ஐந்தாம் பாவம் 11-ஆம் பாவத்தைத் தொடர்பு கொள்ளும் பொழுது வித்தியாசமான ஆசைகள் இருக்கும். 5 என்பது குழந்தை. 11 என்பது ஆசை. குழந்தைக்குரிய ஆசைகள் எல்லாம் இவர்களுக்கும் இருக்கும். குழந்தைகளோடு குழந்தைகளாகப் பழகுவார்கள். நீங்கள் சில பெரியவர்களைப் பார்த்திருக்கலாம். சின்ன குழந்தைகளோடு சகவாசம் வைத்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதைப்போல மிக வயதானவர்கள், இளைஞர்களோடு தோழமை கொண்டிருப்பார்கள்.
இப்படிப்பட்ட விஷயங்களையும் ஐந்தாம் பாவம் சுட்டிக் காட்டுகிறது. அடுத்து ஐந்தாம் பாவம் என்பது இறை நம்பிக்கையைக் குறிக்கிறது. அது எட்டாம் பாவத்தோடு தொடர்பு கொள்கின்ற பொழுது இரண்டு விஷயங்கள் நடக்கலாம். ஆரம்பத்தில் இறை நம்பிக்கையாளர்களாக இருந்து பிற்காலத்தில், இறைநம்பிக்கையில் ஆர்வம் இல்லாதவர் களாக மாறலாம். இறைநம்பிக்கையைக் குறித்த எதிர்வாதம் (நாத்திக வாதம்) செய்யலாம். இன்னொருபுறம், துவக்கத்தில் இறை நம்பிக்கையாளர்களாக இல்லாமல் இருந்து, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், அவர்களை யாரோ ஒருவர் ஆற்றுப்படுத்த ஆன்மிகவாதியாக, கோயில் குளம் என்று சுற்றுபவர்களாகவும் மாறலாம். ஐந்து எட்டுக்கு போகும்பொழுது, ஆன்மிகவாதி நாத்திகவாதியாக மாறுவதும், எட்டு ஐந்துக்கு வரும் பொழுது, நாத்திகவாதி ஆன்மிக வாதியாக மாறுவதும் நடைபெறும்.
பொதுவாக ஐந்தாம் பாவம் என்பது கலை அம்சத்தைக் குறிக்கிறது. கலைஞர்களைக் குறிக்கிறது. சினிமா, நாடகம், இசை போன்ற தொழில்களைக் குறிக்கிறது. விளையாட்டுத் துறை, ஊக வர்த்தகம் போன்ற விஷயங்களைக் குறிக்கிறது முதல் போடாத வணிகத் தையும் குறிக்கிறது.ஐந்தாம் பாவம் வலுபெற்றவர்கள், இதில் ஏதாவது ஒரு துறையில் நிபுணர்களாக இருக்கலாம்.ஐந்தாம் பாவம் வலிமை அடைந்தவர்கள் மிகச்சிறந்த அரசியல்வாதிகளாக இருப்பார்கள் அல்லது குறைந்தபட்சம் அரசு வேலையில் இருப்பார்கள். கடக லக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி குரு ஐந்தாம் இடத்தில் அமர்வு. லக்னாதிபதி பார்க்க, அரசை நடத்துகின்ற ஆற்றல் மிகு அரசியல்வாதியாக திகழ்ந்தார். இது ஜாதகத்தின் கொடுப்பினை. இப்படிப்பட்ட ஜாதகம் முயற்சியைத் தூண்டும். முயற்சி வெற்றியைக் காட்டும்.
மீன லக்கின ஜாதகம். ஐந்தாம் இடத்தில் புதன். அந்த புதனோடு ஆறாம் இடத்து அதிபதி சூரியன். ஆறு என்பது உத்தியோகத்தையும், ஐந்து என்பது பூர்வ புண்ணியத்தையும் காட்டுகிறது. சிம்மத்திற்கு உரிய சூரியன் ஐந்தில் அமர்ந்ததால், இவர் அரசு வேலையில் இருந்தார். மீன லக்னத்தில் இருந்து குரு ஐந்தாம் பார்வையாகப் பார்த்ததால், அரசு வேலை நிரந்தரமாகி ஓய்வு பெற்று ஓய்வூதியம் வாங்கிக் கொண்டிருக்கிறார். இன்னொரு விஷயம். ஆறாம் அதிபதி சூரியன் ஐந்தில் அமர்ந்தது மட்டுமல்ல, மீன லக்கினத்திற்கு 10 ஆம் அதிபதியான குரு லக்னத்தில் ஆட்சி பெற்று ஐந்தாம் பார்வையாக ஐந்தாம் பாவத்தைப் பார்ப்பது இன்னும் சிறப்பு. இன்னொரு நுணுக்கம் பாருங்கள். மீன லக்கினத்திற்கு ஏழாம் அதிபதி புதன் ஐந்தில் அமர்ந்தார். ஏழு என்பது களத்திரம். கணவனாக இருந்தால் மனைவியையும் மனைவியாக இருந்தால் கணவனையும் குறிக்கும்.
மனைவி (7) ஐந்தில் சூரியனோடு அமர்ந்ததால், இவருடைய மனைவியும் அரசு வேலையில் இருந்தார். இங்கே 1 5 7 இணைந்ததால் இவர்கள் காதல் திருமணம் செய்து சௌக்கியமாக வாழ்ந்தார்கள். ஐந்தாம் பாவம் என்பது வெகுளித் தனத்தையும் குறிக்கும். கலகலப்பாகப் பேசுவது, ஜாலியாகப் பேசுவது, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் இருப்பது போன்ற விஷயங்களையும் ஐந்தாம் பாவம் சுட்டிக் காட்டும். ஐந்தாம் இடம் என்பது ஒரு தங்கச் சுரங்கம் போல. அதை சரியாகப் பயன்படுத்தினால், தங்கம் கிடைக்கும். இல்லாவிட்டால் வெறும் மண் தான் கிடைக்கும்.
ஜாதகத்தில் ஐந்தாம் பாவம் சில உறுப்புகளையும் சுட்டிக் காட்டும். உதாரணமாக மேல் வயிறு, இருதயம், பெருங்குடல், முதுகெலும்பு போன்ற உறுப்புகளை ஐந்தாம் பாவம் சுட்டுகிறது. ஐந்தாம் பாவம் கெட்டுவிட்டால், அந்த தசா புத்தி காலங்களில் இந்த உறுப்புகளில் நோய் வருவதற்கான சாத்தியம் உண்டு. கடக லக்கின ஜாதகம். ஐந்தாம் அதிபதி செவ்வாய் நான்காம் பாவத்தில் கேதுவோடு இணைந்திருக்கிறார். ராகுவின் பார்வையில் இருக்கிறார். இங்கே ஐந்தாம் பாவாதிபதி கொஞ்சம் பலவீனமாக இருக்கிறார். நான்காம் பாவம் (Bhavam) என்பது ஆறாம் பாவத்தின் 11 ஆம் பாவமாக அமையும். அதாவது ஆறாம் பாவம் எனும் நோய் பாவத்தின் லாப பாவமாக அமையும் என்பதால் நோயின் வளர்ச்சியைச் சுட்டிக் காட்டுகிறது. ஐந்தாம் பாவத்தின் அதிபதி நாலில் அமர்ந்ததால், ஐந்தாம் பாவத்தைக் குறிப்பிடும் நோய்களான இருதய நோயும் முதுகெலும்பு சம்பந்தப்பட்ட நோயும் வந்து அவஸ்தைப்பட்டார்.
இருதயம் மொத்தமாக பலவீனம் ஆகிவிட்டது. ஒரு வால்வு வேலை செய்யவில்லை.அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை. அதைப்போலவே முதுகெலும்பு பாதிக்கப்பட்டு, உட்கார முடியாமல் படுத்த படுக்கையாகி விட்டார். தொடர் வைத்தியம் பார்த்து, 72 வயதில், புதன் திசை சுயபுத்தி நடக்கும் பொழுது காலமாகிவிட்டார். இவருக்கு புதன் மூன்றாம் இடத்தில் தனக்கு பகையான சந்திரனோடு இருந்தார்.12க்குரிய புதன் மூன்றில் ஆட்சி. 3 என்பது மாரகம். 12 என்பது நீடித்த தீர்க்க முடியாத நோய்.
நாம் ஏற்கனவே மூன்றாம் பாவத்தைப் பார்க்கும்போது கூறியிருக்கிறோம். எட்டாம் பாவத்தை விட எட்டாம் பாவத்துக்கு எட்டாம் பாவமான மூன்றாம் பாவம் கடுமையான பாவம். ஒவ்வொரு பாவத்திலும் நல்ல விஷயங்களும், விருப்பமில்லாத கெட்ட விஷயங்களும் அடங்கித்தான் இருக்கின்றன. அந்த பாவத்தின் அமைப்பைப் பொறுத்துத் தான் நல்லதா கெட்டதா என்பதைத் தீர்மானிக்க முடியும். முன்னோர்கள் சொத்து குறித்து ஐந்தாம் பாவம் தான் தீர்மானிக்கிறது. ஐந்தாம் பாவம் கெட்டுவிட்டால் குலதெய்வ வழிபாட்டில் தடை இருக்கும். உயர் கல்வியில் தடை இருக்கும்.ஆரோக்கியத்தில் முதுகு வலி, வயிற்று வலி போன்ற பிரச்னைகள் இருந்து கொண்டிருக்கும்.
பூர்வ புண்ணிய பாவம் என்பதால், ஐந்தாம் பாவம் கெடக்கூடாது. 5ம் பாவம் கெட்டுவிட்டால் ஒருவன் என்னதான் முயற்சி செய் தாலும் கூட பூர்வ புண்ணிய பலம் இல்லாததால் ஒரு அளவுக்கு மேல் அவரால் உயர முடியாது. ஐந்தாம் பாவம் குழந்தைகளைப் பற்றி சொல்வதால், 5ம் இடம் கெட்டவர்களுக்கு குழந்தை இருக்காது. இருந்தாலும், அந்தக் குழந்தையைப் பற்றிய கவலை மனதில் இருந்து கொண்டே இருக்கும். ஐந்தாம் பாவம் எட்டாம் பாவத்தோடு தொடர்பு கொள்ளும் பொழுது, சில கஷ்டங்களும் இருக்கும். ஆனால் இந்த இரண்டு பாவங்களையும் தனகாரகன், அல்லது ஒரு சுபக்கோள் பார்த்து, லக்னாதிபதி தொடர்பு கொண்டால், அவர்களுக்கு ஷேர் மார்க்கெட், ஸ்பெகுலேஷன், பந்தயங்கள், முதலியவற்றில் பெரும் செல்வம் கிடைத்துவிடும். 8 என்பது எதிர்பாராமல் கிடைக்கக்கூடிய பெரும் பொருளையும், ஐந்து என்பது அதிர்ஷ்டத்தையும் குறிக்கிறது. அதைப் போலவே ஐந்தாம் பாவம் எட்டாம் பாவத்தோடு தொடர்பு கொள்ளும் பொழுது, எட்டாம் பாவத்திற்குரிய சில விஷயங்கள் இல்லாமல் போகாது. உதாரணமாக வழக்குகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். விபத்து, கண்டங்கள் எப்படியும் ஒரு முறையாவது அவர்கள் கடந்துதான் வந்திருக்க வேண்டும். எல்லாம் சேர்ந்ததுதானே வாழ்க்கை.
