தொடங்கிய காரியத்தை ஜெயமாக்குவார் கல்யாண ஆஞ்சநேயர்!

ராத்திரி சத்திரம் இடம் உருவான விதம்

ஈரோடு மாவட்டத்தில், “ராத்திரி சத்திரம்’’ என்னும் பெயரில் சத்திரம் ஒன்று உள்ளது. ராத்திரி சத்திரம் என்று பெயர் வருவதற்கு முன்பே, மகான் ஸ்ரீ வியாசராஜர், இந்த இடத்தில் அனுமனை பிரதிஷ்டை செய்திருகிறார். அனுமனை காண பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தரவே.. இதே ஈரோட்டில், ஜவுளி தொழில் செய்து வந்த ஜவுளி சுப்பய்யா என்பவர், பக்தர்களின் வருகையை கவனித்து, அவர்களுக்காக தகரத்தால் ஆன சத்திரத்தை கட்டினார். இந்த சத்திரம் பக்தர்களுக்கு வசதியாக அமைந்தது. அனுமன் ஜெயந்தி போன்ற விழாக்களும் சத்திரத்தில் விமர்சையாக நடைபெற்றன. மேலும், பல இடங்களிக்கு பயணம் செய்யும் பக்தர்களும், வழிப்போக்கர்களும் இரவு நேரத்தில் இந்த சத்திரத்தில் தங்கியிருந்து, மறுநாள் காலையில் அனுமனை தரிசித்து, உணவருந்திவிட்டு மீண்டும் தங்களின் பயணத்தை தொடங்குவார்கள். இதனால், “ராத்திரி சத்திரம்’’ என பக்தர்களால் அழைக்கப்பட்டது. அதுவே நிலைத்தும்விட்டது. இன்றும்கூட, தொலைதூரம் பயணிப்பவர்கள், இரவு நேரம் வந்துவிட்டால், ராத்திரி சத்திரத்தில் தங்கி, உணவருந்தி, மறுநாள் காலையில் தங்களின் பயணத்தை தொடர்கிறார்கள். இந்த ராத்திரி சத்திரத்தை பற்றிய மேலும் பல சுவாரஸ்ய தகவலை நம்மோடு பகிர்ந்துக்கொண்டார் நிர்வாகியான வேதவியாசன். வயது மூப்பு காரணமாக மெல்லிய குரலில் பேசத்தொடங்கினார், வேதவியாசன். இருந்த போதிலும், அவரின் முகத்தில் ஆர்வமும், மகிழ்ச்சியும் தெரிந்தது.

பெஜாவர் நிர்வகித்தல்

“நான் படித்தது, வேலை பார்த்தது எல்லாமே கர்நாடகாவில்தான். மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தரின் வழிவந்த, ஸ்ரீ வித்யாபிரசன்ன தீர்த்தர்தான் எனது ஆன்மிக குரு ஆவார். இவரை பற்றி இத்தருணத்தில் சொல்லியே ஆக வேண்டும். ஸ்ரீ வித்யாபிரசன்ன தீர்த்தர், பூர்வாஸ்ரமத்தில் மிகப் பெரிய வழக்கறிஞர். ஆங்கிலத்தில் புலமை பெற்றவர். என்னை போன்றவர்களுக்கு கல்வி அறிவையும், வேத அறிவையும் போதித்தவர். சுமார் 1000 பாடலுக்கு மேல் இயற்றியுள்ளார். இது ஒரு புறமிருக்க… ராத்திரி சத்திரத்தை கட்டிக்கொடுத்த ஜவுளி சுப்பய்யா மறைந்துவிடுகிறார். அதுவரை சத்திரத்தை நிர்வகித்த ஜவுளி சுப்பய்யா, அவருக்கு பின் அவரின் வாரிசான வெங்கட்ரமணா நிர்வகிக்கிறார். சில ஆண்டுகள் கழித்து, வெங்கட்ரமணாவால் நிர்வாகத்தை சரிவர கவனிக்க முடியாமல் போக, டிரஸ்ட் ஒன்றை அமைத்து அதன் கட்டுப்பாட்டில் ராத்திரி சத்திரத்தை ஒப்படைக்கிறார். அதன் பின்னர், அவர்களாலும் கவனிக்க முடியாமல் போக, அப்போதைய உடுப்பு பெஜாவர் மடாதிபதியான ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்தரிடத்தில் சத்திரம் ஒப்படைக்கப்பட்டது. நிர்வகிக்க முடியாமல் இருக்கும் கோயில்களை நன்கு நிர்வகித்து அதனை காப்பதே எனது கொள்கையாக வைத்துள்ளேன். இதனை அறிந்த ஸ்வாமிகள், என்னை அழைத்து ஈரோட்டில் உள்ள ராத்திரி சத்திரத்தை இனி நீதான் நிர்வாகம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் பின்னர், ராத்திரி சத்திரத்தை நான்தான் நிர்வகித்து வருகிறேன். சுமார் 107 ஆண்டுகள் பழமையானது இந்த ராத்திரி சத்திரம்! மேலும், இந்த ராத்திரி சத்திரத்தில் சுமார் 500 திருமணங்களுக்கு மேல் நடைபெற்றிருக்கிறது. இன்றும்கூட பல சுப நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும், ராத்திரி சத்திரத்தில், “அதொக்ஷிதா’’ என்னும் பெயரில் தனியாக ஒரு இடம் உள்ளது. இங்கு காலை மாலை என இரு வேளையில் யோகா, கீபோர்ட், பாடல், கன்னட, சமஸ்கிருதம், இந்தி, போன்ற வகுப்புகளும் எடுக்கப்படுகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்.

239 ஸ்ரீ நிவாஸ திருக்கல்யாணம்

மிக முக்கியமாக, 2011 – ஆம் ஆண்டில், கும்பகோணத்தில் இருந்து “ஸ்ரீ நிவாஸ பத்மாவதி’’ சகிதமாக ஒரு விக்ரகத்தை ராத்திரி சத்திரம் சார்பாக வாங்கினோம். அந்த விக்ரகத்தைக் கொண்டு, பல இடங்களில் “ஸ்ரீ நிவாஸ கல்யாணத்தை’’ செய்து வருகின்றோம். குறிப்பாக, திருப்பதி, உடுப்பி, ஹரித்வார், பத்ரி போன்ற க்ஷேத்திரங்களில்கூட நாங்கள் ஸ்ரீ நிவாஸ கல்யாணத்தை செய்து வைத்திருக்கிறோம். இந்த திருக்கல்யாணம் நடைபெற இரண்டு முக்கியமானது. ஒன்று “வியாச சாகித்யா’’. இன்னொன்று “தாஸ சாகித்யா’’. அதாவது வியாச சாகித்யா என்பது வேத பாராயணம் ஆகும். வேத பாராயணம் இல்லாது திருமணமா? ஆகையால், வேத பாராயணம் மிகமிக முக்கியமானவை. அதே போல், தாஸ சாகித்யா என்பது புரந்தரதாசர், கனகதாசர், போன்ற மகான்கள் இயற்றிய பாடல்கள் ஆகும். ஒரு திருமணத்திற்கு பாடலும் அவசியம் தானே! ஆக, ஸ்ரீ நிவாஸ திருக்கல்யாணம் செய்விப்பதற்கு இது இரண்டும் அவசியம். எங்கு ஸ்ரீ நிவாஸ கல்யானம் நடைபெற்றாலும், அங்கு எங்களுக்கென்று ஒரு தனி குழுவே இருக்கிறது. அவர்களை அழைத்துக்கொண்டுதான் பல இடங்களுக்கு செல்வோம்.திருக்கல்யாணம் நடத்தி வைப்பதற்காக, தமிழகத்தின் பிரபல அக்னி ஹோத்திரி தாமோதர ஆச்சார், வேத மந்திரங்கள் முழங்க மிக சிறப்பாக நடத்தி வைப்பார். கன்னட மொழிகளிலும், தமிழ் மொழிகளிலும் பல தாஸர்களின் பாடல்கள், சுமார் 25 நபர்களால் பாடப்பெறும். திருமணம் தள்ளிப்போகும் நபர்கள் இந்த ஸ்ரீ நிவாஸ கல்யாணத்தை நடத்தி வைத்தால், திருமணம் கைக்கூடி வரும். இக்கல்யாணத்தை செய்தவர்களின் அனுபவம் அது! இதுவரை சுமார், 239 ஸ்ரீ நிவாஸ திருக்கல்யாணத்தை நடத்தி இருக்கிறோம். மேலும், இதில் வருகின்ற வருமானத்தை வைத்துக்கொண்டு, நாங்கள் ராத்திரி சத்திரத்தை நிர்வகிக்க ஏய்துவாக இருக்கிறது.

வருடத்திற்கு ஒரு திருமணம்

அதே போல், ராத்திரி சத்திரத்தின் மூலமாக, வருடத்திற்கு ஒரு முறை ஏழை பெண்ணிற்கு திருமணத்தை செய்து வைக்கிறோம். சீர்வரிசை முதல் திருமாங்கல்யம் வரை அனைத்து செலவுகளையும் நாங்களே ஏற்று நடத்தி வைக்கிறோம். தேவைப்பட்டால், ராத்திரி சத்திரத்திலேயே திருமணத்தையும் நடத்தி வைக்கிறோம். மேலும், பித்ரு தோஷம் எதனால் வருகிறது? இறந்த பெற்றோர்களுக்கு சரிவர கர்ம அனுஷ்டானங்களை செய்யாமல் இருந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு பித்ரு தோஷம் ஏற்படுகிறது. ஆகையால், இதனை தடுக்கும் வகையில் நிச்சயமாக அனைவரும் திவசம் செய்தே ஆகவேண்டும். இதை கருத்தில் கொண்டு, ராத்திரி சத்திரத்தில், ஸ்ராத்தத்திற்கு (திவசம்) முதலில் முக்கியத்துவம் தருகிறோம். ஆகையால் ராத்திரி சத்திரத்தில், திவசம் செய்ய தனியாக இடம் உள்ளது. அங்கு செய்துகொள்ளலாம். இதற்கென்று தனியாக அர்ச்சகர், சமையல் ஆகிய வசதிகளும் செய்துக் கொடுக்கப்படுகின்றன.

48 நாட்கள் தேனாபிஷேகம்

இதுவரை ராத்திரி சத்திரத்தை பற்றி பார்த்தோம். இனி.. ராத்திரி சத்திரத்தில் உள்ள அனுமனை பற்றி சொல்கிறேன். ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரையில், இரண்டு அனுமனை வியாசராஜர் பிரதிஷ்டை செய்திருக்கிறார். ஒன்று ஈரோடு மணிக்கூண்டு இடத்திலும், இன்னொன்று, ராத்திரி சத்திரம் என்று சொல்லக்கூடிய இந்த இடத்திலும், அனுமன் பிரதிஷ்டை ஆகியிருக்கிறார். மற்றும் ஒரு அனுமன் ஈரோட்டில் இருந்து சற்று தள்ளி பெருந்துறையில் உள்ளது. ஆக, ஈரோட்டில் இரண்டு அனுமன்தான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்திருக்கிறார். மணிக்கூண்டில் உள்ள அனுமனும், ராத்திரி சத்திரத்தில் இருக்கும் அனுமனும் ஒரே நேரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக செவிவழிச் செய்தி ஒன்றும் உலா வருகிறது.இங்குள்ள அனுமனின் பெயர் “முக்ய பிராணர்’’ என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு, “கல்யாண ஆஞ்சநேயர்’’ என்னும் இன்னொரு பெயரும் உண்டு. கல்யாணம் என்னும் சொல், திருமணத்தை குறிக்கும் சொல்லாக இருந்தாலும், “நல்ல காரியம்’’ அல்லது “நன்மைகளை தரக்கூடிய காரியம்’’ என்னும் பொருளும் கல்யாணத்திற்கு உண்டு. ஆக, இங்குள்ள கல்யாண ஆஞ்சநேய ஸ்வாமி நன்மைகளை வாரி வழங்குகிறார். பலரும் திருமணத்திற்காக அனுமனை வேண்டுகிறார்கள். திருமணமும் நல்லபடியாக நடைபெறுகிறது. அதே போல் ராத்திரி சத்திரத்தில், பஞ்சமுகி ஆஞ்சநேயரின் விக்ரகம் ஒன்றும் உள்ளது. அந்த விக்ரகத்திற்கு “ஹரி வாயு ஸ்துதி’’ என்று சொல்லப்படுகின்ற மந்திரத்தை சொல்லி, தூய்மையான தேனினால் (48 நாட்கள், 36 நாட்கள் அல்லது அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாட்கள்) அபிஷேகம் செய்து வந்தால், வேண்டியது கைகூடும் என்பது ஐதீகம். இந்த அபிஷேகம் தினமும் நடைபெற்று வருகிறது.

பண்டரிபுரத்தில் இருந்து கொண்டுவந்த பாண்டுரங்கன்

கல்யாண ஆஞ்சநேயரை தவிர, ராத்திரி சத்திரத்தில் 2015-ஆம் ஆண்டு, ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். பவானியில் லட்சுமி நரசிம்மர் அருள்பாலிக்கிறார். அவரை தவிர, ஈரோட்டில் இங்குதான் நரசிம்மர் அருள்கிறார். ஆக, இரண்டு நரசிம்மர் மட்டுமே! இன்னொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால், எங்கெல்லாம் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன் இருக்கிறாரோ.. அங்கெல்லாம் மகான் ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமிகளின் மிருத்திகை பிருந்தாவனமும் பெரும்பாலும் இருக்கும். அதே போல், இங்கும் ராகவேந்திரரின் மிருத்திகா பிருந்தாவனம் உள்ளது. பின்னர், 2018-ஆம் ஆண்டில், பண்டரிபுரத்தில் இருந்து கொண்டுவந்த பாண்டுரங்கன் பிரதிஷ்டை செய்யப்பட்டார். இவை அனைத்தும் பெஜவார் ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்தரின் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும் 2020-ஆம் ஆண்டில், பிராகாரத்தில் சிவன், விநாயகர், முருகன், நவகிரகம் ஆகிய சந்நதிகளை அமைத்தோம். மத்வ சம்ரதாயத்தின்படி, சிவனும், அனுமனும் வித்யை அதாவது கல்வி, அறிவு ஆகியவற்றுக்கு உரியவர்கள் ஆவர். அதே போல், இங்கு ஹயக்ரீவரும் உள்ளார். தேர்வு சமயங்களில் சிறப்பு ஹோமம் செய்து, பள்ளி மாணாக்கர்களை அழைத்து, எழுதும் பேனா மற்றும் பிரசாதம் ஆகியவைகளை தருகிறோம். தவிர, “கல்யாண ஆஞ்சநேய சேவா கமிட்டியின்’’ மூலமாக, பிரதி தமிழ் மாதத்தில் வரக்கூடிய முதல் ஞாயிறு அன்று, அனுமன், நரசிம்மர், சிவன், ராகவேந்திரரின் பிருந்தாவனம் என அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

விழா

நரசிம்ம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, ராகவேந்திரர் ஜெயந்தி / ஆராதனை ஆகியவை சிறப்பாக ராத்திரி சத்திரத்தில் நடைபெறும். மேலும், சுவாதி நட்சத்திரம் அன்று பானக்கம் பூஜை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை தோறும், லட்சுமி அஷ்டோத்திரம் சொல்லப்படுகின்றன. அதே போல், ஏகாதசி தினத்தன்று மாலை பாண்டுரங்கன் சந்நதியில் பஜனை நடைபெறும்.

*கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை: 7:00 முதல் 1.00 வரை, மாலை: 5.30 மணி முதல் 8.00 வரை தொடர்புக்கு: 9884256395 – 8903120148.
*எப்படி செல்வது: ஈரோடு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து, பார்க் என்னும் நிறுத்தத்திற்கு பேருந்துகள் செல்கிறது. அதில் பயணித்து பார்க் நிறுத்தத்தில் இறங்கி, “ராத்திரி சத்திரம்’’ எங்குள்ளது என்று யாரை வழிகேட்டாலும் சொல்வார்கள். நடக்கும் தூரத்தில்தான் உள்ளது.

Related Stories: