சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில், பாமகவின் ராமதாஸ் அணி சார்பில், சிட்டிங் எம்எல்ஏ அருள் 2வது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். இதையடுத்து, அவரை ஆதரித்து பிரசார கூட்டம், சேலம் பள்ளப்பட்டியில் நேற்றிரவு நடந்தது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது, கடந்த 5 ஆண்டுகளாக அருள் எம்எல்ஏ, தொகுதி மக்களுக்கு செய்த சாதனைகளை பட்டியலிட்டு பேசிய அவர், மீண்டும் அவரை எம்எல்ஏவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, கூட்டம் முடிந்ததும் ராமதாஸ் தனது மகள் ஸ்ரீகாந்தி மற்றும் உதவியாளர்கள் உதவியுடன், மேடையிலிருந்து கீழே இறங்க முயன்றார். மேடையின் சாய்தள பகுதிக்கு வந்த அவர், திடீரென மயங்கி சரிந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உதவியாளர்கள், அவரை தாங்கி பிடித்தனர். ஆனால், அவரால் எழுந்து நிற்க முடியவில்லை. இதையடுத்து, உடனடியாக அவரை தூக்கி கொண்டு, ஆம்புலன்சில் ஏற்றி காந்திரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனால், கூட்டத்தில் இருந்த பாமகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராமதாசுக்கு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பாமகவில் தனக்கு எதிராக செயல்பட்டு வரும் அன்புமணி தரப்பில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று, ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டிருந்த ராமதாஸ், அதற்காக நேற்று(12ம் தேதி) ேசலத்திலும், இன்று (13ம் தேதி) தர்மபுரி மாவட்டத்திலும் தனது ஆதரவு வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
குறிப்பாக, தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் அன்புமணியின் மனைவி சவுமியாவுக்கு எதிராக அவர் பிரசாரம் செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியதால், தர்மபுரி மாவட்ட அரசியல் களத்தில் மிகுந்த பரபரப்பு நிலவியது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், மருமகளுக்கு எதிரான இன்று நடக்க இருந்த பிரசாரம் ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
* ‘அவருக்கு ஏதாவது ஆச்சு…’
திட்டக்குடி நேற்று பிரசாரத்தில் அன்புமணி பேசுகையில், ‘‘சேலத்தில் எனது தந்தை ராமதாஸ், தேர்தல் பரப்புரையின் போது மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். என் தந்தைக்கு ஏதாவது ஆனால் அவர்களை சும்மா விடமாட்டேன்’’ என்றார்.
