சிஹோர்: மத்தியப்பிரதேசத்தில் உள்ள நர்மதா ஆற்றில் மத சடங்கிற்காக 11ஆயிரம் லிட்டர் பால் ஊற்றப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்தியப்பிரதேச மாநிலம், சிஹோர் மாவட்டத்தில் உள்ள பேருண்டா பகுதியில் அமைந்துள்ள சத் தேவ் கிராமத்தில் 21 நாட்கள் மத விழா நடைபெற்றது. இதன் நிறைவாக நேற்று முன்தினம் மகாயாகம் மற்றும் புனிதப்படுத்தும் சடங்குகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக இங்குள்ள நர்மதை ஆற்றில் வேதமந்திரங்கள் முழங்க 11ஆயிரம் லிட்டர் பால் ஊற்றப்பட்டது.
ஆற்று நீரின் தூய்மை, யாத்ரீகர்கள் நல்வாழ்வு மற்றும் செழிப்பு ஆகியவற்றை வேண்டி நடத்தப்பட்ட பிரார்த்தனைகளின் ஒரு பகுதியாகவே இந்த பால் நதிக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக தெரிகின்றது. எனினும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த சம்பவத்துக்கு கவலை தெரிவித்துள்ளனர். இதுபோன்ற பெருமளவிலான கரிமப்பொருட்கள் நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனின் அளவை குறைத்து நதி சுற்றுச்சூழல் அமைப்பை பாதிக்கக்கூடும். நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கால்நடைகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.
