தலைநகர் டெல்லியில் 2028-ஆம் ஆண்டு முதல் பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களை பதிவு செய்ய தடை விதிக்கப்பட உள்ளது. காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் புதிய மின்சார வாகன வரைவு கொள்கை வெளியிடப்பட்டு உள்ளது.
டெல்லியின் வரைவு மின்வாகன கொள்கையானது, தூய்மை போக்குவரத்துக்கான ஒரு செயல் திட்டத்தை வகுத்துள்ளது. இது பெட்ரோல் வாகனங்களுக்குத் தடை விதிப்பதையும், மின்சாரப் போக்குவரத்து முறைக்கு மாறுவதை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகளை வழங்குவதையும் முன்மொழிகிறது.
டெல்லி அரசு வெளியிட்டுள்ள 2026-2030 -ஆம் ஆண்டுக்கான மின்சார வாகன (EV) கொள்கை வரைவானது பெட்ரோல் வாகனங்கள் மீதான காலவரையறை கட்டுப்பாடுகள், கடுமையான வாகனக் குழும விதிமுறைகள், மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான சலுகைகள் மற்றும் சார்ஜிங் ஸ்டேஷன் உட்கட்டமைப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம் நாட்டின் தலைநகர் மின்சாரப் போக்குவரத்திற்கு மாறுவதை விரைவுபடுத்துவதற்கான ஒரு விரிவான செயல் திட்டத்தை கொண்டுள்ளது.
Draft EV Policy 2026-ன் கீழ், ஏப்ரல் 2028 முதல் டெல்லியில் மின்சார இருசக்கர வாகனங்களை மட்டுமே பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும் என்று டெல்லி அரசு முன்மொழிந்துள்ளது. அதாவது குறிப்பிட்ட இந்த தேதிக்குப் பிறகு ஒரு நபர் பெட்ரோல், டீசல் அல்லது சிஎன்ஜி மூலம் இயங்கும் புதிய டூ வீலர் வாங்கினால், அதனை டெல்லியின் தேசியத் தலைநகர் பிரதேசத்தில் (NCT) பதிவு செய்ய இயலாது.
போக்குவரத்துத் துறையின் மின்சார வாகனப் பிரிவால் வெளியிடப்பட்ட இந்த வரைவு, இறுதி செய்யப்படுவதற்கு முன் குடிமக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களைப் பெற 30 நாட்களுக்குப் பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குளிர்காலப் புகைமூட்டத்தின் போது, டெல்லியின் காற்று மாசுபாட்டிற்கு முக்கியக் காரணமாக விளங்கும் வாகன புகையை முற்றிலும் குறைப்பதை இந்த வரைவு கொள்கை நோக்கமாக கொண்டுள்ளது. டெல்லி அமைச்சரவை விரைவில் இந்தக் கொள்கையை ஆய்வு செய்து, அதற்கு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி முழுவதும் மாசு அளவைக் குறைப்பதையும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டைத் துரிதப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
