சிசிடிவி காட்சிகள் மூலம் பாக்.கிற்கு உளவு தகவல்களை அனுப்பிய பஞ்சாப், டெல்லி இளைஞர் 11 பேர் கைது: டெல்லி போலீஸ் அதிரடி

புதுடெல்லி: பாக். ஐஎஸ்ஐக்கு ராணுவத்தின் நகர்வுகள் குறித்த சிசிடிவி காட்சிகளை அனுப்பிய குற்றச்சாட்டில் பஞ்சாப், டெல்லியை சேர்ந்த 11 இளைஞர்களை டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் கபூர்தலா,ஜலந்தர்,பதான்கோட்,பாட்டியலா,மோகா, அரியானாவில் உள்ள அம்பாலா, காஷ்மீரில் உள்ள கத்துவா,ராஜஸ்தானின் பிகானீர் மற்றும் ஆல்வர் ஆகிய நகரங்களில் ராணுவ கண்டோன்மென்ட்டுகள் உள்ளன. இந்த நகரங்கள் சர்வதேச எல்லைக்கு மிக அருகில் உள்ளவை.

இந்த நகரங்களின் முக்கிய பகுதிகளில் சூரியமின் சக்தி மூலம் இயங்கும் சிசிடிவிகள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த சிசிடிவியின் மூலம் பாக். ஐஎஸ்ஐ உளவாளிகள் இந்திய ராணுவ படைகளின் நகர்வுகளை கண்காணித்து வந்துள்ளனர். மேலும் எல்லை பகுதிகளில் உள்ள ராணுவ கட்டமைப்புகளையும் சிசிடிவியின் மூலம் உளவாளிகளுக்கு அனுப்பி உள்ளனர்.

இந்திய எல்லையின் மறுபுறத்தில் இருந்தபடியே இந்திய ராணுவத்தின் நகர்வுகளை நிகழ் நேரத்தில் அவர்கள் பார்த்துள்ளனர். பாகிஸ்தானுக்கு உளவு தகவல்களை அனுப்பி வந்த ரகசிய தகவல் பற்றி டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். இதில்,பஞ்சாப்பை சேர்ந்த மன்பிரீத்சிங்,அன்மோல், சாஹில்,குர்ஜீத்,ரிம்பல்தீப்சிங்,சல்விந்தர் என்ற காலு,பூட்டாசிங்,ஹர்பிரீத், டெல்லியை சேர்ந்த அதுல் ரத்தீ,ரோஹித், அஜய் ஆகிய 11 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி, போலீஸ் கூடுதல் ஆணையர் (சிறப்பு பிரிவு) பிரமோத் சிங் குஷ்வாஹா கூறுகையில், கைதான மன்பிரீத்சிங்கிற்கு ஐஎஸ்ஐயுடன் நேரடி தொடர்பு உள்ளது. சிசிடிவி மூலம் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளின் படங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், ஒன்பது சிசிடிவி கேமராக்கள், மூன்று வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் மற்றும் 24 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன என்றார்.

 

Related Stories: