருக்கிறதா என்று விசாரணை நடத்தப்படுகிறது’ என்று கூறினார்.

பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் இதுகுறித்து கூறுகையில், ‘நக்சல் தீவிரவாதம் அழியும் நிலையில் உள்ளது, அதை மீண்டும் தூண்டிவிட இத்தகைய போராட்டங்கள் பயன்படுத்தப்படுகிறதா என சந்தேகம் உள்ளது. தொழிலாளர்கள் போர்வையில் சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர்’ என்று எச்சரித்தார். வன்முறையைத் தொடர்ந்து நொய்டா எக்ஸ்பிரஸ்வே மற்றும் முக்கிய சாலைகளில் பல மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. வதந்திகளைப் பரப்ப 24 மணி நேரத்தில் 50க்கும் மேற்பட்ட ‘பாட்’ சமூக வலைதள கணக்குகள் உருவாக்கப்பட்டதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

நிலைமையை கட்டுப்படுத்த 3,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, தொழிலாளர்களின் 5 கோரிக்கைகளில் 4 கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அரசு, மற்ற பிரச்னைகளை ஆராய உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. மாவட்ட போலீஸ் கமிஷனர் லட்சுமி சிங் தலைமையில் வெளிமாவட்ட நபர்கள் குறித்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Related Stories: