வேலூரில் தபால் வாக்குப்பதிவில் முறைகேடு 2 மண்டல அலுவலர்கள் சஸ்பெண்ட்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தபால் வாக்குப்பதிவு மூலம் தங்கள் வாக்குகளை செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 51 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் நேற்று 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் இருந்து தபால் வாக்குப்பதிவு செய்து சேகரிக்கும் பணி இந்த குழுக்கள் மூலம் நடந்தது.

இதில் ஒரு தரப்புக்கு ஆதரவாக தபால் வாக்கு சேகரிக்கப்பட்டதாக கூறி, அப்பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது புகார் தெரிவித்து மற்றொரு தரப்பு அணைக்கட்டு தேர்தல் நடந்தும் அலுவலர் குணசேகரை முற்றுகையிட்டனர். இதில் ஒடுகத்தூர், ஈச்சங்காடு, அன்பூண்டி ஆகிய பகுதிகளில் மூத்த வாக்காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் கருத்துக்களுக்கு மாறாக மண்டல அலுவலர்களே வாக்களித்து வாக்குச்சீட்டுகளில் அவர்களது கையொப்பம் பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்பணியில் ஈடுபட்ட மண்டல அலுவலர்கள் நாகலிங்கம், குணசேகரன் ஆகிய 2 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலட்சுமி உத்தரவிட்டார்.

* முதியவருக்கு பதில் வேறொருவரிடம் தபால் வாக்கு பெற்ற அதிகாரிகள்
ஆம்பூர் தொகுதி முழுவதும் உள்ள மூத்த மற்றும் மாற்றுத்திறன் கொண்ட வாக்காளர்கள் 513 பேரிடம் தபால் வாக்கு பெறும் பணி நேற்று துவங்கியது. இந்நிலையில் கதவாளம் ஊராட்சியை சேர்ந்த சின்னராஜ்(85) என்பவரிடம் தபால் வாக்கு பெற சம்பந்தப்பட்ட குழு அதிகாரிகள் நேற்று மதியம் சென்றனர். ஆனால் 85 வயதான சாமன் மகன் சின்னராஜிக்கு பதிலாக, அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் சின்னராஜ்(72) என்ற பெயரை கொண்ட வேறு ஒரு முதியவரிடம் தபால் வாக்கை அதிகாரிகள் பெற்றுள்ளனர்.

அதற்குரிய படிவத்தையும் பூர்த்தி செய்து கையொப்பம் பெற்றுள்ளனர். இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள், தபால் வாக்கு பெற வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆம்பூர் தாலுகா அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு அவர்களிடம் தேர்தல் நடத்தும் அலுவலர் பூஷணகுமார் விசாரணை நடத்தினார்.

Related Stories: