கர்நாடகாவில் ஏஐ செயலி அறிமுகம் அரசு அலுவலகங்களில் வருகை பதிவுக்கு இனி செல்பி எடுத்தால் போதும்

பெங்களூரு: அரசு ஊழியர்களின் பொறுப்புணர்வை அதிகரிக்கவும், தினசரி வருகைப் பதிவை எளிமையாக்கவும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறைக்குப் பதிலாக ஏஐ வசதியுள்ள தளத்தை மே 1 முதல் மாநில அரசு பயன்படுத்தவுள்ளது. மாநில அரசின் இந்த நடவடிக்கை பல்வேறு அரசு துறைகள், வாரியங்கள், கழகங்களில் பணியாற்றும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் சுமார் 15 லட்சம் ஒப்பந்தப் பணியாளர்களையும் உள்ளடக்கும்.

கர்த்தவ்யா மொபைல் செயலி மூலம் அணுகப்படவுள்ள கர்நாடக மேம்பட்ட வருகை மேலாண்மை அமைப்பின்படி, அரசு ஊழியர்களும், ஒப்பந்தப் பணியாளர்களும் தங்களது வேலை நாளின் தொடக்கத்திலும் முடிவிலும் செயலி வழியாக செல்ஃபி எடுத்து வருகையைப் பதிவு செய்ய வேண்டும். மாநில செயலாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை கடந்த செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவின்படி, மே 1 முதல் ஏஐ மற்றும் ஜிஐஎஸ் வருகைப் பதிவு முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்களுக்காக அரசு கர்த்தவ்யா சாதனங்களை நிறுவியுள்ளது. தற்போது விதான சவுதா, விகாஸ் சவுதாவில் நிறுவப்பட்டுள்ள கர்த்தவ்யா சாதனங்கள், ஏஐ அடிப்படையிலான வருகைப் பதிவு முறைக்கு வழிவகுக்கும். மற்ற அலுவலகங்களும் தங்களது வளாகங்களில் இதேபோன்ற வசதிகளை நிறுவக் கோரலாம். ஊழியர்களுக்கு, இந்த மாற்றம், வருகைப் பதிவைப் பெறுவதற்காக அலுவலக நுழைவாயில்களில் வரிசையில் நிற்க வேண்டியிருப்பதைத் தவிர்க்க உதவும்.

Related Stories: