வடமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை படைத்தது எப்படி?

1947 ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களின் மக்கள் தொகை, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 25 சதவீதம். வளர்ச்சியில் நடுத்தரமாக அல்லது அதை விட கீழ் மட்டத்தில் தான் இருந்தன. வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பின்தங்கிய பிராந்தியங்களாகவே இவை வகைப்படுத்தப்பட்டன. ஆனால், காலங்கள் செல்லச் செல்ல தென்மாநிலங்களின் வளர்ச்சி நாலு கால் பாய்ச்சலில் ஓடத் துவங்கியது. இன்னும் சொல்லப்போனால், வடமாநிலங்கள் 1980களிலேயே நின்று விட, தென் மாநிலங்கள் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிப்பு, தொழிற்சாலை பெருக்கம், வேலை வாய்ப்பு என முன்மாதிரியாக பொருளாதார வளர்ச்சியை சாத்தியமாக்கின. தென்மாநிலங்களில் நம்பர் ஒன் மாநிலமாக இன்று தமிழ்நாடு தான் திகழ்கிறது என்று ஒன்றிய அரசு புள்ளி விவரங்களிலேயே மறைக்க முடியாத அளவுக்கு வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் என அனைத்திலும் தென்மாநிலங்கள் முத்திரை பதித்திருக்கின்றன. தென்னிந்திய மாநிலங்களின் வளர்ச்சியில் பிறப்பு விகிதமும் முக்கிய அம்சமாக அடங்கியிருக்கிறது. வடமாநிலங்களை விட குழந்தை பிறப்பு தென் மாநிலங்களில் குறைவுதான். அதேநேரத்தில், இறப்பு விகிதமும் குறைவு.

குழந்தைகள் இறப்பு விகிதம் குறித்த சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் புள்ளி விவரத்தின்படி தேசிய சராசரி கடந்த 2014ல் ஆயிரம் குழந்தைகளுக்கு 36 பேர் என இருந்தது. இது 2021ல் 27 ஆக குறைந்துள்ளது. தேசிய சராசரியாக ஒரு லட்சம் குழந்தைகளுக்கு 93 பேர் இறப்பு என உள்ளது. இதனை 2030க்குள் 70க்கும் கீழ் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இது குறைவு. 2021ல் தமிழ்நாட்டில் 14 ஆக இருந்தது தற்போது 7 ஆக குறைந்து விட்டது. தென்மாநிலங்கள் முன்னேற்றம் 1980களில் வேகம் எடுத்தது. அந்த காலக்கட்டங்களில் கூட, அதாவது 1980களில் தேசிய சராசரியாக குழந்தைகள் இறப்பு விகிதம் ஒரு லட்சத்துக்கு 753 ஆக இருந்தது. அப்போதே தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் தேசிய சராசரியை விட குறைவாக 300 முதல் 500க்கள் தான் இருந்தன என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு செய்த பல மாநிலங்களின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திய வடமாநிலங்கள் தற்போது பின்தங்கி விட்டன. தற்போது நிலைமை தலைகீழ் ஆகி விட்டது. அதாவது, பின்தங்கிய மாநிலங்கள் என கூறப்படும் தென்மாநிலங்கள் வளர்ச்சி தற்போது அரசு வேகத்தில் நிகழ்ந்து வருகிறது. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற வாசகத்தை பொய்யாக்கி, துறை தோறும் வளர்ச்சியை தென்மாநிலங்கள் சாத்தியமாக்கியுள்ளன. பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையில் கடந்த சுமார் 60 ஆண்டுகளில் நிகழ்ந்த இந்த மாற்றங்கள் விரிவாக கூறப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்கள் உள்ளன. அந்த ஆய்வுக் கட்டுரையின்படி, கடந்த 1960-61ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) உத்தரப்பிரதேசம் அதிகபட்சமாக 14.4 சதவீதப் பங்களிப்பை வழங்கியது. 1990-91ம் ஆண்டிற்குள், இந்தப் பங்களிப்பு 12.6 சதவீதமாகக் குறைந்து விட்டது. உத்தரபிரதேசத்தை பிரித்து உத்தரகாண்ட் உருவாக்கப்பட்ட பிறகு, இந்த பங்களிப்பு மேலும் சரிந்து விட்டது.
இதேபோல் மேற்கண்ட அதே காலக்கட்டத்தில் மேற்கு வங்க மாநிலத்தின் ஜிடிபி பங்களிப்பு 10.5 சதவீதத்திலிருந்து 5.6 சதவீதமாகக் குறைந்து விட்டது. ஒரு காலத்தில் தேசிய சராசரியை விட அதிகமாக இருந்த அம்மாநிலத்தின் தனிநபர் வருமானம், தற்போது தேசிய சராசரியை விடக் குறைவாக உள்ளது. இதுபோல், பசுமைப் புரட்சியின் மூலம் பெரும் பயன் அடைந்த பஞ்சாப் மாநிலத்தின் பொருளாதாரத்தை பொறுத்தவரை , கடந்த 1960-61 நிதியாண்டில் தனிநபர் வருவாய் தேசிய சராசரியில் 119.6 சதவீதமாக இருந்தது. 1970-71ல் 169 சதவீதமாக உயர்ந்தது. அதன்பிறகு சரிவை சந்தித்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பஞ்சாப்பின் பங்களிப்பு, 1970-71ல் 4.4 சதவீதமாக இருந்தது. கடந்த 2023-24 இல் இது 2.4 சதவீதமாகக் குறைந்து விட்டது.

இதற்கு நேர் மாறாக இருந்த தென் மாநிலங்கள் சீரிய வளர்ச்சியை எட்டியுள்ளன. குறிப்பாக 1991ம் ஆண்டின் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பிறகு, தென் மாநிலங்கள் தங்களுக்குக் கிடைத்த புதிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, முன்னணி மாநிலங்களாக உருவெடுத்தன. கடந்த 2023-24ம் நிதியாண்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய 5 தென் மாநிலங்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 30 சதவீதப் பங்களிப்பை வழங்கியுள்ளன.

தகவல் தொழில்நுட்ப துறையிலும் தென் மண்டலங்களே கோலோச்சுகின்றன. வருடாந்திரத் தொழில்துறை ஆய்வறிக்கையின்படி , இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கையிலும் தென் மண்டலங்கள் கணிசமான பங்கைக் கொண்டுள்ளன. தொழில் வளர்ச்சியில் சிறந்ததால் தென் மாநிலங்கள் பொருளாதார ரீதியாகப் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன. 11வது நிதிக் குழு பரிந்துரை காலக்கட்டமான 2000 முதல் 2005ம் ஆண்டு வரை தென் மாநிலங்களின் வரிப்பங்களிப்பு 21.1 சதவீதமாக இருந்தது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு தான் மாநிலங்களின் வரி வருவாய் குறைந்து ஒன்றிய அரசுக்கு வருவாய் அதிகரித்தது. ஆனால், கணிசமான வரி வருவாயில் பங்களிப்பு கொடுத்தும் தென் மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு குறைவாகவே வருவதாக குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் தொகை பெருக்கம்: கடந்த 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தின் மக்கள் தொகை 83,849,775. 2011ல் 199,581,477. இதுபோல் மகாராஷ்டிராவில் 1971ல் 50,412,240, 2011ல் 112,372,972 ஆக இருந்தது. தமிழ்நாட்டில் 1971ல் 41,199,170 ஆக இருந்த மக்கள் தொகை 2011ல் 72,138,958 ஆனது. தமிழ்நாட்டை போலவே கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. 40 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 54.8 கோடியில் இருந்து 121 கோடி என இரண்டு மடங்கிற்கு மேல் ஆனது. இந்த இடைப்பட்ட காலத்தில் உபி, பீகார், ராஜஸ்தான் போன்றவற்றில் மக்கள் தொகை அதிகரித்து விட்டது. ஆனால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இந்த வளர்ச்சி குறைவுதான். அதாவது உபியில் அதிகபட்சமாக 138%, மகாராஷ்டிரா 123%, பீகார் 146 %, மேற்கு வங்கம் 106%, மத்திய பிரதேசம் 142%, ராஜஸ்தான் 166%, குஜராத் 127 % மக்கள் தொகை அதிகரித்தது.

ஆனால், இதே காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சி 75 சதவீதம் மட்டுமே. வடமாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்கள் என ஒட்டு மொத்தமாக எடுத்துக் கொண்டால், தென் மாநிலங்களில் சராசரியாக 86 சதவீதம், இந்தி பேசும் வடமாநிலங்களில் 144 சதவீதமும் மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு வடமாநிலங்களில் பெண் கல்வி மிக குறைவு, குடும்பக் கட்டுப்பாடு மேற்கொள்ளாதது காரணமாக கூறப்படுகிறது. ஆனால், தென் மாநிலங்களில் கல்வி, விழிப்புணர்வு, குடும்பக் கட்டுப்பாடு காரணமாக கருவுறுதல் விகிதம் குறைவாக இருந்துள்ளது. இது பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியது. பிரசவத்தின் போது குழந்தைகள் இறப்பு விகிதத்தை பொறுத்தவரை, தேசிய சராசரி 25ஆக உள்ளது. அதாவது, 1,000 குழந்தைகளுக்கு 25 குழந்தைகள் இறக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் இது 7 ஆக உள்ளது. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் இது 37 ஆக உள்ளது. அங்கு இறப்பு விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.

முக்கிய சாதனைகள்: ஒரு நாடு அல்லது மாநிலத்தில் மக்கள் எவ்வளவு சிறப்பாக வாழ்கிறார்கள் என்பது மனித வளர்ச்சிக் குறியீடு மூலம் அளவிடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இவை மதிப்பிடப்படுகின்றன. இதில், சராசரியாக வாழும் ஆண்டுகள், கல்வி, வருவாய் ஆகியவை முக்கிய அம்சங்களாக கொள்ளப்படுகின்றன. இதில் தமிழ்நாடு டாப் 5 மாநிலங்களில் ஒன்றாக வந்திருக்கிறது. நல்ல அரசு மருத்துவம், உயர் கல்வி, பெண்கள் மற்றும் சமூகநலத் திட்டங்கள் இதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் குறைந்த கல்வி, குறைந்த வருமானம் மற்றும் மருத்துவ வசதி குறைவு காரணமாக பின்தங்கி இருக்கின்றன. தமிழ்நாடு மற்றும் உ.பி., பீகார், மத்திய பிரதேசம் போன்ற வடமாநிலங்கள் மோசமான நிலையில் உள்ளன. தமிழ்நாடு் ஜிடிபியில் டாப் 2 மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. இதுபோல் மனித வளர்ச்சி குறியீட்டில் டாப் 5, சுகாதாரம் டாப் 3, கல்வி டாப் 2 இடங்களில் உள்ளது.

ஒட்டுமொத்த அளவில் தொழிற்சாலைகள், உயர் கல்வி (தேசிய சராசரி 28சதவீதம், தமிழ்நாடு 50 சதவீதம்), அரசு மருத்துவமனைகள் தரம், பெண்கள் நலத் திட்டங்கள், பள்ளிகளில் ஊட்டச்சத்து உணவு, கல்வி தரம், எம்எஸ்எம்இக்கள் எண்ணிக்கை, ஆட்டோமொபைல் ஏற்றுமதியில் நம்பர் ஒன் மாநிலம் என கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் நம்பர் ஒன் மாநிலம் என்ற தகுதியை எட்டி சாதனை படைத்திருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள், பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி தரம் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தியது, புதிய தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புபெருக்கம், குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் இந்தியாவின் டெட்ராய்டு என சென்னையை பெயர்பெறச் செய்தது என பல்வேறு முயற்சிகள் உட்கட்டமைப்பு பணிகள் தான் வடமாநிலங்களை பின்னுக்கு தள்ளி இந்த உயரத்துக்கு தமிழ்நாட்டை இட்டுச் சென்றிருக்கிறது என்பது புள்ளி விவரங்கள் மூலம் அறிய முடிகிறது.

* கடந்த 1960-61ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) உத்தரப்பிரதேசம் அதிகபட்சமாக 14.4 சதவீதப் பங்களிப்பை வழங்கியது. 1990-91ம் ஆண்டிற்குள், இந்தப் பங்களிப்பு 12.6 சதவீதமாகக் குறைந்து விட்டது. உத்தரபிரதேசத்தை பிரித்து உத்தரகாண்ட் உருவாக்கப்பட்ட பிறகு, இந்த பங்களிப்பு மேலும் சரிந்து விட்டது.

* ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக புள்ளி விவரப்படி, குழந்தைகள் இறப்பு விகிதம் கடந்த 2014ல் ஆயிரம் குழந்தைகளுக்கு 36 பேர். இதனை 2030க்குள் 70க்கும் கீழ் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இதை விட மிக குறைவான இறப்பு விகிதமே உள்ளது.

* ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திய வடமாநிலங்கள் தற்போது பின்தங்கி விட்டன. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற வாசகத்தை பொய்யாக்கி, துறை தோறும் வளர்ச்சியை தென்மாநிலங்கள் சாத்தியப்படுத்தியிருக்கின்றன. இதில் குறிப்பாக தமிழ்நாடு அரசு கடந்த 5 ஆண்டில் வியத்தகு சாதனைகள் படைத்திருப்பது ஒன்றிய அரசு புள்ளி விவரத்திலேயே தெரிய வந்துள்ளது.

Related Stories: