வேளச்சேரி, ஏப். 14: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நேற்று வேளச்சேரி, பீனிக்ஸ் மாலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற தேர்தல் தொடர்பான வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் இளம் வாக்காளர்கள் இரண்டு பேர் கொண்ட 50 குழுக்களாக பங்கேற்றனர். இந்த வினாடி வினா போட்டியில் தேர்தல் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான விடை அளித்த மகளிர் கிறிஸ்தவ கல்லூரி மாணவிகள் எஸ்.வைசாலி, ஐ.ஜெ.தேவா ஏஞ்சல் ஆகியோருக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மாணவிகள் சவிதா, பிரித்திகா ஆகியோருக்கு ரூ.10 ஆயிரம், மூன்றாம் பரிசாக ராஜலெட்சுமி பொறியியல் கல்லூரி மாணவிகள் சுருதி சந்தோஷி, ரேஷ்மா ஆகியோருக்கு ரூ. 5 ஆயிரம் பரிசுத் தொகையும் இதர மூன்று குழுவினருக்கு ரூ 3 ஆயிரம் சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வேளச்சேரி, பீனிக்ஸ் மாலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் திடீர் குழு நடனம் நேற்று நடைபெற்றது. இந்த நடன குழுவினர் “எனது வாக்கு எனது உரிமை” எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல, போடுவோம் ஓட்டு, வாங்க மாட்டோம் நோட்டு, உங்கள் எதிர்காலத்தை பணத்திற்காக விற்காதீர், “உங்கள் ஓட்டு உங்கள் குரல்” ஏப்ரல் 23 வாக்களிப்போம், 100% வாக்களிப்போம் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தியவாறு நடனம் ஆடினர். இந்த நடனக் குழுவினருடன் பொதுமக்களும் ஆர்வமுடன் இணைந்து நடனம் ஆடி வாக்குப்பதிவு நாளன்று வாக்களிப்பதாக உறுதியளித்தனர். இந்த கலை நிகழ்ச்சிகளை ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
