மரம், செடி, கொடியும் நானே…!

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 117 (பகவத்கீதை உரை)

மனதை எப்போதுமே ஆத்மாவில் லயிக்கச் செய்யும் பயிற்சியை ஒரு யோகி மேற்கொள்கிறான். அதனால் அவன் பூரணனாகிறான். ஏனென்றால், இந்நிலையில் அவன் முற்றிலும் பாபம் நீங்கியவனாகத் திகழ்கிறான். ஆகவே, அவனால் பிரம்மாஞானத்தில் பிறக்கும் பேரானந்தத்தை எளிதாக அடைய முடிகிறது.

யுஞ்ஜன்னேவம் ஸதாத்மானம் யோகீ விகதகல்மஷ்
ஸுகேன ப்ரஹ்மஸம்ஸ்பர்சமத்யந்தம் ஸுகமச்னுதே (6:28)

பிரம்மத்தைத் தொட்டு உணர்வதால் உண்டாகும் பேரானந்தத்திற்கு ஈடு, இணை ஏது? அதுதான் நிரந்தர ஆனந்தம். ஸ்பர்ஸமணி என்ற ஒரு கல் இருந்ததாக அந்தக் காலத்தில் சொல்வார்கள். மிகவும் அபூர்வமான குணம் கொண்ட வித்தியாசமான கல் அது. ஆமாம், அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அது அப்படியே பொன்னாக மாறி விடும்! அதாவது மதிப்புக் குறைந்த ஒரு பொருள், அந்த மணியின் ஸ்பரிசம் பட்ட உடனேயே விலை மதிக்க முடியாத தங்கமாக மாறி விடுகிறது.

இத்தகைய உயர்நிலைக்கு நம் ஆத்மாவை உயர்த்த நாம் ஸ்பர்ஸமணி என்ற பகவானின் அருளுக்காகக் காத்திருக்க வேண்டும். அந்த அன்னியோன்யம்தான் ஆத்மாவை பரிசுத்தமாக்கும். உடற்கூட்டில் உயிர் நிலைத்திருக்க உணவு அவசியம், அதன் அவசியம் அதற்காக மட்டுமே என்பதால் உணவு எடுத்துக் கொள்வதில் மிக அதிகமான ஆர்வம் காட்ட வேண்டியதில்லை, நிறைய சாப்பிட்டால் உடலில் பலம் கூடும், ஆயுளும் அதிகரிக்கும் என்ற பொய்யான நம்பிக்கையில் நாம் உணவின் மீதான ரசனையை அதிகரித்திருக்கிறோம்.

ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த அதிக உணவால் நோய்கள்தான் நம் உடலில் குடி கொள்கின்றன. அவை நம் உடல் நலத்தையும், ஆயுளையும் பாதிக்கின்றன. ‘இன்னும் கொஞ்சம் தர மாட்டாயா?’ என்று கேட்டு நாவும், உடலும் ஏங்கும்போது அவற்றைக் கட்டுப்படுத்தி, உணவின் அளவைக் குறைத்துக் கொள்வதால் அந்தப் புலன்கள் ஒன்றும் கோபித்துக் கொள்ளப் போவதில்லை; தமது பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளாமல் இருக்கப் போவதும் இல்லை! அதாவது உயிர்வாழ உணவு அவசியம்தான்; ஆனால் உணவால் மட்டும்தான் உயிர்வாழ முடியும் என்பது சரியல்ல.

தன் தேவைகள் பூர்த்தியாகி விட்டால், தேடுவதை நிறுத்திவிடுவதாக யாராலும் சூளுரைக்க முடியாது. ஏனென்றால் தேவை என்பது அவ்வப்போது ஏற்படுவது. ஒன்று நிறைவேறினால், இன்னொன்று நிறைவேற்றப்பட காத்திருக்கும். இதற்கு முக்கிய காரணம் தேவைகளைக் குறைத்துக் கொள்ள முடியாத நம் பலவீனம்தான். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்தத் தேவைகள் நமக்காக என்றில்லாமல், பிறர் பார்வைக்காக, பிறர் பொறாமைக்காக, பிறர் ஏக்கத்துக்காக என்று அமைவதுதான்.

வசதியான தேவைக்காக ஒரு கார் போதும். ஆனால் இன்னொரு காரின் தேவை நமக்காகவா? பார்க்கும் பிறர் புருவங்களை உயர்த்துவார்கள் என்ற எதிர்பார்ப்பில்தானே! இதில் இன்னொரு சங்கடம், கூடுதல் கார் வாங்கக் கூடிய ஒருவர், அதை நிறுத்த ஏற்கெனவே சொந்தமாக வைத்திருக்கும் வீட்டினுள் இடம் கிடைக்காமல் தவிப்பதுதான்! உடனே அடிக்கடி பயன்பாட்டுக்குத் தேவையில்லாத அந்தக் காரை தன் வீட்டை விட்டுத் தள்ளி எங்கோ ஒரு சாலையில் அனாதையாக நிறுத்திவிட்டு வர வேண்டியிருக்கிறது!

தன் பார்வைக்கு அப்பால் அவ்வாறு நிற்கும் கார் யாராலும் சேதமாகாமல் இருக்கிறதா, மழை, வெயில், விஷமக்காரர்களின் கீறல் என்று பட்டுப் பாழாகக் கூடாதே என்பதற்காக அதன் மீது போர்த்தியிருக்கும் உறை பாதுகாப்பாக இருக்கிறதா, அவ்வாறு காரை நிறுத்தியிருக்கும் இடத்திற்கு அருகே குடியிருப்பவர்கள், அது தமக்கு அசௌகரியமாக இருக்கிறது என்று புகார் செய்வார்களா… எத்தனை எத்தனை கவலைகள்! இதெல்லாம் வேண்டாத தேவையை உருவாக்கிக் கொள்வதால்தானே!

ஒரு வீடு தீப்பற்றிக் கொண்டு விட்டது. வீட்டுக்காரன் பதறி அடித்துக் கொண்டு, வீட்டிலிருந்து மிகவும் முக்கியமானவையாகத் தான் கருதும் பொருட்களை வெளியே கொண்டுவந்து போட்டான். அக்கம் பக்கத்தவர்களும் வந்து உதவினார்கள். அவனோ புலம்பிக் கொண்டிருந்தான். ‘போச்சு, எல்லாம் போச்சு. என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சு,’ என்று அரற்றினான். ஆனால் அவன் முழுமையாக நின்றிருந்தான். சிறிதாகக்கூட தீக்காயம் எதுவும் இல்லை. ஆனாலும் எல்லாமும் போய்விட்டதாகப் புலம்பல். இப்போது அவனால் எது தேவை, எது தேவையில்லை என்பதை அனுமானிக்க முடியவில்லை.

உதவிக்கு வந்தவர்கள், ‘உள்ளே முக்கியமான பொருள் ஏதாவது சிக்கிக் கொண்டு விட்டதா, அதை எடுத்து வர வேண்டுமா?’ என்று அவனிடம் கேட்டார்கள். அவனுக்கு அத்தனை முக்கியமான பொருள் எது என்று நினைவுக்கு வரவில்லை. ஏனென்றால் அவனைப் பொறுத்தவரை எல்லாமே முக்கியம்தான். பயன்படுத்தாமல் போட்டு வைத்திருப்பானே அவையும் அவனுக்கு முக்கியம்தான்! தீயணைப்புப் படையினர் வந்து தீயை முற்றிலுமாக அணைத்த பிறகு அவன் வீட்டிற்குள் போய் பார்த்தான்.

கருகிப்போய் விட்ட பொருட் களில் பல அவனுக்குத் தேவையில்லாதவை என்ற ஞானோதயம் தோன்றியது! ஆனாலும் அந்த இழப்பின் துக்கத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இனி அந்தப் பொருட்களை வாங்காமல் பணத்தை மிச்சம் பிடிக்கலாமே என்று யோசிக்காமல், அவற்றுக்காக மீண்டும் செலவழிக்க வேண்டுமே என்று விரக்தி கொண்டான்.

தேவை என்பதன் பொருளைச் சரியாகப் புரிந்து கொள்ளாததன் கோளாறு இது! தேவையை முற்றிலுமாகத் தவிர்க்க முடியாதுதான்; ஆனால் அதற்கு ஒரு வரம்பு வைத்துக் கொள்ளலாம். அந்த வரம்பு மீறிய தேவை, தனக்கு அனாவசியம் என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த ‘அனாவசியம்’ பிறரிடம் இருக்கலாம்; அது அவருடைய தேவையாக இருக்கலாம்; ஆனால் அதை எண்ணி ஏங்கினால், நம் தேவை மூட்டையின் கனம் அதிகரித்துவிடும். அது மனதை ஒருநிலைப்படுத்த விடாது. அதனாலேயே பிரம்மத்தைத் தொட்டு உணரும் ஸ்பர்ஸ சுகம் கிட்டாமல் போகலாம்.

பிரம்மத்துக்கு ஓர் உருக் கொடுத்து, அதனை ஸ்பர்ஸித்து ஆனந்தம் அடையலாம் என்ற வசதியை காசியிலுள்ள விஸ்வநாதர் ஆலயத்தில் ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள். அங்கே பூமி மட்டத்திலிருந்து சுமார் இரண்டடி ஆழத்தில் நிறுவப்பட்டிருக்கும் சிவலிங்கத்தைத் தொட்டு, தாம் கொண்டு வந்திருக்கும் கங்கை நீரால் அபிஷேகம் செய்து, மலர்கள் தூவி, வழிபடலாம் என்ற ஏற்பாடு, லௌகீகமான மனதுடைய பக்தர்களுக்கு திருப்தியை உண்டாக்குகிறது. ஆனால் பரப்பிரம்மத்தைத் தொட்டு உணர்வது ஆத்மாவால் மட்டும்தான் முடியும். அதற்கு மனதை நாம் ஆத்மாவில் லயிக்கச் செய்ய வேண்டும்.

‘‘ஒரு பாத்திரத்தை நீர் நிறைந்த ஒரு பக்கெட்டுக்குள் அமிழ்த்தி வைக்கிறோம். அப்போது அந்தப் பாத்திரத்தினுள் நீர் நிறைகிறது, அதன் வெளியேயும் நீர் நிறைந்திருக்கிறது. அதுபோல ஈஸ்வரனிடத்தில் ஆழ்ந்துள்ள ஆத்மாவானது உள்ளும், புறமும் சர்வ வ்யாபகமான சைதன்யத்தைக் காண்கிறது.’’ என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்.  சரி, தனக்குள்ளேயே ஆத்ம சொரூபத்தை உணரும் நிலைக்கு முன்னேறும் ஒரு யோகிக்கு, இந்தப் பக்குவத்துக்குப் பிறகு, உலக காட்சிகள் எப்படித் தெரியும்? அவனுக்கு மட்டும் அவை வித்தியாசமானதாகத் தெரியுமா அல்லது இயல்பாகவே தோன்றுமா?

ஸர்வபூதஸ்தமாத்மானம் ஸர்வபூதானி சாத்மனி
ஈக்ஷதே ய்ஹோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்ஸன (6.29)

யோகத்தில் உறுதி பெற்றவனுடைய நோக்கு எந்த எல்லைக்குச் சென்றாலும் அதுவரை அவனுக்கு, அவன் காணும் காட்சிகள் எல்லாம் ஒரே உணர்வில்தான் அமைந்திருக்கும். அவன் பார்க்கும் எந்த ஜீவனிடத்திலும் அவனால் பாகுபாடு காண முடியாது. எல்லாம் ஒன்றே, இரண்டல்ல, வேறு வேறல்ல. தன்னை எல்லா உயிர்களிடத்திலும், பிற உயிர்கள் அனைத்தும் தன்னிடமும் இருப்பதாக உணர்பவன்தான் யோகி. பூமியில் முளைத்தெழும் புல்லும் சரி, அதைப் படைத்த பிரம்மனும் சரி, ஒரு யோகிக்கு ஒன்றுதான். இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ணன் அதைத்தான் சொல்கிறார். ‘அனைத்து ஜீவராசி களிடமும் ஆத்ம சொரூபமாக என்னை ஒருவன் காண்கிறான் என்றால், என்னை அவன் எளிதாகக் காண்கிறான் என்று அர்த்தம். அதேசமயம் நானும் அவனைக் காண்கிறேன்,’ என்கிறார்.

கண்ணால் காண்பதுதான் மெய் என்ற கொள்கை உடையவனுக்குக் கடவுள் காணக் கிடைக்க மாட்டார். ஏனென்றால், அவனைப் பொறுத்தவரை, அவன் ஊனக் கண்களால் இறைவனைப் பார்க்க முயற்சிக்கிறான்; அவனுடைய அகக் கண் திறக்கவில்லை என்றுதான் அர்த்தமாகிறது. இங்கே ‘பார்த்தல்’ என்பதை ‘உணர்தல்’ என்ற பொருளில் சிந்திக்க வேண்டும். தான் பார்க்கும் அனைத்துமே இறையுரு என்ற சிந்தனை பலப்படுமானால், அவன் கடவுளை உணர்கிறான் என்று அர்த்தம்.

இது எப்படி என்றால், எல்லையற்ற ஆகாயத்தை ஒருசிறு கட்டத்துக்குள் நிறுத்த முயற்சிப்பதுபோல. தன் வீட்டு ஜன்னல் வழியே வானத்தைப் பார்க்கும் ஒருவனுக்கு, அந்த சதுர அல்லது செவ்வக வடிவத்துக்குள் வானத்தைக் கொண்டு வந்து விட்டதாகத் தோன்றும். ஆனால் அதே அவன் வெளியே வந்து பார்த்தானானால்தான் வானத்தின் முழுப் பரிமாணமும் தெரியும். கடற்கரையில் அமர்ந்திருக்கும் ஒருவனுக்கு, வானம் அரைக் கோளமாக வளைந்து அந்தக் கடலின் எதிர் விளிம்புடன் இணைவதுபோலத் தோன்றும். ஆனால் தொட்டுவிடும் தூரத்திலா வானம் இருக்கிறது; அல்லது கடந்துவிடும் எல்லைக்குள்ளாகவா கடல் இருக்கிறது?

நம் வீட்டு ஜன்னல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான ஆகாயக் காட்சியை நமக்குக் காட்டுகின்றன. கிழக்குப் பக்கத்து ஜன்னல் சூரியனைக் காட்டுகிறது. தெற்குப் புறத்தில் சூரியன் இல்லை, ஆனால் வெண் மேகம் தெரிகிறது. வடக்குப் பக்கத்திலும் அப்படியே. மேற்குப் பக்கத்தில் வானம் கொஞ்சம் இருட்டிக் கொண்டு இருக்கிறது… இப்படியாகப் பல பரிமாணங்கள். ஆனால் ஆகாயம் ஒன்றே!

‘கூறியது கூறல்’ என்ற பாணியில் இதுவரை ‘இந்திரியங்களைக் கட்டுப்படுத்து’ என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார் கிருஷ்ணன். பார்வையில் படுவதெல்லாம் காட்சியாகலாமே தவிர, உண்மையாகாது. அதேபோல கேட்பது எல்லாம் ஒலியாகலாமே தவிர, உண்மையாகாது. தான் ஒரு தனிப்பட்ட ஜீவன் என்று யாரும் சொல்லிக் கொள்ள முடியாது. எங்கும் வியாபித்திருக்கும் பரமாத்மாவின் ஓர் அங்கம், அவ்வளவுதான். ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றிலிருந்து கையளவு நீரை முகர்ந்து எடுத்து, இதுதான் ஆறு என்று சொல்ல முடியுமா? அது ஆற்று நீரின் ஒரு பகுதி, அவ்வளவுதான். ஆறு நீண்டும், அகலமாகவும் வியாபித்திருக்கிறது; இரு உள்ளங்கைகளுக்குள் அடங்குவது அல்ல அது.

அதாவது ஒரு யோகி, தன் மனதை இறைவனுடன் ஒருங்கிணைத்தவராகிறான். அனைத்து உயிர்களிடத்திலும் அந்த பரமாத்மா ஆத்மானமாக இருப்பதை உணர்கிறான். ‘மன்னனும் நானே, மக்களும் நானே, மரம் செடி, கொடியும் நானே..’ என்பது இறை சித்தாந்தம்.

ஒரு பக்தர் ஒரு மந்திரத்தைக் கற்றார். ‘பத்மநாபோ அமரப் பிரபு’ என்று சொல்லி பத்மநாப ஸ்வாமியை மனதார வணங்க வேண்டும் என்று யாரோ அவருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவரோ, ‘பத்மநாபோ மரப்பிரபு’ என்று சொல்லியபடியே ஒரு அரச மரத்தை வலம் வந்து கொண்டிருந்தார். காரணம், மரங்களுக்கெல்லாம் தலைவன் பத்மநாப ஸ்வாமி என்று இவர் புரிந்து கொண்டிருக்கிறார்! ஒருசமயம் ஒரு முனிவர் இவர் இவ்வாறு மந்திரத்தைத் தவறாக உச்சரிப்பதைக் கேட்டு, ‘பத்மநபோ அமரப் பிரபு’ என்றுதான் சொல்ல வேண்டும் என்று சொல்லித் திருத்தினார். பக்தரும் தான் அதுவரை தவறாக உச்சரித்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு சரியாகச் சொல்ல ஆரம்பித்தார்.

அன்றிரவு முனிவர் கனவில், பத்மநாப ஸ்வாமி வந்தார். ‘‘நான் வனானி விஷ்ணு என்பதை நீ அறிய மாட்டாயா? மரங்களுக்கெல்லாம் நானே தலைவன். அந்த பக்தியில் என்னை பூஜித்து வந்த பக்தரை மன வருத்தம் கொள்ள வைத்துவிட்டாயே!” என்று கண்டித்தார். மந்திரம் தவறானதாகவே இருந்தாலும், அப்போதும் தூய பக்தியைத்தானே பகவான் எதிர்பார்க்கிறார்!

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்

Related Stories: