சிவகங்கை, ஏப்.8: வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை கடைகளில் பயன்படுத்தும் நபர்கள் மற்றும் சட்டத்திற்கு விரோதமாக வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை பதிவு செய்யும் நபர்களில், எவரேனும் தங்களது கைரேகையினை இதுவரை பதிவு செய்யவில்லை எனில், உடனடியாக கைரேகையை சம்மந்தப்பட்ட விநியோகஸ்தர்களிடம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தால் மட்டுமே எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர்கள் பெற்ற நபர்கள் தங்களது கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே அரசால் வழங்கப்படும் மானியமும் சிலிண்டரும் வழங்கப்படும். கைரேகையை பதிவு செய்ய இயலாத நபர்கள் தங்களது கருவிழி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை வணிக நோக்கத்தில் கடைகளுக்கு பயன்படுத்துவதை வணிகர்கள் தவிர்க்க வேண்டும். அவ்வாறு சிலிண்டர்களை வணிக நோக்கில் கடைகளில் பயன்படுத்தும் நபர்கள் மீதும், சட்டத்திற்கு விரோதமாக பதுக்கி வைத்திருப்பதும் கண்டறிப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீதும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
