கூட்டைத் தேடும் பறவை

பல்லாண்டுகளுக்கு முன் “கர்ணன்” என்றொரு படம் வந்தது. அதில் குருக்ஷேத்திரப் போர் காட்சி வரும். போரைத் துவக்குவதற்கு முன் கீதை உபதேசக் காட்சியை வைக்க வேண்டும் என்று விரும்புகிறார், இயக்குனர். கீதை உபதேசம் படிப்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால், திரைப்படத்தில் அதைப் புரிந்து கொள்ள முடியுமா? பார்வையாளர்கள் படத்தை பொறுமையுடன் புரிந்து கொண்டு பார்ப்பார்களா? அப்படி காட்சி வைப்பதாக இருந்தால் எத்தனை நிமிடம் வைப்பது? தத்துவ உரையாடலைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் ஜனங்களுக்கு இருக்குமா?

இப்படியெல்லாம் குழம்பிய படக் குழுவினர் கடைசியில் அதை ஒரு எளிய பாடலாக வைக்கவேண்டும் என்று நினைத்தார்கள். அதற்கென்ன எழுதிவிட்டால் போகிறது என்று கவியரசு கண்ணதாசன் அந்தப் பாடலின் முதல் வரியைச் சொல்ல ஆரம்பித்தார். முதல் வரியில் மொத்தப் பாடலின் அர்த்தமும் அடங்கி விடுகிறது. காட்சி இதுதான். அர்ஜுனன் போர்புரிய முடியாது என்று பல காரணங்களை அடுக்கிவிட்டு தேரில் உட்கார்ந்துவிடுகிறான் இனி கண்ணன் உபதேசத்தை ஆரம்பிக்க வேண்டும். கண்ணன் உபதேசத்தை கண்ணதாசன் ஆரம்பிக்கிறார்.

“மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா!” இந்த ஒரு வரியிலே பகவத் கீதையின் சாராம்சம் அத்தனையும் வந்துவிடுகிறது. மரணம் என்பது என்ன?அதை எண்ணி ஏன் கலங்க வேண்டும்? அதுவும் வீராதி வீரனாகிய விஜயன் ஏன் கலங்க வேண்டும்? அவன் கலக்கத்திற்கு மரணபயம் மட்டும்தான் காரணமா?அவனுக்கு மரணபயம் எதனால் வந்தது? தன் மரணம் நினைத்தா? இல்லை பிறரை நினைத்தா? தன்னை நினைத்தது என்றால் மரணத்தின் பின் அவனே இருக்கப் போவதில்லை, பின் ஏன் அவன் கலங்க வேண்டும்? பிறர் மரணத்தை நினைத்துத்தான் என்றால் எத்தனையோ பேர் தினசரி மாண்டுகொண்டுதான் இருக்கிறார்கள். பிறகு, ஏன் அவன் கலங்க வேண்டும்?

இத்தனை கேள்விகளையும் அந்த ஒரு வரி தாங்குகிறது. இந்த கேள்வியின் விடையில் இந்திய ஆன்மிகத் தத்துவ தரிசனத்தின் வெளிச்சம் நம் மீது படும். அந்த வெளிச்சத்தில் நாம் மெய்யுணர்வை நோக்கி நகரலாம்.

ஆம். மரணம்தான் ஒருவரை, மெய் உணர்வை நோக்கி நோக்கி நகரச் செய்கிறது. அதனால்தான் ஆழ்வார்களும் சரி, நாயன்மார்களும் சரி, மற்ற அருளாளர்களும் சரி, வாழ்வின் நிலையற்ற தன்மையைச் சொல்லி, நிலையான ஒரு தன்மையை நோக்கி நகர வேண்டிய அவசியத்தைச் சொன்னார்கள். அதனால் தங்கள் உபதேசத்தில் மரணத்தைத் தொடாத அருளாளர்கள் இல்லை. திருவள்ளுவர் கூட இந்த உலகத்தினுடைய பெருமையைச் சொல்லுகின்ற பொழுது, இந்த உலகத்துக்கு ஆயிரம் பெருமைகள் இருந்தாலும், “நேற்று இருந்தவன் இன்றைக்கு இல்லை” என்பதுதான் மகத்தான பெருமை என்கிறார். “நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு” எத்தனைக் கெட்டவனாக இருந்தாலும் அவனும் ஒரு நாள் இறந்துவிடுகிறான். எத்தனை நல்லவனாக இருந்தாலும் அவனும் ஒரு நாள் இறந்துவிடுகிறான்.

இந்த விஷயத்தை லகுவாக கண்ணதாசன் ஒரு கவிதையில் பாடுவார்.காமுகனும் மாண்டான் – கடவுள் நெறி பேசும் மாமுனியும் மாண்டான்
– என்றார்.
நல்லவன் இல்லாத பொழுதுதான் கெட்டவனால் ஏற்படும் இன்னல்களைப் புரிந்துகொள்ளுகின்றோம். கெட்டவன் இல்லையேல் நல்லவன் இருந்தாலும் அவன் அருமை யைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். நல்லவரின் அருமையைப் புரிய வைக்க கெட்டவன் வேண்டும். இரவும் பகலும், தீயும் நீரும், நன்மையும் தீமையும், கலந்துதான் இருக்கின்றன. வெறும் இனிப்பு மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அதுவும் ஒரு நாள் அலுத்து விடும்.வெறும் கசப்பு மட்டும் சாப்பிட்டுக் கொண் டிருந்தால் இனிப்பின் இனிமை புரியாமல் போய்விடும். ஒன்றைப் புரிந்து கொள்வதற்கு மற்றொன்று வேண்டும். அதைவிட முக்கியம் ஒன்றில் தான் இன்னொன்றும் மறைந்து இருக்கிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருக்கிறோம். நஞ்சு அமிர்தத்தில்தானே இருந்தது. நஞ்சு மறைமுகமாக இருக்கிறது. அதனால் தான் பாற்கடல் கடைந்த போது அமுதமும் நஞ்சும் இரண்டும் ஒரே இடத்தில் இருந்து பிறந்தன.

ஒரு விஷயம் அளவுக்கு மீறிப் போகும் பொழுது அதுவே தீமை ஆகிவிடுகிறது.இத்தனையும் புரிந்து கொள்ள மரணத்தின் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவருடைய வாழ்வு என்பது ஜனனம் மரணம் என்ற இரண்டு புள்ளிகளுக்கு இடையே நிகழ்வது.வாழ்வு என்பது வேறொன்றும் இல்லை காலம் (TIME) தான். இறந்துபோன ஒருவருடைய படத்தைப் போட்டு தோற்றம் – மறைவு என்று இரண்டு தேதிகளைக் கொடுத்திருப்பார்கள். உதாரணமாக 1950ஆம் ஆண்டு ஒருவர் பிறந்து 2020-ஆம் ஆண்டு அவர் இறந்துவிட்டார் என்று இருந்தால், 1950 க்கும் 2020 க்கும் இடைப்பட்ட காலம்தான் அவர் வாழ்வு.

அதனால்தான் அவருடைய இறப்பை, காலமாகி விட்டார்(PASSED) என்று குறிப்பிட்டார்கள். உயிர்களைக் கொண்டு போகும் எமதர்மனை காலன் என்ற சொல்லால் குறிப்பிட்டார்கள். காலத்தை கவனிக்காமல் வாழ்ந்தால், காலன் கவனித்து விடுவான். அப்படியானால் வாழும் காலத்தை வகையாக அமைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நொடியும் அடுத்த நொடி நமது இல்லை என்ற நினைவோடு வாழுங்கள் என்றார்கள். இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று என்று வருமோ அறியேன் என் கோவே – துன்று மலவெம் மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம்.
– என்பார் வள்ளலார்.

இன்னும் அழகாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், ஜனனம் (பிறப்பு) என்பது உயிர், ஒரு கூட்டைத் தேடுவது. மரணம் என்பது, உயிர் கூட்டை விட்டு வெளியேறுவது.பறவைகளாக இருக்கலாம் விலங்குகளாக இருக்கலாம் மனிதர்களாக இருக்கலாம். எல்லா உயிர்க்கும் இது பொருந்தும். உயிரில் மாற்றமில்லை. புகுந்த கூட்டில் தான் மாற்றம். கூட்டில் சற்று தங்கி இளைப்பாறும் உயிரானது, கூடு வெறுத்தாலும், உபயோகம் இல்லை என்று நினைத்தாலும், அல்லது அந்த கூட்டிற்கு (உடலுக்கு) உயிரை வைத்துக்கொள்ளுகின்ற சக்தி வெளியேறிவிடுகிறது. உயிர் உள்ளே நுழைவதை (IN) ஜனனம் என்றும், உயிர் வெளியேறுவதை (OUT) மரணம் என்றும் சொன்னார்கள். உயிரானது நிரந்தரமானது. அது உள்ளே போகிறது; வெளியேறுகிறது.மறுபடி உள்ளே போகிறது; வெளியேறுகிறது. “புனரபி ஜனனம் புனரபி மரணம்” என்று ஆதிசங்கரர் பஜ கோவிந்தத்தில் இதைப் பக்குவமாய் பாடி வைத்தார். வீடுவீடாகப் போவது போல, உயிர் கூடு கூடாகப் புகுந்து வெளியேறுகிறது.

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னம் எத்தனை எத்தனை சன்மமோ
மூடனாயடி யேனும் அறிந்திலேன்
இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ
என்செய் வேன் கச்சி ஏகம்பனே
– என்று பாடினார் பட்டினத்தடிகள். கூட்டை விட்டு உயிர் வெளியேறுவதற்கு மூன்று காரணங்கள் ஆன்மிகத்தில் சொல்லப்படுகின்றன. என்னென்ன காரணங்கள் என்பதைப் பார்ப்போம்.
– தொடரும்

Related Stories: