ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது விபரீதம்: பயணியின் உயிரை துணிந்து காப்பாற்றிய ரயில்வே காவலர் : குவியும் பாராட்டு

​செங்கல்பட்டு, ஏப். 13: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் பயணி ஏற முயன்றபோது நிலைதடுமாறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையிலுள்ள இடைவெளியில் விழுந்து இழுத்துச் செல்லப்பட்டவரை அங்கிருந்த ரயில்வே காவலர் பார்த்து அந்த பயணியின் உயிரை காப்பாற்றியதால் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவிலிருந்து செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மார்க்கமாக காரைக்கால் வரை செல்லும் காரைக்கால் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில், நேற்று ரேணிகுண்டாவைச் சேர்ந்த தலுபுரி குரு (24) என்ற இளைஞர் தனது குடும்பத்தினருடன் விழுப்புரம் செல்வதற்காக முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தார்.

இந்த ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, குடிநீர் பாட்டில் வாங்குவதற்காக தலுபுரி குரு நடைமேடையில் உள்ள உணவகத்திற்கு இறங்கிச் சென்றார். அவர் தண்ணீர் வாங்கிவிட்டுத் திரும்புவதற்குள் ரயில் புறப்படத் தொடங்கியது. இதனால் பதற்றமடைந்தவர், ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது நிலைதடுமாறி ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையிலுள்ள இடைவெளியில் விழுந்து ரயிலால் இழுத்துச் செல்லப்பட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் கூச்சலிட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎப்) காவலர் பிரதீப் குமார், மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று, ரயிலுக்குள் இழுக்கப்பட்ட பயணியை சாமர்த்தியமாக வெளியே இழுத்து, அவரது உயிரைக் காப்பாற்றினார். இதில் தலுபுரி குரு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்தச் சம்பவத்தால் அந்த ரயில் சுமார் 10 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. இக்கட்டான சூழலில் துரிதமாகச் செயல்பட்டு ஒரு உயிரைக் காப்பாற்றிய காவலர் பிரதீப் குமாருக்கு, ரயில் பயணிகள் மற்றும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Related Stories: