தேவதானப்பட்டி, ஏப். 8: தேவதானப்பட்டி வட்டார வேளாண்மைத்துறையினர் கூறியதாவது: தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. விவசாயிகள் மானாவாரி மற்றும் களைச்செடிகளால் பாதிப்படைந்த விளை நிலங்கள், மண் வளம் குறைந்த நிலங்களில் கோடை உழவு செய்யவேண்டும். இதனால் நிலத்தின் மண் வளம் பாதுகாக்கப்படும். அடுத்த சாகுபடியின்போது பயிர்களில் களைச்செடிகளின் தொந்தரவு குறையும்.
பயிர்களுக்கு தேவையான இயற்கையாக கிடைக்கும் அத்தனை ஊட்டச்சத்துக்களும் சரிவிதிக அடிப்படையில் கிடைக்க வாய்ப்புள்ளது. கோடை உழவு மூலம் சாகுபடி பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்போது விவசாயிகள் ரசாயன உரப்பயன்பாட்டை குறைக்க வாய்ப்புள்ளது. ரசாயன மருந்து, உரம் பயன்பாடு குறைந்தால் நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு மற்றும் கால்நடைகள், பிற உயிர்கள் பாதிக்கப்படுவது பெருமளவில் குறைக்கப்படுகிறது. பொதுவாக கோடை காலத்தில் விவசாயம் செய்தால் மண்ணுக்கு நன்மைகள் கிடைக்கும். ஆகையால் தற்போது பெய்யும் கோடைமழையை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது விளைநிலங்களை உழவு செய்து பயன்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.
