அட்சயதிரிதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நகைக்கடைகளில் முன்பதிவு மும்முரம்: விலை குறைந்து வருவதால் நகை வாங்க ஆர்வம்

சென்னை: அட்சயதிரிதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நகைக்கடைகளில் முன்பதிவு மும்முரமாக நடந்து வருகிறது. விலை குறைந்து வருவதால் நிறைய பேர் நகை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கடந்த ஆண்டை விட விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய 3வது திருதியையான வளர்பிறை திருதியை ‘அட்சய திருதியை’ என்று அழைக்கப்படுகிறது. வளங்களையும், நலன்களையும் குறைவில்லாது அள்ளிக் கொடுக்கும் அட்சய திருதியை நாளில் வாங்கும் பொருள் அளவில்லாமல் சேரும் என்பது நம்பிக்கை.

அதனாலேயே அட்சய திருதியை நாளன்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள், வீடு மனைகள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் வாங்குவது வழக்கம். இந்தாண்டுக்கான அட்சய திருதியை வருகிற 19ம் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 10.49 மணிக்கு தொடங்கி, 20ம் தேதி காலை 7.27 மணிக்கு நிறைவடைகிறது. பொதுவாக வரும் 19ம் தேதி காலை 10:49 மணி முதல் ஏப்ரல் 20ம் தேதி காலை 07:27 மணி வரை நகை வாங்க மிக உகந்த நேரமாகும். பெரும்பாலானோர் ஏப்ரல் 19ம் தேதி காலை நேரத்தையே நகை வாங்க சிறந்த நேரமாகக் கருதுகின்றனர்.

அட்சயதிரிதியை கொண்டாடும் வகையில் இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 45,000 சிறு மற்றும் பெரிய நகைக்கடைகள், சென்னையில் உள்ள 5 ஆயிரம் நகைக்கடைகளில் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏராளமானோர் ஆர்வமுடன் நகை வாங்க முன்பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக நகை விலை என்பது குறைந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நேற்றும் நிறைய பேர் நகை வாங்க கடைகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். அதாவது, குறைந்தப்பட்சம் 25 சதவீதம் முதல் முன்பணம் செலுத்தி தங்களுக்கு பிடித்த நகைகளை புக்கிங் செய்துள்ளனர். அதே நேரத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நகைக்கடைகளில் கவர்ச்சிகரமான சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தங்க நகைகள் பவுனுக்கு ரூ.1000 குறைவு, வைர நகைகள் கேரட்டுக்கு ரூ.15,000 குறைவு, வெள்ளி பொருட்கள் கிலோவுக்கு ரூ.3000 குறைவு, தங்க நாணயங்களுக்கு ஜூரோ சதவீதம் சேதாரம். பழைய தங்க நகைகளை அன்றைய மார்க்கெட் விலைக்கே மாற்றி கொள்ளலாம். முன்பதிவு செய்வர்கள் அட்சயதிரிதியை அன்று தங்கத்தின் விலை குறைந்திருந்தால் அந்த குறைந்த விலையிலும் அல்லது அதிகமாக இருந்தால் முன்பதிவு செய்த விலையிலும் தங்க நகைகளை வாங்கி செல்லலாம் என்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. அதே வேளையில் அட்சதிரிதியை வரவேற்கும் வகையிலும், வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும் 1000க்கும் மேற்பட்ட பல்வேறு புதிய டிசைன்களில் நகைகள் விற்பனைக்காக கடைகளில் வந்து குவிந்துள்ளன.

அட்சதிரிதியை அன்று காலையிலேயே நகைக்கடைகளை திறக்க நகைக்கடைக்காரர்கள் முடிவு செய்துள்ளனர். கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு இரவிலும் கூடுதலான நேரம் கடைகளை திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்களை வரவேற்கும் வகையில் நகைக்கடைகளில் சிகப்பு கம்பளம் வரவேற்பு, மேளம் தாளங்கள் முழங்க வாடிக்கையாளர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. மேலும் கடைகளை வாழை, மாவிலை தோரணங்களுடன் அலங்காரம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். கடந்த ஆண்டு(2025ம் ஆண்டு) அட்சயதிரிதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகை விற்பனையானது. அதே நேரத்தில் தற்போது தங்கம் விலை குறைந்து வருவதால் நிறைய பேர் நகை வாங்க முன்வருவார்கள் என்று நகைக்கடைக்காரர்கள் நம்புகிறார்கள்.

Related Stories: