அங்கிச நாதன் என்பவர் யார்?
27 நட்சத்திரங்களை 9 கிரகங்கள் தங்களுக்குள் பங்கிட்டு கொண்டு இயங்குவதை அங்கிசம் என்று சொல்கிறோம் பங்கிட்டு கொண்ட நட்சத்திரங்களை ஆள்பவர்களை அங்கிசநாதன் என்கிறோம். இதில் அங்கிசநாதன் துணை அங்கிசநாதன் என்று இரண்டு பிரிவுகள் உள்ளது அங்கிசநாதன் என்பது 9 கிரகங்களை உள்ளடக்கியது. துணை அங்கிசநாதன் என்பது ராகு கேது தவிர்த்து 7 கிரகங்களை உள்ளடக்கியது. துணை அங்கிசன் நாதனில் ராகு – கேது வருவதில்லை.
அங்கிசநாதன் – துணை அங்கிசநாதன் கண்டறிவது எப்படி?
முதலில் 27 நட்சத்திரங்களையும் நட்சத்திர வரிசைப்படி அஸ்வினி முதல் ரேவதி வரை மூன்று மூன்று நட்சத்திரங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும் உதாரணத்திற்கு அஸ்வினி பரணி கிருத்திகை முதல் பிரிவாகவும் அடுத்து ரோகிணி மிருகசீரிஷம் திருவாதிரை இரண்டாவது பிரிவு என வரிசையாக பிரித்துக் கொள்ள வேண்டும் இவ்வாறு பிரிக்கும்போது 9 பிரிவுகளாக வரும். பிறகு, இந்த 9 பிரிவுகளுக்கும் 9 கிரகங்களையும் கிழமை வரிசைப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் அதாவது சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்ற வரிசையில் வரும் இந்த வரிசைப் படி பார்க்கும்போது அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரங்களுக்கு சூரியன் அங்கிசநாதனாக வரும். ரோகினி மிருகசீரிஷம் திருவாதிரை நட்சத்திரங்களுக்கு சந்திரன் அங்கிச நாதனாக வரும். இவ்வாறு 27 நட்சத்திரங்களையும் 9 பிரிவுகளாக பிரித்து 9 கிரகங்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும். இதுவே அங்கிச நாதர்களை கண்டறியும் முறையாகும். துணை அங்கிசநாதன் என்பது ஒரு கிரகம் நவாம்சத்தில் எந்த ராசியில் இருக்கிறதோ அந்த ராசி அதிபதியே துணை அங்கிச நாதன் எனப்படும்.
உதாரணத்திற்கு சிம்மத்தில் சுக்கிரன் மகம் 1 ஆம் பாதத்தில் இருப்பதாக வைத்துக் கொள்வோம் மகம் பூரம் உத்திரம் இந்த 3 நட்சத்திரங்களுக்கும் அங்கிச நாதனாக புதன் வருவார். மகம் 1 ஆம் பாதம் என்றால் நவாம்சத்தில் மேஷத்தில் வரும் மேஷம் என்றால் அதன் அதிபதி செவ்வாய் துணை அங்கிச நாதனாக வருவார். ஆக, சிம்மத்தில் மகம் 1 ஆம் பாதத்தில் நிற்கும் சுக்கிரனுக்கு அங்கிச நாதனாக புதனும், துணை அங்கிச நாதனாக செவ்வாயும் வருவார்கள். இதுவே 9 கிரகங்களுக்கும் அங்கிச நாதன் துணை, அங்கிச நாதன் கணிக்கும் முறையாகும்.
அங்கிசநாதன் – துணை அங்கிசநாதன் செயல்படும் முறை
ஒரு கிரகம் திசை நடத்துகிறது என்றால் தசாநாதனுக்கு அங்கிச நாதனாக வரும் கிரகம் சுய ஜாதகத்தில் லக்னத்திற்கு நல்ல நிலையில் இருக்க வேண்டும். அதாவது 3, 6, 8, 12 போன்ற மறைவு ஸ்தானங்களில் இருக்கக் கூடாது. முக்கியமாக 8ல் அமராமல் இருப்பது சிறப்பு. அதைப்போல் தசாநாதனுக்கு அங்கிசநாதன் மறைவு ஸ்தானங்களில் அமராமல் இருப்பது நல்லது. தசாநாதனும், அங்கிச நாதனும் 6, 8 சஷ்டாஷ்டக நிலையில் அமரக்கூடாது. தசாநாதனுக்கு அங்கிசநாதன் பகையாக இல்லாமல் நட்பாக இருக்க வேண்டும்.
அதேபோல் தசாநாதனுக்கு அங்கிச நாதனாக வரும் கிரகம் நீசம் அடையக் கூடாது. தசாநாதனுக்கு அங்கிச நாதன் கேந்திர, திரிகோணங்களில் இருப்பது நல்லது. அதேபோல் அங்கிச நாதனாக வரும் கிரகம் இந்து லக்னம், புஷ்கரா பாகை, ஷட் பலம் என்ற ரீதியில் பலம் பெற்று இருப்பது சிறப்பான அமைப்பாகும். அங்கிச நாதனாக வரும் கிரகம் லக்ன யோகாதிபதியாக இருந்து சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பது சிறப்பாகும். அதேபோல் அங்கிச நாதனாக வரும் கிரகம் லக்ன பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதியாக வராமல் இருக்க வேண்டும்.
மேற் சொன்ன நிலையில் துணை அங்கிசநாதன் மற்றும் புத்தி நாதனுக்கும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இது மூன்று நிலைகளில் செயல்படுகிறது அதாவது ஸ்தூல நிலை. சூட்சும நிலை. அதிசூட்சும நிலை என்ற நிலையில் செயல்படும். தசாநாதன் ஸ்தூல நிலையிலும் அங்கிசநாதன் சூட்சும நிலையிலும், துணை அங்கிச நாதன் அதி சூட்சம நிலையிலும் செயல்படுகிறது. அங்கிசநாதன் மற்றும் துணை அங்கிச நாதர்களை சுய ஜாதகத்தில் கிரகங்கள் நின்ற ஆதிபத்திய ரீதியாக கணக்கில் கொண்டுதான் தசா புத்திக்கு பலன் கணிக்க வேண்டும்.
27 நட்சத்திரங்களுக்குரிய அங்கிசநாதன் விவரம்.
அஸ்வினி பரணி கார்த்திகை – சூரியன்.
ரோகிணி மிருகசீரிஷம் திருவாதிரை – சந்திரன்.
புனர்பூசம் பூசம் ஆயில்யம் – செவ்வாய்.
மகம் பூரம் உத்திரம் – புதன்
ஹஸ்தம் சித்திரை சுவாதி – குரு
விசாகம் அனுஷம் கேட்டை – சுக்கிரன்
மூலம் பூராடம் உத்திராடம் – சனி
திருவோணம் அவிட்டம் சதயம் – ராகு.
பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி – கேது.
உங்களது நட்சத்திரத்திற்கு யார் அங்கிச நாதனாக வருகிறாரோ அவரை வழிபட்டால் வாழ்வு சிறக்கும். உதாரணத்திற்கு அஸ்வினி, பரணி, கார்த்திகை நட்சத்திரங்களுக்கு அங்கிசநாதனாக சூரியன் வருவார். எனவே, இவர்கள் சூரிய வழிபாடு சிவ வழிபாடு செய்தால் வாழ்க்கை வளம் பெறும்.
சந்திரன் அங்கிச நாதனாக வந்தால் அம்பிகை வழிபாடு சிறப்பைத் தரும்.
செவ்வாய் அங்கிச நாதனாக வந்தால் முருகன் வழிபாடு நலம் தரும்.
புதன் அங்கிச நாதனாக வந்தால் விஷ்ணு வழிபாடு யோகம் தரும்.
குரு அங்கிச நாதனாக வந்தால் பிரம்மா வழிபாடு ஞானம் தரும்.
சுக்கிரன் அங்கிச நாதனாக வந்தால் மகாலட்சுமி வழிபாடு சகல சம்பத்துகளை தரும்.
சனி அங்கிச நாதனாக வந்தால் கால பைரவர் வழிபாடு காரிய வெற்றி தரும்.
ராகு அங்கிச நாதனாக வந்தால் துர்க்கை வழிபாடு வலிமை தரும்.
கேது அங்கிச நாதனாக வந்தால் விநாயகர் வழிபாடு விக்னங்களை வேரறுக்கும்.
