திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி டைரக்டர்களில் ஒருவர் ரஞ்சித். ஏராளமான படங்களுக்கு திரைக்கதை எழுதியும், பல படங்களை தயாரித்தும் உள்ள இவர் முக்கிய வேடங்களில் நடித்தும் உள்ளார். தன்னுடைய படங்களுக்கு 2 முறை தேசிய விருது பெற்றுள்ள ரஞ்சித் தற்போது ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்து வரும் ஒரு இளம் நடிகை, டைரக்டர் ரஞ்சித் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி கொச்சி போலீஸ் கமிஷனர் காளிராஜ் மகேஷ்குமாரிடம் ஒரு புகார் கொடுத்தார்.
இந்தப் புகார் தொடர்பாக கடந்த 31ம் தேதி இரவில் தொடுபுழாவில் வைத்து ரஞ்சித்தை போலீசார் கைது செய்து மறுநாள் எர்ணாகுளம் சிறையில் அடைத்தனர். 2 நாள் இவர் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். இதற்கிடையே டைரக்டர் ரஞ்சித் ஜாமீன் கோரி எர்ணாகுளம் முதல் வகுப்பு குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
