பள்ளி மாணவர்கள் விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு

சென்னை: பள்ளி மாணவ, மாணவியர்களின் விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது; பள்ளி மாணவ, மாணவியர்களின் விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில், ஆண்டுதோறும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக சென்னையில் உள்ள அனைத்து நவீன விளையாட்டு அரங்குகள், நேரு பூங்கா விளையாட்டு வளாகம், முகப்பேர் விளையாட்டு வளாகம், கோபாலபுரம் கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி, மினி விளையாட்டு அரங்குகள் மற்றும் கொளத்தூர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஆர்.கே.நகர் விளையாட்டு வளாகம், கொருக்குப்பேட்டை கலைஞர் நூற்றாண்டு விளையாட்டு வளாகம், கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டுகளுக்கான கோடை பயிற்சி முகாம் சென்னையில் 17.4.2026 முதல் 1.5.2026 வரை நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம். முகாமில் கலந்துகொள்ள பதிவு கட்டணம் ரூ.500. முகாம் தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இரு நேரங்களிலும் நடைபெறும். முகாமில் பங்கேற்பவர்களுக்கு நாள்தோறும் ஊட்டச்சத்து நிறைந்த முட்டை, பால் மற்றும் பிஸ்கட் ஆகியவையும், அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்படும். முகாமில் விளையாட்டு வல்லுநர்கள், பயிற்றுநர்கள் மூலம் அறிவியல் ரீதியான பயிற்சி அளிக்கப்படும். இதில் திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தொடர் பயிற்சிகள் மற்றும் விளையாட்டு விடுதிகளில் சேர வழிமுறை செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு, அந்தந்த விளையாட்டு அரங்க அலுவலகங்கள் அல்லது தலைமையகத்தில் உள்ள ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தின் 9514000777 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விளையாட்டு அரங்குகளில் (சென்னை தவிர்த்து) தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டுகளுக்கான “கட்டணமில்லா கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம்” வரும் 17.4.2026 முதல் 1.5.2026 வரை நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். முகாம் தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இரு நேரங்களிலும் நடத்தப்படும். இப்பயிற்சி முகாமில் பங்கேற்பவர்களுக்கு நாள்தோறும் ஊட்டச்சத்து நிறைந்த முட்டை, பால் மற்றும் பிஸ்கட் ஆகியவை வழங்கப்படும். மேலும், பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

மேலும் இம்முகாமில் விளையாட்டு வல்லுநர்கள், பயிற்றுநர்கள் மூலம் அறிவியல் ரீதியான பயிற்சி அளிக்கப்படும். இதில் திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தொடர் பயிற்சிகள் மற்றும் விளையாட்டு விடுதிகளில் சேர வழிமுறை செய்யப்படும். மேலும் தகவல்களுக்கு அந்தந்த மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொடர்பு கொண்டு விவரத்தை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: