அதிக வேட்பாளர்கள் உள்ளதால் ஆலந்தூர் தொகுதிக்கு கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு: மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

காஞ்சிபுரம் ஏப். 13: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், பெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்க கூடிய தாள் இயந்திரம் ஆகியவை வழங்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் சினேகா தலைமையில் காஞ்சிபுரம் செவிலிமேடு கிராமத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் தேசிய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கடந்த மாதம் 23ம் தேதி முதல் சீரற்றமயமாக்கல் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சட்டமன்ற தொகுதி வாரியாக ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 23 வேட்பாளர்களும், பெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்கு 13 வேட்பாளர்களும், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு 14 வேட்பாளர்களும், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு 15 வேட்பாளர்களும், இறுதி வேட்பாளராக உறுதி செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆலந்தூர் தொகுதிக்கு 15 வேட்பாளர்களுக்கு மேல் உள்ளதால், ஒரு வாக்குச்சாவடிக்கு, ஒரு Ballot Unit வீதம் 517 கூடுதலாக தேவைப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் கையிருப்பில் உள்ள Ballot Unit-களிலிருந்து வழங்கும் பொருட்டு, அவற்றை முதல் கூடுதல் சீரற்றமயமாக்கல் பணி காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் சினேகா தலைமையில், காஞ்சிபுரம் செவிலிமேடு கிராமத்தில் அமைந்துள்ள வாக்குபதிவு இயந்திர கிடங்கில் தேசிய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மேற்படி ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் 517 எண்ணிக்கையில் பிரித்து அளிக்கப்பட்டது.

மேற்படி சட்டமன்ற தொகுதிக்கு பிரித்து வழங்கப்பட்ட இயந்திரங்கள், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் ஏஜேஎஸ் மேல்நிலைப்பள்ளியில் ஏற்கனவே உள்ள மின்னணு இயந்திர பாதுகாப்பு அறையில் தேசிய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆலந்தூர் தேர்தல் நடத்தும் அலுவலரால் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. மேலும், இந்த பாதுகாப்பு அறைக்கு ஏற்கனவே 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். பாதுகாப்பு அறை சிசிடிவிகேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நி.எ), நெடுஞ்சாலைகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: