கடன் எனும் ருண யோகம்

சமஸ்கிருதத்தில் ருணம் என்பது கடனைக் குறிக்கிறது. கடன் என்பது கடமை என்றும் கடந்து செல்வது என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது, கட்டாயம் கடந்து செல்ல வேண்டிய பாதை என்றும் பொருள் கொள்ளலாம். இவ்வாறு, ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு கடன் இந்த புவியில் உள்ளது. ருணம் என்பதில் தேவ ருணம், ரிஷி ருணம், பித்ரு ருணம், களத்திர ருணம், புத்ர ருணம், ெஜன்ம ருணம் என ருணம் என்பது மனித ஆத்மாவிற்கு உள்ளது. சில கடன்கள் சில தூரம் வரை விட்டுச் செல்லும், இன்னும் சில கடன்கள் பல காலம் நம்மை தொடர்ந்து வரும். சில கடன்கள் வாழ்நாள் முழுதும் நம்மிடமே இருக்கும். அதை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆட்படுவோம். இதில் சில ருணங்களை நாம் செய்யாவிடில் புனர்ஜென்ம ருணம் ஏற்படும். இப்பிறவி என்பது பூர்வஜென்ம ருணம் ஆகும். ருணம் என்பதை நாம் ஜாதகத்தின் வாயிலாக கண்டறியலாம். இவையெல்லாம் ருணம் பலவாக இருந்தாலும் பொருளை அடிப்படையாகக் கொண்ட ருணத்தைதான் நாம் கடனாக உணர்கிறோம். அவ்வாறு ருணத்தை அடிப்படையாகக் கொண்ட கடன்களை கடந்து போவதைப் பற்றியும் அறியலாம்.

ருண யோகம் எப்பொழுது எப்படி ஏற்படும்?

ஒருவருடைய ஜாதகத்தில் இரண்டாம்(2ம்), ஆறாம்(6ம்), பத்தாம் (10ம்) அதிபதியின் திசா நடைபெறும் காலங்களிலோ அல்லது அதன் புத்தி நடைபெறும் காலங்களிலோ அல்லது இரண்டாம்(2ம்), ஆறாம்(6ம்), பத்தாம் (10ம்) அதிபதியின் கிரகங்களின் மேல் சனி பயணிக்கும் காலங்களிலும் கடன் வாங்குவதற்கான சூழ்நிலை உருவாகும் என்பது ஜோதிடத்தின் விதியாகும். இதை வீட்டிற்காகவோ, மருத்துவத்திற்காகவோ, தொழிலிற்காகவோ வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். இந்த பாவகங்கள்தான் இரண்டாம்(2ம்), ஆறாம்(6ம்), பத்தாம் (10ம்) பாவகங்களுடன் தொடர்பு பெறுகின்றன என்பது ஜோதிடத்தின் சாரம்சம் ஆகும்.

ருண யோகத்தின் சூட்சமங்கள் என்ன?

ஆறாம் பாவதியையும் (6ம்), பதினொராம் பாவதிபதியையும் (11ம்) வியாழன் பார்வை செய்தால் கடனை அடைப்பதற்கான வழியை அறிந்திருப்பர். கடனிற்காக அஞ்சுபவர்கள் ஆறாம் அதிபதி சந்திரனை பார்வை செய்தோ அல்லது சந்திரன் ஆறாம் அதிபதியின் சாரத்திலோ இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆறாம் அதிபதி பன்னிரண்டாம் (12ம்) பாவகத்தோடு அல்லது எட்டாம் பாவகத்தோடு தொடர்புகொண்டிருந்தால் கடன் வாங்கி மறைந்து வாழக்கூடிய சூழ்நிலை அல்லது வெளியூர் / வெளிநாடு போக வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். ராமாயணத்தில் ஒரு வார்த்தை உண்டு. ராவணன் எவ்வாறு கலங்கினான் என்பதற்கு ‘கடன்பட்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ அவன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்திருப்பான் என்பதற்கு சொல்லப்பட்ட வார்த்தை ஆகும்.

யாரெல்லாம் கடன் வாங்கலாம்? யாரெல்லாம் கையெழுத்து போடலாம்?

*ஆறாம் அதிபதி (6ம்) மூன்றாம் பாவகத்தில் (3ம்) இருந்தால் அல்லது மூன்றாம் பாவகத்தோடு தொடர்பு கொண்டிருந்தால் வேறு ஒருவரின் கடனிற்காக கையெழுத்திடும் பொழுது யோசித்து செய்ய வேண்டும். அச்சமயம் மூன்றாம் பாவகத்தில் ‘சனி’ இருப்பின் எச்சரிக்கை அவசியம்.
*ஆறாம் அதிபதி (6ம்) நான்காம் பாவகத்தில் (4ம்) இருந்தால் கடன் வாங்கி வீடு அல்லது வாகனம் வாங்கலாம். அதற்கான சூழ்நிலைகள் உருவாகும் எளிதாக.
*ஆறாம் அதிபதி (6ம்) பதினோராம் பாவகத்தோடு தொடர்பில் இருந்தால் எச்சரிக்கை அவசியம். கடன் வாங்கி முதலீடு செய்யலாம். அவ்விடத்தில், சாயா கிரகங்களான ராகு-கேது இருந்தால் கவனம் தேவை.
*கடன் வாங்கி ஷேர் மார்க்கெட் முதலீடு ஆபத்தை விளைவிக்கும். எச்சரிக்கை தேவை.
*பதினோராம் பாவகம் (11ம்) வலிமை பெற்றவர்களும், பதினோராம் பாவகத்தின் அதிபதி வலிமை பெற்றவர்களும், நான்காம் அதிபதி வலிமை பெற்றவர்களும் நான்காம் பாவகம் வலிமை பெற்றவர்களும் மட்டுமே கடனை கட்டுவதற்கான தகுதி உடையவர்கள் சீராக கடன் தொய்வு இல்லாமல் கட்டி முடிப்பார்கள் என்பது ஜோதிடத்தின் தலையாய விதி.

கடனை எளிதாக அடைக்க என்ன செய்யலாம்?

இதில், பொதுவாக கடனை அடைப்பதற்கான வழிமுறைகள்தான். ஆனாலும், ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் ஜாதகமும் கடனை அடைப்பதற்கான அல்லது கடனை தீர்ப்பதற்கான வழிமுறைகளைச் சொல்லும் என்பது ஜோதிடத்தின் சூட்சுமம்.
*ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைதோறும் மதியம் செவ்வாய் ஹோரையில் குளிகன் காலத்தில் கடனிற்கான ஒரு தொகையை கொடுப்பார்கள் எனில் எளிதாக கடன் அடைவதற்கான வழிகள் உண்டாகும்.
*பௌர்ணமிதோறும் சந்திரனை வெல்லம் கலந்து பால் வைத்து வழிபடுதல், கடன் அடைவதற்கான வழிகள் உண்டாகும்.
*அடுத்தவர்களின் சாபத்தை பெற்றவர்கள் வேறு ஒரு கடனை வாங்கிக் கொள்கிறார்கள் என்றுதான் பொருள். ஆகவே, நேர்மையாக கடனை அடைக்க முற்படுங்கள். சுக்கிர திசாவில் கடன் வாங்குவதை குறைத்துக்கொள்வது நலம் பயக்கும். ஏனெனில், அந்த கடன் விரயச் செலவிற்கு போவதற்கான வாய்ப்புகள் உண்டு.
*வீட்டில் வேலை செய்பவர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள். நாய்கள் மற்றும் பறவைகளுக்கு உணவு அளியுங்கள். கடன் அடைபடுவதற்கான வாய்ப்புகள் எளிதாக உருவாகும்.
*நீர்வீழ்ச்சியில் நீர் எடுத்து வந்து அருகில் உள்ள பைரவர் கோயிலுக்கு கொடுத்து அபிஷேகம் அர்ச்சனை செய்யுங்கள். ருண தோஷம் இருந்தால் விலகும்.

Related Stories: