முத்துக்கள் முப்பது
சித்திரைத் திருநாள் – 14.4.2026
1. பராபவ வருடம் பிறந்தது
இதுவரை நடந்த “விசுவாவசு” தமிழ் வருடம் நிறைவு பெற்று, 60 வருட வரிசையில் 40-ஆவது வருடமான பராபவ வருடம் பிறந்துவிட்டது. ஆங்கில மாதம் ஏப்ரல் 14 ம் தேதி, (14.4.2026) செவ்வாய்க்கிழமை, சதய நட்சத்திர நாளில், சித்திரை மாதப் பிறப்பு நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 12 ராசிகளில் தலை ராசியான மேஷ ராசியின் முதல் பாகையில் சூரியன் செவ்வாய்க்கிழமை காலை சுமார் ஆறரை நாழிகைக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி துல்லியமாக 8 மணி 22 நிமிடத்திற்கு, நுழைகிறார்.. 12 மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதப் பிறப்பின் சிறப்புக்களையும், சித்திரை மாதத்தில் நடைபெறும் வெவ்வேறு விதமான உற்சவங்களையும் விழாக்களையும் பற்றி, இந்த முப்பது முத்துக்கள் தொகுப்பில் காண்போம்.
2. இந்தச் சித்திரை மாதம் எப்படி இருக்கும்?
புத்தாண்டு பிறப்பது நம்முடைய மனதின் புத்துணர்ச்சியை அதிகரித்து மகிழ்ச்சியை கூட்டும் . அதனால் தான் அந்த நாளை நாம் மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். வண்ண வண்ண பூக்களால் அலங்கரித்து, வகைவகையான உணவுகளைச் சமைத்து, உற்றார் உறவினர்களோடு கலந்து உண்டு மகிழ்கிறோம். சித்திரை மாதத்தை வரவேற்கும் இந்தக் கவிதை, சித்திரையின் அழகை நமக்கு எடுத்துக்காட்டும்.
சித்திரை வந்தது சின்னஞ்சிறு காற்றுடன்,
சிந்தனை புதிதாய் மலர்கிறது உள்ளத்தில்.
புத்தாண்டு பொன்னான பொழுது வந்து சேர,
புன்னகை பூக்கும் வீதிகள் எல்லாம்.
மரங்களின் கிளையில் மஞ்சள் பூ சிரிக்க,
மனங்களின் உள்ளே நம்பிக்கை பிறக்க,
வெயிலோடும் சேர்ந்து விழாவும் வர,
வீடெல்லாம் வாழ்வு இனிமையால் நிரம்ப.
மதுரை நகரம் முழுதும் மகிழ்ச்சி பொங்க,
சித்திரை திருவிழா கோலாகலம் கண்கள் கவர,
அழகர் ஆற்றில் இறங்கும் அந்த தருணம்,
ஆன்மிக ஆனந்தம் தரும் நினைவாகும்.
புது தொடக்கம் தரும் சித்திரை நாளே,
பெருமிதம் தரும் தமிழ் வழி வாழ்வே,
இன்பமும் செழிப்பும் எங்கும் மலர,
இது தான் வாழ்வின் இனிய பிறப்பே.
3. சித்திரை மாதம் என்கின்ற பெயர்
மேஷம் என்பது முதல் ராசி. மேஷ ராசியில் அடங்கியிருக்கும் நட்சத்திரங்கள் அசுவனி, பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம். இப்படி 27 நட்சத்திரங்களை 12 ராசிகளுக்கு ராசி மண்டலமாகப் பிரித்திருக்கிறார்கள். இதில் முதல் ராசியான மேஷ ராசியில், முதல் நட்சத்திரமான அசுவினி நட்சத்திரத்தில், சூரியன் நுழையும் நேரத்தை சித்திரை மாதத்தின் துவக்கமாகக் கணக்கிட்டு இருக்கிறார்கள்.
சித்திரை என்பது 27 நட்சத்திரங்களில் 14-வது நட்சத்திரம். அதற்கு முன்னால் 13 நட்சத்திரங்கள் இருக்கின்றன. அதற்கு பின்னால் 13 நட்சத்திரங்கள் இருக்கின்றன. இது நடு நட்சத்திரம். செவ்வாயின் ராசி தான் மேஷ ராசி. செவ்வாய்க்குரிய மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்க, செவ்வாய்க்குரிய சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் பிரகாசிக்க, ஏற்படுவது சித்ரா பௌர்ணமி. எந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரே ஒவ்வொரு தமிழ் மாதத்தின் பெயராக வைத்தார்கள் . உதாரணமாக சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் இருக்கும் காலம் சித்திரை மாதம்.
4.தமிழர்களது காலக்கணிப்பு
தமிழர்களது காலக்கணிப்பு முறையின் படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகக் கருதப்படுகிறது. தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் எனப்படுகின்றன. பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினது கால அளவாகும். சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன ராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது. எனவே சூரியன் ஒரு ராசியில் கடக்கும் போது ஏற்படும் விளைவை பொறுத்தே மனித வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்ந்தன. எனவே நம் முன்னோர்கள் சூரிய நகர்வையும் , பிறந்த நேரம், இடம், திதி, நாள், நட்சத்திரம் வைத்து மனித வாழ்க்கை நிகழ்வுகளை கணித்தனர்.
5. மேஷ சங்கராந்தி
தை மாதப் பிறப்பை மகர சங்கராந்தி என்று கொண்டாடுவது போல, சித்திரை மாத பிறப்பை மேஷ சங்கராந்தி / மேஷ சங்கரமணம் என்று கொண் டாடுவார்கள்.சூரியன் மேஷ ராசியில் நுழையும் முக்கியமான தருணமாகும். இதுவே தமிழ் ஆண்டின் தொடக்கத்தையும் குறிக்கிறது. மேஷ ராசியில் தான் சூரியன் உச்சமடைகிறது. இந்த நாளில் சூரியனை வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.மேஷ சங்கரமணம் என்பது சூரியன் புதிய சுழற்சி தொடங்கும் நேரம் என்றும், வாழ்வில் புதிய தொடக்கத்திற்கான சின்னமாகவும் பார்க்கப் படுகிறது.வீடுகளில் மட்டுமின்றி ஆலயங்களிலும் விசேஷ வழிபாடுகள் நடைபெறுவதைக் காண்கிறோம்.
6. பிரம்மாவுக்குரிய விஷூ புண்ய காலம்
உலகத்தை நான்முகன் சித்திரையில் படைத்தார் என்பதால் சித்திரை தொடக்கத்தை விஷூ புண்ய காலம் என்றார்கள். சித்திரை, ஆடி, ஐப்பசி, தை மாதப் பிறப்பு (1-ம் தேதி) ஆகிய 4 மாதங்கள் விஷு புண்ய காலம் எனப்படும். சூரியன் மேஷ ராசியில் நுழையும் சித்திரை முதல் நாளும் (மேஷ விஷு) மற்றும் துலாம் ராசியில் நுழையும் ஐப்பசி முதல் நாளும் (துலா விஷு) புண்ணிய காலமாகக் கருதப்படுகிறது.தமிழ் ஜோதிடக் கணிதப்படி சித்திரை முதல் நாள் மற்றும் ஐப்பசி முதல் நாள் ஆகிய இரு நாட்களிலும் பகல் மற்றும் இரவுப் பொழுதுகள் சரிசமமாக இருக்கும்.
சித்திரை விஷு நாளில் கனிகாணல் (கனி, காய்கறிகள், பணம், நகைகள் வைத்து தரிசித்தல்) மற்றும் அதிகாலையில் குளித்து, சூரியன் மற்றும் விஷ்ணு/பிரம்மாவை வழிபடுவது குடும்பப் பிரச்னைகளைத் தீர்க்கும். தமிழ் இலக்கியத்தில் சித்திரை மாதம் என்பது வெறும் கால அளவல்ல; அது புது தொடக்கம், வளம், விழா, ஆன்மிகம் ஆகியவற்றின் அடையாளமாகப் படைக்கப்படுகிறது. சங்க இலக்கியப் படைப்புகளில், காலங்களும், மாதங்களும் இயற்கையுடன் இணைந்து வர்ணிக்கப்படுகின்றன. சித்திரை காலம் என்பது வசந்த காலம். மலர்கள் மலரும் பருவம் வெயில் அதிகரிக்கும் பருவம். சிலப்பதிகாரம் போன்ற படைப்புகளில் மதுரை நகரின் திருவிழாக்கள்,தெய்வ வழிபாடு,சமூக வாழ்வு இவை அனைத்தும் சித்திரை மாதத்தின் ஆன்மிகச் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றன.
7. பூமி தோன்றிய மாதம்
சுமார் 1350 கோடி வருடங்களுக்கு முன் பெருவெடிப்பின் விளைவாக பருப்பொருள், ஆற்றல், காலம், வெளி ஆகியவை தோன்றின.அகண்ட வெளியில் 500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது பூமி மற்றும் கோள்கள் அடங்கிய சூரிய மண்டலம் இல்லை. சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தான் சிதறி இருந்த தூசுகள் மற்றும் துகள்கள் மற்றும் கொதித்துக் கொண்டிருந்த கற்களும் இணைந்து ஒரு நெருப்பு கோளமாக மாறியது.
பின்னர் பல லட்சம் ஆண்டுகள் எடுத்துக் கொண்டு கனன்று கொண்டிருந்த அந்த நெருப்புக் கோளம் மெல்ல மெல்லக் குளிர்ந்து ஒரு திடமான உருண்டை வடிவமாகி, மிதக்கும் பாறையாக சூரியனைச் சுற்றி வலம் வர ஆரம்பித்தது. பூமியிலிருந்து வெளியேறிய வெப்பம் குளிர்ச்சி அடைந்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் மழை பெய்து பூமியின் பள்ளங்களில் நிரம்பி கடலாக உருவெடுத்தது.நெருப்பு சூரியன் பூமி என்ற மூன்று விஷயங்களை நாம் இதில் பார்க்கிறோம். மேஷ ராசி எனும் நெருப்பு ராசியில்,சூரியன் உச்சம்,பெறும் மாதத்தில் பூமி கோளுக்கு உரிய மேஷ ராசியில் சித்திரை பிறப்பது பொருத்தமே.
8. வசந்தத்தின் வருகை
பருவங்கள் ஆறு. இளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி), கார் காலம் (மழை) (ஆவணி – புரட்டாசி) , கூதற் (குளிர்) காலம் (ஐப்பசி-கார்த்திகை) முன்பனி (மார்கழி, தை), பின்பனி (மாசி, பங்குனி) என்பவை ஓர் ஆண்டின் ஆறு பருவங்கள். சித்திரை, வைகாசி இவை இரண்டும் வசந்த ருது என்று சொல்லப்படும். ஆறு வகை சிறு காலங்களில் வசந்த காலத்தைக் குறிக்கும். இந்த வசந்த காலத்தின் தொடக்கம் சித்திரை மாதமாக அமைந்தது. பங்குனி மாதத்தின் அமாவாசை முடிந்த அடுத்தநாள் சைத்ரமாதம் என்று சொல்லப்படும் சித்திரை மாதம் ஆரம்பித்து விடுவதால், வசந்த காலத்தை அங்கிருந்தும் கணக்கிட்டு, வசந்த நவராத்திரி போன்ற உற்சவங்களைக் கொண்டாடுவார்கள்.
உத்திராயனமாகிய பகல் பொழுது காலத்தின் உச்சி காலம் என்பதால், சித்திரை மாதத்திலும் கோடை வெயில் மிகவும் அதிகமாக இருக்கும். பங்குனியின் இறுதிநாட்களில் அல்லது சித்திரை முதல் நாளில் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும். மலைபடுகடாம் “தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை” என்றும், பழமொழி நானூறு “கணிவேங்கை நன்னாளே நாடி மலர் தலால்” என்றும் பாடுவதால் இளவேனில் துவக்கமான சித்திரையே அக்காலத்தில் தலைநாளாகக் கருதப்பட்டது.
9. இந்த வருடத்தின் சிறப்பு என்ன?
தமிழ் வருடப் பஞ்சாங்கங்களின்படி சித்திரை மாதத்தில் இருந்து தான் தொடங்குகிறது. அந்த அடிப்படையில் இந்த சித்திரை பராபவ வருடம் என்ற பெயரோடு தொடங்குகிறது. இந்த வருடத்தின் மிக முக்கியமான சிறப்பாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் செவ்வாய் ஆதிக்கத்தில் உள்ள செவ்வாய்க் கிழமையில், ராகுவின் சதய நட்சத்திரத்தில் பிறக்கிறது.அதாவது கும்பராசியில் ரிஷப லக்கினத்தில் சுக்கிர ஹோரையில் பிறக்கிறது.
பராபவம்” என்ற சொல்லுக்கு பொதுவாக “சோதனை, மாற்றம், சவால்” போன்ற அர்த்தங்கள் உள்ளன. பராபவ வருடம் பற்றி ஜோதிட ரீதியாக சொல்ல வேண்டுமானால் சில சவால்கள், மாற்றங்கள் அதிகமாக இருக்கும். பழைய முறைகள் மாறி புதிய மாற்றங்கள் உருவாகும். முயற்சி செய்தவர்களுக்கு அனுபவம் மற்றும் வளர்ச்சி கிடைக்கும்.அரசியல், சமூக துறைகளில் மாற்றங்கள் காணப்படும்.அறிவு சார்ந்த தொழில்கள் மிகச் சிறந்த மாற்றத்தையும் ஏற்றத்தையும் பெறும்.
10. அறுபது ஆண்டு கணக்கு
சூரியனின் இயக்கத்தை வைத்து நாள் காட்டிகளை உருவாக்கியதில் முன்னிலையில் இருந்த நாடுகள் ஆசிய நாடுகளே. நம் முன்னோர்கள் அறுபது ஆண்டு கால சுழற்சி உடைய காலக்கணிதத்தை பின்பற்றினர் .அது என்ன 60 ஆண்டுகள்? எதற்காக அப்படி ஒரு காலக் கணிதம்? சூரியனைச் சுற்றி வர குரு 12 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். வக்ர கதி,அதிசார கதியினால் மாறும்.சனி தோராயமாக 30 ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும். சனி, வியாழன், செவ்வாய், பூமி, ஆகிய நான்கும் ஒவ்வொரு 60 ஆண்டு முடிவிலும் ஒரே புள்ளிக்கு வந்து சேருவது ஒரு சிறப்பு. இத்தனைச் சிறப்புகளையும் வைத்துக்கொண்டு, 60 வருடங்கள் என்பதை ஒரு காலக் கணக்காக ,ஒரு கால சுழற்சி கணக்காக முன்னோர்கள் நிர்ணயித்து வைத்திருந்தனர்.
11. ஜோதிடமும் வானியலும் கலந்த கணக்கு
பிரபவ வருடம் தொடங்கி அக்ஷய வருடத்தில் முடிந்து மறுபடி பிரபவ வருடம் தொடங்கும் இந்த 60 ஆண்டு சுழற்சி “சம்பத்ஸர சக்கரம்” என அழைக்கப்படுகிறது. இது வேத காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வரு கிறது தமிழ், தெலுங்கு, கன்னட, சம்ஸ்கிருத காலண்டர்களில் பொதுவாக உள்ளது. 60 ஆண்டுகள் தனித்தனியாக பெயர்களுடன் இருக்கும். 60வது ஆண்டுக்குப் பிறகு மீண்டும் முதல் ஆண்டுப் பெயர் தொடங்கும்இதனால் காலத்தை நீண்ட அளவில் கணக்கிட எளிதாகிறது. பழைய காலத்தில் வரலாறு, நிகழ்வுகள் ஆண்டுப் பெயர்களால் பதிவு செய்யப்பட்டன இந்தக் கணக்கு, ஜோதிடம் மற்றும் சடங்கு களில் முக்கிய பங்கு வகிக்கிறது. காலத்தை சுழற்சியாக (cyclical time) பார்க்கும் இந்திய பாரம்பரிய சிந்த னையின் விளைவு இது.
12. எத்தனை ஆன்மிக நிகழ்வுகள்?
சித்திரை மாதம் பிறக்கும் போது, ராகுவின் சதயத்தில் சந்திரன் பிரகாசித்துக் கொண்டிருப்பார். அசுவினி நட்சத்திரத்தின் முதல் பாகையில் சூரியன் நுழைவார். சித்திரை மாதத்தில் எத்தனை பண்டிகைகள் என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கும்.
* தமிழ் வருடப்பிறப்பு
* மச்ச ஜெயந்தி
* பலராமர் ஜெயந்தி
* அட்சய திருதியை
* ஆதிசங்கரர் ஜெயந்தி
* லாவண்ய கௌரி விரதம்
* கன்னிகா பரமேஸ்வரி
* வாசவி ஜெயந்தி
* மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம்
* அக்னி நட்சத்திரம்
* நரசிம்மர் ஜெயந்தி
* சித்ரா பௌர்ணமி
* சித்ரகுப்தன் ஜெயந்தி
* கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்
* வராக ஜெயந்தி.
இப்படி பல பல ஆன்மிக விசேஷங்கள் கொட்டிக் கிடக்கும் வசந்த காலம் சித்திரை மாதம்.
13. விஷூக்கனி தரிசனம்
தமிழ் புத்தாண்டு அன்று விஷூக்கனி தரிசனம் அவசியம் செய்ய வேண்டும். விஷூக்கனி தரிசனம் மிக எளிமையான விஷயம்தான். உங்கள் வீட்டு பூஜை அறையில் முதல் நாளே சுத்தப்படுத்தி, துடைத்து, கோலம் போடுங்கள். மாக்கோலம் போடுவது சிறப்பு. ஒரு மரப் பீடத்தை (பலகை அல்லது வாழையிலை) வையுங்கள் அதில் நிலைக் கண்ணா டியை வைத்து, இருபுறமும் விளக்கு ஏற்றுங்கள். சில தட்டுகளில் புஷ்பங்கள், தாம்பூலம், மஞ்சள், குங்குமம், பச்சரிசி, பருப்பு வகை, இவற் றையெல்லாம் நிரப்பி வையுங்கள். உங்களால் முடிந்த அளவுக்கு பழ வகைகளை ஒரு தட்டில் வையுங்கள்.
14. கை நீட்டம்
இந்த மங்கலப் பொருள்களை எல்லாம் அடுத்த நாள் நீங்கள் கண் விழித் தவுடன் நேராகப் போய்ப் பார்க்க வேண்டும். மங்கலப் பொருள்களை முதல் முதலில் பார்த்தால் அந்த ஆண்டு முழுக்க சிறப்பாக இருக்கும். இதற்குப் பிறகு பெரியோர்களிடம் ஆசி பெற வேண்டும். அவர்கள் உங்களுக்கு அன்பளிப்பு தருவார்கள். இதற்கு கை நீட்டம் என்று பெயர். அவர்கள் தர முடியாத நிலையில் இருந்தாலும் கூட நீங்கள் அவர்களிடம் முதல் நாளே பணத்தைத் தந்து பெற்றுக் கொள்ளுங்கள். உங்களைவிட இளையவர்களை வணங்கச் சொல்லி அவர்களுக்கு ஆசிதாருங்கள். இப்படிச் செய்வதன் மூலம் இந்த ஆண்டு முழுதும் சிறப்பாக இருக்கும்.
15. பஞ்சாங்க படனம்
நமது தமிழ் மாத பஞ்சாங்கங்கள் வாக்கியம், திருக்கணிதம் எதுவாக இருந்தாலும் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரைதான். ஆங்கில நிதி ஆண்டும் தமிழ் ஆண்டை ஒட்டியே இருக்கிறது.சித்திரை மாதத்தின் முதல் நாளில், அனேகமாக, சைவ வைணவ வேற்றுமை இல்லாது, எல்லா கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் நடக்கும். எல்லாக் கோயில்களிலும் அன்று “பஞ்சாங்க படனம்” நடத்துவார்கள். அன்று பஞ்சாங்கம் படிப்பது என்பது மிகவும் சிறப்பு. பஞ்சாங்கம் வாசிப்பதில் வல்லுநர்கள் புது வருடத்திற்கான பஞ்சாங்கத்தை வாசித்து பலன் கூறுவார்கள். 12 ராசிகளுக்கான பலன்களும், லாப நஷ்ட கணக்கும் படிப்பார்கள். புது வருடத்தின் நிகழ்வுகள் கணித்துச் சொல்லப்படும்.
16.பஞ்சாங்கம் படிப்பது என்பது மிகவும் சிறப்பு
புதுப் பஞ்சாங்கத்தைப் பூஜையில் வைத்து, மாலை நேரத்தில் அதைப் படிக்கும் வழக்கமும் சில வீடுகளில் உண்டு. வீட்டிலுள்ள அனைவரும் கூடி அதைக் கேட்பார்கள். சிலர் புதுப் பஞ்சாங்கம் வாங்கி தானம் செய்வார்கள். பஞ்சாங்கம் என்பது அன்றைய திதி, நட்சத்திரம், நாள்(வாரம்),யோகம், கரணம் என்ற ஐந்து அங்கங்களைப் படிப்பது.
திதிஷ்ச ஸ்ரீ யமாப்னோதி வாரேனாயுஷ்யவர்த்தனம்
நக்ஷத்ரே ஹரதே பாபம் யோகாத்ரோக நிவாரணம்
கரணேச்சைத காரியம் பஞ்சாங்க பலமுத்தமம்
பொருள்:
திதி: செல்வம் தரும் (ஐஸ்வர்யம்).
வாரம்: ஆயுளை அதிகரிக்கும்.
நட்சத்திரம்: பாபங்களைப் போக்கும்.
யோகம்: நோய்களைக் குணப்படுத்தும்.
கரணம்: நினைத்த காரியத்தை வெற்றியாக்கும்.
எனவே, தினமும் காலையில் பஞ்சாங்கம் பார்ப்பது அல்லது படிப்பது மேன்மையைத் தரும்.
17. குலதெய்வ வழிபாடு
சித்திரை முதல் நாளை மிக விசேஷமாகக் கொண்டாட வேண்டும். ஒரு நாளின் துவக்கம் மகிழ்ச்சியாக இருந்தால் அந்த நாள் முழுக்க நன்றாக இருக்கும். ஒரு மாதத்தின் துவக்கம் நன்றாக இருந்தால் அந்த மாதம் முழுக்க நன்றாக இருக்கும். அதைப்போல ஒரு ஆண்டின் முதல் மாதமான, சித்திரை மாதத்தின், முதல் நாள் மகிழ்ச்சியாகவும் தெய்வீகமாகவும் இருந்தால், அந்த ஆண்டு முழுக்க மிகச் சிறப்பான பலனைத் தரும்.தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதியான செவ்வாய்க்கிழமை வீட்டில் விளக்கேற்றுங்கள். உங்கள் இஷ்ட தெய்வத்தை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.புத்தாண்டு நாளில், குலதெய்வ வழிபாடு மிகுந்த முக்கியத்துவம்.
18. அறுசுவையும் உணவில் இணைய வேண்டும்
புத்தாண்டு அன்று வடை பாயசத்தோடு தட புடலாக விருந்து சமைத்தாலும் விசேஷமான வேம்பு மாங்காய் பச்சடி சிறப்பு .மாங்காயின் புளிப்போடு சேர்ந்த துவர்ப்பும், வெல்லத்தின் இனிப்பும், வேப்பம்பூவின் கசப்பும், சுவைக்கு நாம் சேர்க்கும் உப்பும், மிளகாயின் காரமும் சேர்ந்த பச்சடி வாழ்வின் பல சுவைகளை நினைவுறுத்தும் வண்ணமாக அமைகிறது. இதனை உண்ணுவதன் மூலம் வாழ்வின் பலவிதமான நிகழ்ச்சிகளையும் ஒரே மாதிரி ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை புது வருட ஆரம்பத்திலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும், இதோடு உவர்ப்பு சுவையும் சேரும்போது அது அறுசுவையாகி மகிழ்ச்சியளிக்கிறது. வருடத்தின் முதல் நாள் போலவே அனைத்து நாட்களும் அறுசுவை நிரம்ப வேண்டும் என்பதற்காகவே இது கடைப்பிடிக்கப்படுகிறது. நேர்மறை சிந்தனையோடு தமிழ் புத்தாண்டு கொண்டாட, குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும். வீட்டின் தரித்திரம் விலகும். சகல செல்வங்களும் குடிகொள்ளும்.
19. மச்ச அவதாரம்
உயிரினத்தின் தோற்றமானது சித்திரையில் தான் ஆரம்பித்தது என்பது புராணங்களில் இருந்து தெரிகிறது. யுகங்கள் நான்கு. அதிலே முதல் யுகமான க்ருதயுகம், முதல் மாதத்தை வரவேற்பது போல .யுகத்தில் சித்திரையில் பிறந்த யுகத்தை கிருதயுகம் எழுக மாதோ என்று பாரதி அழைக்கிறார். கிருதயுகம் சித்திரை மாதத்தின் வளர்பிறை துவிதியை திதியில் பிறந்தது.
அதைப்போலவே கல்பங்களின் கூர்ம கல்பம், சித்திரை வளர் பிறை பஞ்சமியில் பிறந்தது. நதிகளின் தலைசிறந்த நதியான கங்கை நதி வளர்பிறை சப்தமியில் தான் உலகத்தில் வந்தது. சித்திரை வளர்பிறை திரயோதசியில் தசாவதாரங்களின் முதல் அவதாரமான மச்ச அவதாரம் நடந்தது.சித்திரை தேய்பிறை பஞ்சமியில் ஞாபிரானான வராக அவதாரம் நடைபெற்றது.
20. சித்திரை பிரம்மோற்சவம்
திருவண்ணாமலையில் சித்திரை முதல் நாள் அல்லது சித்ரா பௌர்ணமி அன்று மலை வலம் வருவது மிகவும் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. தேனி மாவட்டத்தில் கூடலூர் மலைப்பகுதியில் மங்களதேவி கண்ணகிக்கு சித்திரை மாத விழா சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். பல மாரியம்மன் கோயில்களில் சித்திரை மாதத்தில் பெருவிழா(பிரமோற்சவம்) மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை விழா, பூச்சொரிதல் விழா 10 நாள் விழாவாக கொண்டாடப்படுவதைக் காணலாம். சித்திரை மாத வளர்பிறை பஞ்சமி அன்று மகாலட்சுமி பூமிக்கு வந்ததாக ஒரு புராண நிகழ்வு உண்டு. எனவே சித்திரை வளர்பிறை பஞ்சமி திதியில் மகாலட்சுமியை கலசத்தில் ஆவாகனம் செய்து மகா லட்சுமி பூஜை செய்வதன் மூலம் வீட்டில் அஷ்ட ஐஸ்வரியங்களும் சிறக்கும். திருவரங்கத்தில் சித்திரை பிரம்மோற்சவம் (ஆதி பிரமோற்சவம்) நடைபெறுவது போலவே, திருச்சியில் மலைக்கோட்டை கோயிலில் உள்ள தாயுமானவர் சுவாமி திருக்கோயில் சித்திரை மாத விழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
21. அவதார புருஷர்கள்
அத்வைத தத்துவத்தை மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்தவர் ஆதிசங்கர பகவத் பாதர். அவருடைய அவதார மாதம் சித்திரை. அதைப் போலவே விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தைப் பரப்பியவர் ஸ்ரீ ராமானுஜர் அவருடைய ஜெயந்தி விழா பல்வேறு ஆலயங்களிலும் சித்திரை திருவாதிரை அன்று கொண்டாடப்படுகிறது. துவைதம் எனப்படும் மாத்வ சம்பிரதாயத்தை நிறுவிய ஸ்ரீ மத்வாச்சாரியாரின் ஜெயந்தி விழாவும் சித்திரையில்தான் வருகிறது. எனவே, சித்திரை மாதம் என்பது பல்வேறு சமய ஆச்சாரியர்களும் அவதரித்த சிறப்பினை உடையது.
22. வசந்த உற்சவம்
தர்மபுரி கல்யாண காமாட்சி அம்மன் என்ற ஒரு அம்மன் கோயில் உண்டு. இந்தக் கோயிலுக்கு என்ன விசேஷம் என்றால் ராமபிரான் ஸ்ரீலங்கா இலங்கைக்கு செல்வதற்கு முன் திருக்கோயிலில் உள்ள அம்பாளை வேண்டிக் கொண்டு சென்றதாக ஒரு வரலாறு உண்டு. சித்திரை மாதத்தில் இங்கு வசந்த நவராத்திரி உற்சவம் மிகச் சிறப்பாக பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் என்பது மும்மூர்த்திகள் இணைந்த கோயில். தாணு என்பது சிவனையும், மால் என்பது திருமாலையும், அயன் என்பது நான் முகனையும் குறிக்கும். இங்கே சித்திரையில் நடக்கும் தேர் திருவிழா மிகவும் அருமையானது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருமணம் ஆன தம்பதிகள் முதலில் சுசீந்திரத்தில் நடக்கும் சித்திரை திருவிழாவைப் பார்க்க வேண்டும் என்கின்ற மரபு உண்டு.
23. சித்திரை முதல் நாள் எந்த கோயிலில் சிறப்பு?
சித்திரை முதல் நாள் (தமிழ் புத்தாண்டு) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள், பஞ்சாங்கம் வாசித்தல் மற்றும் அலங்காரங்கள் நடைபெறும். குறிப்பாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில், பாபநாசம் பாபநாசநாதர் கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் போன்றவை சித்திரை மாத திருவிழாக்களுக்கு மிகவும் பிரபலமானவை. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் மாதத்தில் கோலாகலமாகத் தொடங்கும்.பாபநாசம் பாபநாசநாதர் கோயிலில் சித்திரை முதல் நாளில் அகஸ்தியருக்கு திருமண கோலத்தில் சிவனும் பார்வதியும் காட்சியளிக்கும் விழா நடைபெறும். சென்னை பொன்னேரி அகஸ்தீஸ்வரர் கோயிலில் ஹரிஹர சந்திப்பு உற்சவம் சிறப்பு வாய்ந்தது. அனைத்து முருகன், அம்மன் மற்றும் சிவன் கோயில்களில் காலையில் நடை திறக்கப்பட்டு, கனி காணுதல் மற்றும் சிறப்பு அபிஷே கங்கள் நடத்தப்படும்.
24. நான்கு ராஜ வீதியிலும் உலா வரும் தங்கத்தேர்
புகழ் பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் காமாட்சி அம்பாள் நான்கு கரங்களோடு பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருக்கிறாள். முன் இருகைகளில் கரும்பு வில்லினையும், மலர்க் கணைகளையும், மேல் இருகைகளில் பாசம் மற்றும் அங்குசத்தை ஏந்தி இருக்கிறாள். ஆதிசக்தியாக விளங்கும் காமாட்சியின் இந்த வடிவம் லலிதா சஹஸ்ரநாமத்தில் குறிப்பிட்ட படி உள்ளது.
சித்திரை முதல் நாளன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து காமாட்சி அம்மன் தங்கத்தேரில் வைர ஆபரணங்களுடன் ஜொலிப்பார்.அமாவாசை, பௌர்ணமி, வெள்ளிக்கிழமைகள், மாதப்பிறப்பு, மகா பெரியவர் பிறந்த நாள் போன்ற நாள்களில், கோயிலின் வெளிப் பிரகாரத்தில் மட்டுமே தங்கத்தேர் உலா வரும். ஆனால், சித்திரை முதல் நாளன்று மட்டும், தங்கத்தேர், நான்கு ராஜ வீதியிலும் உலா வரும். சித்திரை மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும், மேலும் ஸ்ரீசக்கரத்திற்கு முதலில் பூஜை செய்யப்படும்.
25. தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா
தஞ்சாவூர் பெருவுடையார் ஆலயம் ஒரு தனித்தன்மை வாய்ந்த கோவில். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய விமானத்தை உடைய கோவிலாக விளங்குகிறது. பெரிய கோயில் என்று அழைக்கப்படுகிறது. கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். இது 6 அடி உயரம் மற்றும் 54 அடி சுற்றளவுடைய ஆவுடையாருடன், 23.5 அடி உயரமுள்ள லிங்கமாகும்.
பெரிய கோவிலில் உள்ள சுவரோவியங்கள், சோழர்களின் கலை நுணுக்கத்தைக் காட்டுகிறது. குறிப்பாக, ராஜராஜ சோழன் காலத்தில் நடத்தப்பட்ட போர்கள் மற்றும் விழாக்கள் பற்றி விளக்கமளிக்கின்றன. இத்துடன், தெய்வீக மற்றும் புராண கதைகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. தஞ்சை பெரிய கோவில் வரலாறு சித்திரங்களிலும் சிற்பங்களிலும் பிரதிபலிக்கின்றது. தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 17, 2026 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 18 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 1, 2026-ல் இடம்பெறும்.
26. தென் மாவட்டங்களில் சித்திரை பிறப்பு
தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படும். தென் மாவட்டங்களில் சில கோயில்களில் விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் வாழ்வில் மேம்படவும், உலகம் செழிப்பு பெற வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தெய்வங் களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படும். விவசாய கருவியான ஏர் கலப்பை மரம், தண்ணீர் இறைக்கும் கூனை உள்ளிட்ட விவசாயக் கருவிகள் பசு மரக்கன்றுகள் வைத்து விவசாயிகளுக்கு மரியாதை நடைபெறும். சில ஆலயங்களில் திருமணம் முடித்த புதுமண தம்பதிகள் பொங்கல் படையலிட்டு வழிபாடு செய்வர். கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அன்னதானம் செய்யப்படும்.
27. தானம் செய்க…
சித்திரை மாதம் முதல் நாளில் ஒவ்வொரு கோயிலிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும்.அன்று கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்க வேண்டும். அம்பாள் அல்லது தாயாரை வணங்க வேண்டும். பிரகாரத்தை கட்டாயம் வலம் வர வேண்டும் .மலைக் கோயிலாக இருந்தால் அந்த மலையை வலம் வரம் வர வேண்டும். சித்திரை மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உடல் குளிர்ச்சி தரும் நீர்மோர், பானகம், தயிர் சாதம் மற்றும் வசதிக்காக குடை, விசிறி, செருப்பு போன்றவற்றைத் தானம் செய்வது சிறந்தது. மேலும், அரிசி, தானியங்கள், பழங்கள், ஆடைகள் ஆகியவற்றை ஏழைகளுக்குத் தானம் செய்வதன் மூலம் அழியாத செல்வம் மற்றும் புண்ணியம் கிடைக்கும்.
28. திருவிளக்கு பூஜை
தென் தமிழகத்தில் குறிப்பாக அம்மன் கோயில்களில் அன்று விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.பெரும்பாலும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும் .அலங்கரிக்கப்பட்ட அம்மனை ஊஞ்சலில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்துவர். மேலும் சுமங்கலி பூஜை, புஷ்பாஞ்சலி, ஊஞ்சல் ஆராட்டு ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும். பங்கேற்கும் பெண்களுக்கு வளையலுடன் வெற்றிலை பாக்கு குங்குமம் பிரசாதம் வழங்கப்படும் . மேலும் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கும். மாலையில் மங்களங்கள் வேண்டி 108 திரு விளக்கு பூஜை விழா சில கோயில்களில் ஏற்பாடு செய்யப்படும். சில ஆலயங்களில் புதிய வருடம் பிறப்பதை ஒட்டி சிறப்பு ஹோமங்களும் லட்சார்ச்சனையும் இடம் பெறும். வீதி உலாவும் அந்தந்த கோயில் வழக்கத்தை ஒட்டி நடைபெறும்.
29. அவிநாசி தேர் உற்சவம்
சித்திரையில் பல கோயில்களில் பிரமோற்சவம் நடைபெறும்.‘‘பேணா தொழிந்தேன் உன்னைஅல்லால் பிற தேவரைக் காணாதொழிந்தேன் காட்டு தியே லி ன்னங் காண்பன் நான், பூணாண் அரவா புக்கொளியூரவி நாசியே, காணாத கண்கள் காட்டவல்லகறைக் கண்டனே” என்று சுந்தர மூர்த்தி நாயனாரால் பாடி, தேவாரப் புகழ்பெற்ற, அவிநாசி கோயிலில் 11 நாட்கள் சித்திரை மாதத்தில் காலையும் மாலையும் பிரம்மோற்சவம் நடைபெறும்.
ஆதியில் பிரம்மதேவன் அவிநாசி அப்பருக்கு இந்த உற்சவத்தை நடத்தி வைத்தான். ஏழாம் நாள் தேதியில் நடக்கக்கூடிய தேரோட்டம் விசேஷமானது. விநாயகர், முருகன், அம்மன், சண்டிகேஸ்வரர் முருகநாதர் ஹரி வரதராஜ பெருமாள் ஆகியோருக்கு தேர் உண்டு. திருவாரூர் தேர், சிதம்பரம் தேர் போல, அவிநாசி தேரும் மிகப்பெரியது.
30. கூத்தாண்டவர் திருவிழா
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரைப் பெருவிழா (திருநங்கைகள் விழா) சிறப்பாக நடைபெறும். புவனகிரிக்கு அருகே கொத்தட்டை என்னும் ஊரிலும் திரு நங்கைகள் திருவிழா, சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும். இந்தத் திருவிழாவில் பங்கெடுப்பதற்காக, இந்தியா மட்டுமின்றி அண்டை நாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் வருவார்கள்.
மகா பாரதபோர் 18 நாட்கள் நடைபெற்றது போல் கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 18 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி கொடியேற்றத்துடன் துவங்கும் திருவிழா தர்மன் பட்டாபிஷேகத்துடன் நிறைவடைகிறது. இப்படிப் பல சிறப்புகளுடன் கூடிய சித்திரை முதல் நாளை நாமும் வரவேற்று மகிழ்வுடன் கொண்டாடுவோம்.
எஸ். கோகுலாச்சாரி
