களக்காடு அருகே குடிநீர் குழாய் உடைந்த பள்ளத்தில் சிக்கிய லாரி

களக்காடு, ஏப்.9: களக்காடு அருகே குடிநீர் குழாய் உடைந்ததால் ஏற்பட்ட பள்ளத்தில் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. களக்காடு பகுதியில் குடிநீர் திட்டத்திற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இந்த பள்ளங்கள் பல்வேறு இடங்களில் சீராக மூடப்படாமல் அதன் மீது அவசர கதியில் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது. இதுபோல களக்காடு-நாங்குநேரி சாலையிலும் மூடப்பட்டு, சாலை போடப்பட்ட பின்னரும் குழாய் உடைந்து நீர் வெளியேறி வருகிறது. குருந்துடையார் சாஸ்தா கோயில் அருகே குழாய் உடைந்து தண்ணீர் ஆறாக வெளியேறி வருவதால் அங்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை பரப்பாடியில் இருந்து நெல் மூடைகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி பாவூர்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி குடிநீர் குழாய் பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இதனால் அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். எனவே குழாய் பதிக்கப்பட்ட இடங்களில் பள்ளங்களை முழுமையாக சீரமைத்து சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: