காலங்கள் கடந்தும் இந்தியாவிற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம்: மகாத்மா ஜோதிராவ் புலேவுக்கு பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: மகாத்மா ஜோதிராவ் புலே, காலம் கடந்தும் இந்தியாவுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை: ஏப்ரல் 11-ஆம் தேதி நம் அனைவருக்கும் மிகுந்த சிறப்பு வாய்ந்த ஒரு தினம். இந்தியாவின் மகத்தான சமூக சீர்திருத்தவாதிகளுள் ஒருவரான மகாத்மா ஜோதிராவ் புலேவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது 200-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இன்று தொடங்கவிருப்பதால், இந்நாள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

1827-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தில் மகாத்மா புலே பிறந்தார். கற்றலும், கல்வியும் மகாத்மா புலேவின் லட்சியத்தின் மையமாக விளங்கின. சமுதாயத்தில் பலருக்கும் கற்றலின் இன்பம் மறுக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில், அவர் பெண்களுக்கும், முறையான கல்வி பெற வாய்ப்பில்லாதவர்களுக்கும் முன்மாதிரியான பள்ளிகளைத் திறந்தார். வகுப்பறையை நீதி மற்றும் சமத்துவத்தின் கருவியாக மாற்றும் ஒரு புதிய சமூக நிலையை உருவாக்க அவர் பாடுபட்டார்.

கல்வி சார்ந்த அவரது தொலைநோக்குப் பார்வை, நமக்குப் பெரிதும் எழுச்சியூட்டுகிறது. தனது ஞானம் மற்றும் மதிநுட்பத்தால் வேளாண்மை, சுகாதாரம் மற்றும் ஊரக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது புரிதலை மகாத்மா புலே வளர்த்துக்கொண்டார். ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் நலிவடைந்தோரின் கண்ணியத்தை உறுதி செய்ய பாடுபட்டார். அதே வேளையில், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் அவர் எடுத்தார்.

அவரால் நிறுவப்பட்ட சத்யசோதக் சமாஜம், நவீன இந்தியாவின் மிக முக்கியமான சமூக சீர்திருத்த இயக்கங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. தெளிவும், பொது நோக்கமும் இணையும்போது, ​​சமூகத்தின் சக்தி இந்தியாவில் அற்புதங்களை நிகழ்த்தும் என்பதை மகாத்மா ஜோதிராவ் புலேவின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

அதனால்தான் அவர் இன்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஆற்றல் அளிக்கிறார்; அவரது வார்த்தைகளும் செயல்களும் இன்றும் நம்பிக்கையைத் தாங்கி நிற்கின்றன. இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகும், மகாத்மா ஜோதிராவ் புலே, கடந்த காலத்தின் ஒரு ஆளுமையாக அல்லாமல், இந்தியாவின் எதிர்காலத்திற்கான ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறார். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Related Stories: