அசைவ உணவை விட சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு குறைவு: ஆய்வில் தகவல்

சென்னை: அசைவத்தை விட சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மக்கள்தொகை சுகாதாரப் பிரிவு (Oxford Population Health) மற்றும் உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (World Cancer Research Fund) இணைந்து நடத்திய இந்த ஆய்வில், 18 லட்சத்துக்கும் அதிகமான (1.8 மில்லியன்) பங்கேற்பாளர்களின் தரவுகள் 16 ஆண்டுகள் வரை பகுப்பாய்வு செய்யப்பட்டன.

இதில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் தைவான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர். இதுவரை இத்தகைய உணவு-புற்றுநோய் ஆய்வுகளில் இதுதான் மிகப் பெரியது. இந்த ஆய்வு வழக்கமான அசைவம் (சிவப்பு இறைச்சி உட்பட) சாப்பிடுபவர்கள், கோழி இறைச்சி மட்டும் சாப்பிடுபவர்கள், மீன் மற்றும் கடல் உணவு சாப்பிடும், பால், முட்டை சேர்த்துக்கொள்ளும் சைவர்கள்,முழு வீகன்கள் (எந்த விலங்குப் பொருளும் தவிர்ப்பவர்கள்) என ஐந்தாக பிரித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவுகள் பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் கேன்சரில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவுப்படி, அசைவம் சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும்போது, சைவ உணவு உண்பவர்களுக்குச் சில குறிப்பிட்ட புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக சைவ உணவில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாவர அடிப்படையிலான உணவுகள் அதிகம் உள்ளன. இவை உடல் வீக்கத்தைக் குறைத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மேலும், சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களைத் தவிர்ப்பதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

மேலும் சைவ உணவு உண்பவர்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் (Squamous cell oesophageal carcinoma) வரும் அபாயம் இரு மடங்கு அதிகமாக இருப்பதாக ஆய்வு கண்டறிந்துள்ளது. இதற்கு பி-வைட்டமின் (குறிப்பாக B12) குறைபாடு காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்திய சைவ உணவில் அதிக எண்ணெய், மைதா, சர்க்கரை கலந்த பலகாரங்கள் அதிகம் உள்ளன. இது உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும். எனவே, உண்மையான சைவ உணவு என்றால் அது நார்ச்சத்து நிறைந்த காய்கறி, பழம், முழு தானிய அடிப்படையிலானதாக இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: