காரியங்கள் தேங்காமல் நடைபெற தேங்காய் பரிகாரங்கள்

தெய்வீக காரியங்கள் அனைத்திற்கும் தேங்காய்தான் முன்னிறுத்தப்படுகிறது. தேங்காய் இல்லாத பூஜைகளும் சடங்குகளும் கிடையாது. அதேபோல நாம் அன்றாட சமையலில் தேங்காய் பயன்பாடு இல்லாமல் இருக்கவே இருக்காது தேங்காய் மருத்துவ மகிமை உடையது.

தேங்காயின் இறை தத்துவம்
நம்முடைய ஆன்மா ஆணவம் வன்மம் மாயை ஆகியவைகளிலிருந்து விடுபட்டால் இறைவனடி சேரும் இறைவனுக்கு தேங்காய் படைப்பதும் இத்தத்துவத்தையே குறிக்கிறது. தேங்காயின் பச்சை மேல் மட்டை மாயையும் நார் வன்மத்தையும் ஓடு ஆணவத்தையும் குறிக்கும் இம்மூன்றும் நீக்கப்பட்டவுடன் தேங்காயின் வெள்ளைப்பருப்பு சுத்த ஆன்மாவை குறிக்கும்.

தேங்காயில் பஞ்சபூத சக்திகள்
தேங்காய் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய பஞ்சபூத தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது இது உடைபடும் இடங்களில் பஞ்சபூத சக்திகள் குவிக்கப்படுகிறது. இது சிவனின் மூல சக்தியாக உள்ளது இதில் உள்ள முக்கண்களின் வழியே பஞ்ச பூத சக்திகள் இழுக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது. தேங்காயின் உட்புறத்தில் பஞ்சபூத சுழற்சி சுழன்று கொண்டே இருக்கும். கோவில் விக்ரத்தின் முன் தேங்காய் உடைக்கும் போது அது இறை சக்தியை வெளிக்கொணரும் ஆற்றல் சக்தியாக உள்ளது. இதனால் மூலஸ்தானத்தில் பக்தர்களுக்கு உடனடி இறை ஆற்றல் கிடைக்கிறது. ஒரே இடத்தில் தேங்காய் சிதறுகாய் இடும்போது அங்கே பஞ்சபூத சக்தி சுழன்று கொண்டே இருக்கும்.

தேங்காய் உடைத்தலின் பலன்கள்
தேங்காய் உடைக்கும் போது தேங்காய் சரியாக உடையாமல் இருக்கலாம் அல்லது அழுகி இருக்கலாம் இது போன்ற சில நிகழ்வுகள் நம் மனதை சஞ்சலப்படுத்தும். எனவே தேங்காய் எப்படி உடைத்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம். ஆலயத்தில் உடைக்கும் தேங்காய்க்கு சகுனம் பார்க்கத் தேவையில்லை. சகுனம் பார்ப்பதற்காக உடைக்கப்படும் தேங்காய் அது உடையும் முறையை பொறுத்து நமக்கு பலன்களை தரும்.
*தேங்காய் சரிபாதியாக உடைந்தால் குடும்பத்தில் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி குடும்ப ஒற்றுமை ஏற்படும்
*தேங்காயின் மேல் பகுதி அதாவது கண் பாகம் உள்ள பகுதி பெரிதாகவும் அடிப்பகுதி சிறியதாகவும் உடைந்தால் இல்லத்தில் செல்வம் பெருகும்.
*கண் பகுதி சிறியதாகவும் கீழ்பகுதி பெரியதாகவும் உடைந்தால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைக்குரிய விஷயங்கள் தீர்ந்து இல்லத்தில் அமைதி பெருகும்.
*தேங்காய் உடைக்கும் போது ஒரு சிறிய பாகம் அதனுள் விழுந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் நிச்சயம் உருவாகும்.
*சகுனத்துக்கு உடைக்கும் தேங்காயின் உட்புறம் பூ இருப்பின் நினைத்த காரியம் கண்டிப்பாக நிறைவேறும்
*தேங்காய் நீளவாக்கில் இரண்டாக உடைந்தால் பிரச்சனைகள் உருவாகும்
*தேங்காய் அழுகியிருப்பின் நினைத்த காரியங்கள் சற்று தள்ளிப் போகும்.
சிதறு தேங்காய் உடைக்கும் போது சகுனம் பார்க்க வேண்டியதில்லை.

தேங்காய் பரிகாரங்கள்
*ராகு கேது தோஷம் உடையோர் ஞாயிற்றுக்கிழமையின் பிற்பகலில் திங்கள் கிழமையின் முற்பகலில் முச்சந்தி விநாயகருக்கு வாரந்தோறும் சிதறுகாய் இட்டால் கால சர்ப்ப தோஷம் கூட சரியாகிவிடும்.
*மாந்த்ரீகத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு அந்தியில் தேங்காய் உடைத்து உடன் நுகரச் செய்தால் குணமாகிவிடும் இது சித்தர்கள் முறையாகும்.
*அமாவாசையில் பிறந்த குழந்தைகள் கொஞ்சம் விஷமங்கள் செய்து கெட்ட பெயர் எடுக்கும். அவர்களுக்கு அடிக்கடி தேங்காய் உடைத்து நுகரச் செய்தால் குணம் மாறும்.
*முள்ளம்பன்றி முள், எட்டி மரவேர் போன்ற பொருட்களில் செய்யும் தீய மந்திர வேலைகளுக்கு நல்ல விளைந்த தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்து விட்டால் சுபிட்சம் ஏற்படும். மாலையில் அந்த தேங்காயின் உட்புறம் வியர்த்து பிசுபிசுவென்று இருப்பதை காணலாம்.
*வீட்டில் தினம் ஒரு தேங்காய் உடைத்து பூஜை செய்தால் பிணிகள் நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகும்.
*குழந்தைகளுக்கு தேங்காய் பால் அடிக்கடி கொடுத்தால் உடல் பலமாகும். ஞாபக சக்தி கூடும். நவமி திதியில் பறித்த தேங்காயில் மஞ்சள் தடவி முக்கண்ணில் திலகம் இட்டு வீட்டு வாசல் முன் கட்டி விட்டால் எப்பேர்பட்ட திருஷ்டியும் கழிந்து விடும்.
*வெளிநாடு செல்ல தடை ஏற்பட்டால் ரோகிணி அஸ்தம் திருவோணம் நட்சத்திர நாளில் விநாயகருக்கு சிதறுகாய் இட்டு வழிபட்டால் காரியம் சித்தியாகும்.
*கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 11 மட்டை தேங்காய்களை எடுத்துக்கொண்டு பாபா ஆலயத்திற்கு சென்று அவற்றில் 10 தேங்காய்களை துனி (அணையா நெருப்பு) முன்வைத்து பிரார்த்திக்க வேண்டும் மீதி ஒரு தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் சென்று அதிலிருந்து ஏதேனும் ஒரு இனிப்பு பதார்த்தம் செய்து பாபாவிற்கு நிவேதனம் செய்ய வேண்டும் பிறகு அதிலிருந்து சிறிதளவு பிரசாதமாக உண்டு மீதியை தானம் செய்தால் அந்த நோயின் கடுமை நிச்சயம் குறைந்து விடும்
*ஜாதகம் இல்லாதவர்களுக்கு துன்பங்கள் வந்தால் அதை சரி செய்ய அவர்கள் நல்ல முற்றிய கொப்பரை தேங்காய் ஒன்றினை மட்டையோடு எடுத்துக்கொண்டு அதன் மேலே சீவி அதில் ஒரு ஓட்டை போட வேண்டும் அதனுள் பேரிச்சம்பழம் கரும்புச் சர்க்கரை முந்திரி ஆகிய மூன்றையும் அடைத்து எடுத்துச் சென்று ஒரு அரச மரத்தின் அடியில் புதைத்து விடவும் அதன் பிறகு துன்பங்கள் குறைந்து நன்மைகள் நடக்கும்.
*தொழில் வியாபாரம் விருத்தி அடைய வேண்டுமெனில் திங்கள்கிழமை அன்று காலையில் மஞ்சள் பூசிய தேங்காய் எடுத்துக் கொள்ளவும் வெள்ளி பிள்ளையார் சிலை அல்லது டாலர் எடுத்துக்கொண்டு சிவப்பு நிற துணியில் ஒரு ரூபாய் நாணயம் ஐந்து மஞ்சள் கலந்த பச்சரிசி கைப்பிடி அளவு குங்குமப்பூ போன்றவையும் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வெள்ளை காகிதத்தில் சிவப்பு பேனா மை கொண்டு உங்கள் பெயர் ராசி நட்சத்திரம் மற்றும் உங்கள் நிறுவனத்தின் பெயர் முகவரி எழுதி அதன் கீழ் எனது தொழில் சிறப்பாக நடைபெறுகிறது எனது வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கிறது எனது குடும்பத்தில் அனைவரும் மிக சந்தோசமாக இருக்கிறோம்.
எனது தொழிலில் பணவரவு மிக திருப்தியாக உள்ளது என நேர்மறையான வார்த்தைகளை மட்டும் எழுதி பத்திரிக்கைக்கு மஞ்சள் பூசுவது போன்று நான்கு பக்கத்திலும் மஞ்சள் பூச வேண்டும்.
தேங்காய் வெள்ளி பிள்ளையார் ஒரு ரூபாய் நாணயங்கள் மஞ்சள் கலந்த அரிசி குங்குமப்பூ நேர்மறை வார்த்தைகள் எழுதிய வெள்ளை தாள் இவை அனைத்தையும் சிவப்பு வண்ண துணியில் கட்டி சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து வியாபார நிறுவனத்தில் வாசலின் உள்பகுதியில் கட்டி வைக்கவும் தினமும் தீப தூபம் காட்டி வரவும் இதன் மூலம் வியாபாரம் சிறப்பாக நடக்கும் பண வரவு அதிகமாகும்.

நாம் செய்யக்கூடிய காரியங்கள் தேங்காமல் நடைபெற வழி
வகுக்கக் கூடியது தேங்காய் என்று சொல்வார்கள்.

சாஸ்திரமானது மரத்தின் உச்சியில் விளையும் பொருட்களை கந்தமூலம் என்று குறிப்பிடுகின்றது கந்த மூலம் சத்வ குணத்தை மனிதனுக்கு உருவாக்கும். மரத்தின் உச்சியில் விளையும் கந்தமூலப் பொருளான தேங்காயை மனிதன் உட்கொள்ளும் போது சத்வ குணம் மேலோங்கி இன்பத்துடன் வாழலாம்.

Related Stories: