வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் லியோ ஆகியோருக்கு இடையே தற்போது கடுமையான மோதல் வெடித்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் காலமானதைத் தொடர்ந்து, சிகாகோவில் பிறந்த ராபர்ட் பிரீவோஸ்ட், போப் லியோ 14 என்ற பெயரில் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளை, குறிப்பாக வெனிசுலா மீதான ராணுவ நடவடிக்கை மற்றும் ஈரானுடனான மோதலை போப் விமர்சித்து வந்தார். முன்னதாக, கடந்த 2025ம் ஆண்டு மே 2ம் தேதியன்று போப் ஆண்டவர் உடையில் இருப்பது போன்ற செயற்கை நுண்ணறிவு புகைப்படத்தை டிரம்ப் பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு கார்டினல் டிமோதி டோலன் உள்ளிட்ட மதத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த 5ம் தேதியன்று ஈஸ்டர் செய்தியில் பேசிய போப் லியோ, ஆயுதங்களைக் கீழே போடுமாறும், போரினால் நாகரிகங்களை அழிக்கும் செயலை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கடந்த 11ம் தேதியன்று நடந்த பிரார்த்தனைக் கூட் த்திலும், ‘அதிகாரம் காட்டுவதை நிறுத்துங்கள், போரை நிறுத்துங்கள்’ என்று அவர் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், இன்று டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் போப் லியோவை மிகக் கடுமையாகத் தாக்கிப் பதிவிட்டுள்ளார். அதில், ‘நான் வெள்ளை மாளிகையில் இல்லையென்றால், லியோ வாடிகனில் இருந்திருக்க மாட்டார். அமெரிக்கா வெனிசுலாவைத் தாக்கியது தவறு என்று நினைக்கும் ஒரு போப் எனக்குத் தேவையில்லை. லியோ குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் பலவீனமானவர் மற்றும் வெளியுறவுக் கொள்கையில் மோசமானவர்’ என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் தனது சமூக வலைதள பக்கத்தில், பைபிளில் இயேசு கிறிஸ்து லாசரஸை உயிர்ப்பித்த மிராக்கிள் சம்பவத்தை போன்ற ஒரு ஏஐ புகைப்படத்தை டிரம்ப் வெளியிட்டார். அதில் டிரம்ப் நீண்ட அங்கி அணிந்து கொண்டு, நோய்வாய்ப்பட்ட ஒரு நபரின் மீது கையை வைத்து குணப்படுத்துவது போன்றும், அவரைச் சுற்றி அமெரிக்க தேசிய கொடி, போர் விமானங்கள் மற்றும் தேவதைகள் இருப்பது போன்றும் அந்த டிஜிட்டல் படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது போப் லியோ 10 நாள் பயணமாக ஆப்பிரிக்கா சென்றுள்ள நிலையில், டிரம்பின் இந்த விமர்சனங்களுக்கு வாடிகன் தரப்பில் இதுவரை நேரடிப் பதில் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
