சிக்கமகளூரு: கேரளாவில் இருந்து சிக்கமகளூரு மாவட்டத்துக்கு சுற்றுலா வந்த பத்தாம் வகுப்பு மாணவி ஸ்ரீநந்தாவின் உடல், சந்திரத்திரிகோண மலையில் உள்ள 2,000 அடி ஆழ செங்குத்தான பாறையில் கண்டெடுக்கப்பட்டது. சிக்கமகளூரு மாவட்டத்திற்கு கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தார் மூன்று வாகனத்தில் சுற்றுலா வந்தனர். அவர்கள் தனியார் தங்கும் விடுதியில் தங்கி விட்டு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று முல்லையங்கிரி, பாபாபுடன் கிரி போன்ற பகுதிகளை சுற்றி பார்த்தனர்.
பின்னர் பாபாபுடன் கிரியிலிருந்து மலை உச்சி மீது இருக்கும் மாணிக்கதாரா அருவிக்கு செல்ல மாலை 5.30 மணி ஆகிவிட்டது. மலை உச்சியிலிருந்து கீழ் பகுதிக்கு இறங்கி சென்று அனைவரும் அருவியை ரசிப்பதற்கு சென்ற பொழுது திடீரென ஸ்ரீ நந்தா என்கிற 14 வயது சிறுமி காணாமல் போய்விட்டார். பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் உடன் வந்தவர்கள் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் உடனடியாக புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
புறநகர் போலீசார் வந்து இரவு ஒரு மணி வரை தேடிவிட்டு கிடைக்காத நிலையில் அதிகப்படியான மேகம் மற்றும் இருட்டு ஆனதால் திரும்பி சென்று விட்டனர். மறுநாளான புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை இரண்டு நாட்களாகவும் தேடும் பணி தீவிர படுத்தப்பட்டது. நேற்று நான்காவது நாள் தேடுதல் வேட்டை தொடங்கிய பொழுது மத்திய பாதுகாப்பு படையினர் கயிறு கட்டி சோளக்காட்டில் இறங்கி பார்த்தனர். அப்ேபாது சுமார் 2000 அடி பள்ளத்தில் ஸ்ரீநந்தா இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஸ்ரீநந்தாவின் உடலை மேலே தூக்குவதற்கு தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் ஆயுதப்படையினர் கயிறு கட்டி மேலே தூக்கி கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் உடல் பிரேத பரிசோதனை செய்து கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் அவர் தந்தையுடன் இருந்த 8 நிமிடத்தில் காணாமல் போனதை அடுத்து யாராவது தள்ளிவிட்டு கொலை செய்தார்களா அல்லது தவறி விழுந்தாரா என்பது குறித்தும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
