சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-9 ம் வகுப்புகளுக்கு 16ம் தேதியுடன் இறுதித் தேர்வுகள் முடிவதால், 17ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. தமிழகத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உ யர்நிலைப் பள்ளிகள்,மேல் நிலைப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் 16ம் தேதியுடன் முடிவடைகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மேற்கண்ட வகுப்புகளுக்கான பள்ளி நாட்கள் ஏப்ரல் இறுதி வரை இருக்கும். 2026ம் ஆண்டில் தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு 23ம் தேதி நடத்தி அதற்கு பிறகு மே 4ம் தேதியில் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. அதற்கான வாக்கு மையங்கள் ்அமைப்பது, உள்ளிட்ட பணிகளுக்கான அரசுப் பள்ளிகள் பெரும்பாலும் பயனபடுத்தப்படுவதால், பள்ளிகளுக்கு முன் கூட்டியே தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி 1 முதல் 9ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை 16ம் தேதியுடன் முடிக்க பள்ளிக்கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை முடிவு செய்து அதன்படி பள்ளி இறுதித் தேர்வுகள் நடந்து வருகின்றன. இதையடுத்து, 17ம் தேதி முதல் கோடை விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 25ம் தேதி வரை அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் உள்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும். விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பணி நிர்வாகப் பணிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் வழங்கப்பட்ட தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
ஜூன் 1ம் தேதி முதல் பள்ளிகளில் வகுப்பு தொடங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் 1-3ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரையில் மாவட்ட அளவில் பணியிடைப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதனால் 1-3 வகுப்புகளுக்கு ஜூன் மாதம் 4ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வி இயக்ககம், தொடக்க கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
