காஞ்சிபுரம், ஏப் 8: சட்டமன்ற மன்ற தேர்தலில் பொதுமக்கள் எந்தவித அச்ச உணர்வு இன்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினரின் கொடி அணி வகுப்பு பேரணி காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார், துப்பாக்கி ஏந்திய தெலங்கானா சிறப்பு காவல் படை போலீசார் என 200க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர். விஷ்ணு காஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி சாலை, பெரியார் தூண் பகுதியில் இருந்து தொடங்கி தேரடி, ரங்கசாமி குளம், விளக்கொளி பெருமாள் கோவில் தெரு, காவலன் கேட் பகுதி வரை பேண்ட் வாத்தியங்கள் முழங்க பொது மக்களின் கவனத்தை ஈர்த்தவாறு பேரணியாக நடந்து சென்றனர்.
