காஞ்சிபுரம் மாவட்டத்தில் 85 வயது முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அஞ்சல் ஓட்டுகள் வாங்கும் பணி தீவிரம்

காஞ்சிபுரம், ஏப்.12: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 85 வயது முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அஞ்சல் ஓட்டுகள் வாங்கும் பணியில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தி உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட நிலையில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து 24 மணிநேர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் செலுத்தி வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. ‘என் வாக்கு என் உரிமை’ என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உறுதிமொழி ஏற்பு, துண்டு பிரசுரம் விநியோகம், பேரணி, கோலப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வசதியாக தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து வாக்களிப்பதை தவிர்க்கும் விதமாக அஞ்சல் ஓட்டு நடைமுறையை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி உள்ளது. வீட்டில் இருந்தபடியே அஞ்சல் ஓட்டு செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026ல் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலந்தூர், பெரும்புதூர் (தனி), உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க விருப்பம் தெரிவித்தனர். ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் 894 முதியோர்கள், 13 மாற்றுத்திறனாளிகள், பெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் 872 முதியோர்கள், 12 மாற்றுத்திறனாளிகள், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 729 முதியோர்கள், 10 மாற்றுத்திறனாளிகள், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் 648 முதியோர்கள், 10 மாற்றுத்திறனாளிகள் விருப்பம் தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் 3143 முதியோர்கள், 45 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 3188 பேர் அஞ்சல் ஓட்டு செலுத்த விருப்பம் தெரிவித்திருந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க விருப்பம் தெரிவித்தவர்கள், சிரமமின்றி வாக்களிக்க வசதியாக 4 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் வாக்குப்பதிவு அலுவலர்கள் (1, 2), நுண்ணறிவு பார்வையாளர் மற்றும் வீடியோகிராபர் ஆகியோர் அடங்கிய 45 குழுக்கள் அமைக்கப்பட்டது. இக்குழுவினர் வீடு வீடாக சென்று அஞ்சல் வாக்குச்சீட்டு விநியோகம் செய்தனர். இந்நிலையில், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட அஞ்சல் வாக்குச்சீட்டு திரும்பப்பெறும் பணி நேற்று தொடங்கியது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அஞ்சல் வாக்குச்சீட்டை திரும்பப் பெற்றனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சினேகா கூறுகையில், ‘85 வயது முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிள் எளிதில் வாக்களிக்கும் விதமாக அஞ்சல் வாக்கிச்சீட்டு நடைமுறைபடுத்தப்பட்டது. தற்போது, அஞ்சல் வாக்குச்சீட்டு திரும்பப்பெறும் பணி நேற்று தொடங்கி 13ம் தேதி(நாளை) நிறைவடைகிறது. வாக்குப்பதிவு குழுவின் முதல் வருகையின்போது, வாக்காளர் முகவரியில் ஆஜரில் இல்லையென்றால் குழு இரண்டாவது வருகை குறித்து தகவல் பிஎல்ஓ மூலமாகவோ அல்லது எஸ்எம்எஸ் மூலமாகவோ வாக்காளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். வாக்குப்பதிவின் இரண்டாவது வருகையின் போதும் வாக்காளர் முகவரியில் ஆஜரில் இல்லையென்றால், அதன்பிறகு வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாது. எனவே, அஞ்சல் ஓட்டு செலுத்தும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் தங்கள அஞ்சல் வாக்குச்சீட்டை வாக்குபதிவு குழுவினரிடம் அளிக்க வேண்டும், என்றார்.

Related Stories: