காலனி கோயிலுக்குள் வர மாட்டீங்களா…? அதிமுக வேட்பாளரிடம் சரமாரி கேள்வி: கடலூரில் இன்று காலை பரபரப்பு

கடலூர்: கடலூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் அமைச்சரிடம் அதிமுக தொண்டர்கள் சரமாரி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் இன்று காலை கூட்டணி கட்சியினருடன் திருப்பாதிரிப்புலியூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்காக, மார்க்கெட் காலனி சோலை வாழி மாரியம்மன் ஆலயம் அருகே தொண்டர்கள் மாலையுடன் காத்திருந்தனர். இருப்பினும், எம்.சி.சம்பத் பிரசார வாகனத்தை விட்டு இறங்காமல், வாகனத்தில் இருந்தபடியே பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அதிமுக தொண்டர்கள் 5 நிமிடம் இறங்கி வந்து அம்மனை வழிபட்டுவிட்டு பிரசாரத்தை தொடங்குங்கள் என்று கேட்டனர். அதற்கு எம்.சி.சம்பத் நேரமில்லை உடனே கிளம்ப வேண்டும் என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாகனத்தைவிட்டு இறங்கி சாமி கும்பிட்டு விட்டு பிரசாரத்தை தொடங்கலாம். ஏன் பாகுபாடு பார்க்கிறீர்கள். பெருமாள் கோயில் செல்வதற்கு நேரம் இருக்கிறது.

எங்கள் பகுதியில் உள்ள கோயிலில் வழிபாடு செய்வதற்கு உங்களுக்கு நேரம் இல்லையா என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து, வாகனத்தை விட்டு கீழே இறங்கி கோயிலுக்கு சென்ற எம்.சி.சம்பத், கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், தொண்டர்கள் அவருக்கு மாலை அணிவித்தனர். இருப்பினும், மாலையை ஏற்றுக்கொள்ளாமல் உடனே வாகனத்தில் ஏறி பிரசாரத்துக்கு சென்றுவிட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: