இயேசு கிறிஸ்து தோற்றத்தில் ஏஐ படம்; மதத் தலைவர்கள் டென்ஷன் ஆனதால் சர்ச்சை படம் நீக்கம்: டாக்டர் வேடம் என்று கூறி டிரம்ப் எஸ்கேப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்ட சர்ச்சை புகைப்படம் உலக அளவில் விவாதத்தை ஏற்படுத்தியதால், அந்த பதிவை டிரம்ப் நீக்கினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தனது சமூக வளைதள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தில்,
இயேசு கிறிஸ்து அணிவதைப் போன்ற வெண்ணிற அங்கி மற்றும் சிவப்பு நிற மேலாடையுடன் டிரம்ப் காட்சியளித்தார். மருத்துவமனையில் படுத்திருக்கும் ஒரு நபரின் நெற்றியில் கையை வைத்து அவர் அதிசயம் செய்வது போன்றும், பின்னணியில் அமெரிக்க தேசிய கொடி, சுதந்திர தேவி சிலை, கழுகு மற்றும் போர் விமானங்கள் இருப்பது போன்றும் அந்த ‘ஏஐ’ படம் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே ஈரான் விவகாரத்தில் போப் லியோவுக்கும் டிரம்ப்பிற்கும் இடையே மோதல் நிலவி வரும் சூழலில் இந்தப் படம் வெளியானது. டிரம்ப்பை இயேசுவாக சித்தரித்ததற்கு மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.

இது ஒரு புனிதமற்ற செயல் என்று பலரும் விமர்சித்தனர். 12 மணி நேரத்திற்கும் மேலாக அந்தப் படம் நீடிக்கவே, எதிர்ப்புகள் அதிகரித்ததால் நேற்றிரவு அந்தப் பதிவை டிரம்ப் நீக்கினார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டிரம்ப், ‘அந்தப் படத்தை நான் பதிவிட்டது உண்மைதான். ஆனால் என்னை நான் இயேசுவாகச் சித்தரிக்கவில்லை. என்னை நான் ஒரு டாக்டராகத்தான் நினைத்தேன். அந்தச் சிவப்பு நிற மேலாடையை ரெட் கிராஸ் அமைப்பின் அடையாளமாகக் கருதி, அவர்களுக்கு ஆதரவு தரும் வகையில் மருத்துவ ஊழியராகப் பதிவிட்டேன்’ என்றார். இருப்பினும் அந்தப் படத்தில் ரெட் கிராஸ் அமைப்பின் சின்னம் ஏதும் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. டிரம்ப்பின் ஆதரவாளரான ரிலே கெய்ன்ஸ் கூறுகையில், ‘கடவுளை யாரும் கேலி செய்யக் கூடாது, இதற்காக டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார்.

Related Stories: