திருப்பத்தூர்: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
பரப்புரையில் முதல்வர் கூறியதாவது:
மலைகள் சூழ்ந்த திருப்பத்தூரில் மாஸ் காட்டி எதிரிகளை மலைக்க வைத்தோம். 7வது முறையாக திமுக ஆட்சி அமைய ஆதரவு கேட்டு வந்துள்ளேன்.திமுக ஆட்சி 7வது முறையாக அமைய திருப்பத்தூர் மக்கள் ரெடியா..?ஆம்பூரில் பிரியாணி எப்படி ஸ்பெஷலோ அப்படி திமுகவின் வெற்றியும் ஸ்பெஷலாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்த ஒன்றிய அரசின் தரவுகளை படித்துப் பார்த்து பிரதமர் பேச வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக உள்ள பிரதமர், தேர்தலுக்காக ஒரு மாநிலத்திற்கு எதிராக பேசக்கூடாது.
திராவிட மாடல் ஆட்சியில் திட்டங்கள் நேரடியாக மக்களை சென்றடைகிறது. திராவிட மாடல் அரசின் திட்டத்தால் ஒவ்வொரு குடும்பத்தினரும் பயன் அடைகின்றனர். திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்கான நன்றி அறிவிப்பு விழாவாக இந்த தேர்தலை மக்கள் கருதுகின்றனர். திராவிட மாடல் ஆட்சிக்கு நன்றியை வெளிப்படுத்தும் நாளாக ஏப்.23ம் தேதியை மக்கள் பார்க்கிறார்கள்.
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மிக மோசமாக உள்ளது; இதை சுட்டிகாட்டி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் என்றால் ஒன்றிய பாஜக அரசுக்கு அலட்சியம், விரைந்து முடிக்க மாட்டார்கள். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 10 ஆண்டுகளாக கட்டுவது ஏன்? அது என்ன தாஜ்மகாலா அல்லது தஞ்சை பெரிய கோயிலா? தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்யும் பிரதமர் மோடி, திமுக அரசு மிகவும் மோசமாக நிர்வாகம் செய்வதாக கூறியுள்ளார். ஒன்றிய அமைச்சர்கள் தமிழ்நாட்டு வந்து சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்கிறார்கள்
தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கும் வட மாநிலங்களுக்குமான இடைவெளி அதிகரிக்கும். தொகுதி மறுவரையறை சட்டத்தை தமிழ்நாட்டு எம்.பி.க்கள் கடுமையாக எதிர்ப்போம். தொகுதி மறுவரையறை சட்டத்தை நிறைவேற்றினால் திமுகவின் இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி இருக்கும். நாடாளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றினாலும் மக்கள் மன்றத்தில் சும்மா விட மாட்டோம் என முதல்வர் கூறினார்.
