வேலூர்: திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று காலை வேலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். இன்று மாலை பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். கடந்த 31ம்தேதி திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கிய அவர், தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
5ம் கட்ட பிரசாரத்தை நேற்று மாலை திருவள்ளூரில் தொடங்கினார். தொடர்ந்து நேற்றிரவு 7மணிக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அம்மூர் சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். பின்னர் ஆற்காட்டில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அங்கிருந்து கார் மூலம் வேலூர் வந்தார். இங்குள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 7 மணியளவில், வழக்கமான நடைபயிற்சியில் ஈடுபட்டார். இதற்காக வேலூரில் இருந்து கே.வி.குப்பத்திற்கு சென்றார். அங்குள்ள ஜெகஜீவன் ராம் நகரில் நடைபயிற்சிக்கு சென்று அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
பின்னர் அம்பேத்கர் புதுதெரு வழியாக நடைபயிற்சி சென்றார். அப்போது முதல்வருக்கு, பொதுமக்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் கை குலுக்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். பலர், முதல்வருடன் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதேபோல் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்பகுதியில் அம்பேத்கர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவபடத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பஜார் பகுதிக்கு சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கே.வி.குப்பம் தொகுதி திமுக வேட்பாளர் ராஜேஸ்வரிக்கு ஆதரவாக முதல்வர் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அங்குள்ள ஒரு டீ கடைக்கு சென்று டீ குடித்தார். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நடை பயிற்சியை முடித்துக்கொண்டு மீண்டும் தனியார் ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுத்தார்.
இன்று மாலை 5 மணியளவில் வேலூர் அடுத்த கந்தனேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வேலூர் திமுக வேட்பாளர் கார்த்திகேயன் எம்எல்ஏ., காட்பாடி திமுக வேட்பாளர் அமைச்சர் துரைமுருகன், அணைக்கட்டு திமுக வேட்பாளர் நந்தகுமார் எம்எல்ஏ, கே.வி.குப்பம் திமுக வேட்பாளர் ராஜேஸ்வரி, குடியாத்தம் தேமுதிக வேட்பாளர் பிரதாப் ஆகியோரை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு ஆதரவாக முதல்வர் பிரசாரம் மேற்கொள்கிறார். இதையடுத்து இரவு 7 மணியளவில் திருப்பத்தூர் அடுத்த மண்டலவாடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திருப்பத்தூர் திமுக வேட்பாளர் நல்லதம்பி எம்எல்ஏ, ஆம்பூர் திமுக வேட்பாளர் வில்வநாதன் எம்எல்ஏ, வாணியம்பாடி இந்திய யூனியன் மு.லீக்., வேட்பாளர் சையத்பாரூக், ஜோலார்பேட்டை திமுக வேட்பாளர் கவிதா தண்டபாணி ஆகியோரை அறிமுகப்படுத்தி பிரசாரம் மேற்கொள்கிறார்.
கலைஞர் கனவு இல்லம்
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டிற்குள் முதல்வர் சென்றார். முதல்வர் ஸ்டாலினை பார்த்தவுடன் வீட்டில் இருந்தவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். முதல்வரை வரவேற்று தண்ணீர் கொடுத்தனர். அப்போது அந்த வீட்டில் வசிக்கும் பெண்மணி ‘கலைஞர் இல்லம் திட்டத்தில் வீடு கட்டி கொடுத்தது பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சொந்த வீடு என்ற கனவு நிறைவேறி உள்ளது’ எனக்கூறி முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். அதற்கு முதல்வர் ஸ்டாலின், மகளிர் உரிமை தொகை கிடைக்கிறதா, குழந்தைகள் பள்ளியில் காலை உணவு சாப்பிடுகிறார்களா என கேட்டார். அதற்கு அந்த பெண்மணி, ‘மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. கடந்த மாதம் ரூ.5ஆயிரம் கிடைத்தது. இந்த குடும்ப செலவிற்கு பெரும் உதவியாக உள்ளது. குழந்தைகளும் தினமும் பள்ளியில்தான் காலை உணவு சாப்பிடுகின்றனர்’ என தெரிவித்தார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ரூ. 8ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். அந்த கூப்பனை வைத்து வீட்டிற்கு தேவையான மின்சாதன பொருட்களை வாங்கிக்கொள்ளுங்கள் என முதல்வர் தெரிவித்தார்.
பஸ்சில் ஏறி வாக்கு சேகரிப்பு
கே.வி.குப்பம் பஸ் நிறுத்தம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ்சில் ஏறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்களிடம் விடியல் பயணம் மூலம் பயணம் செய்வது உதவியாக உள்ளதா, உங்களுக்கு அரசின் சலுகைகள் முறையாக கிடைக்கிறதா? என கேட்டறிந்தார். அப்போது பெண்கள், முதல்வருக்கு கை கொடுத்து வரவேற்றனர்.
