சென்னை: தவெக தலைவர் விஜய் 3வது முறையாக வேட்பு மனுவில் திருத்தம் செய்து புதிதாக தாக்கல் செய்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல், பிரசாரம் என அனைத்திலும் பல குளறுபடிகள் மற்றும் பல்வேறு பிரச்னைகளை விஜய் சந்தித்து வருகிறார். சட்டமன்ற தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று இறுதி நாள் என்பதால், ஏராளமானோர் தங்களது வேட்புமனுக்களை விறுவிறுப்பாக தாக்கல் செய்தனர்.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவதாக கூறி கடந்த 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், சில தகவல்கள் விடுபட்டதாக சொல்லப்பட்ட நிலையில், மீண்டும் திருத்தம் செய்யப்பட்ட மனுவை கடந்த 4ம் தேதி விஜய் சார்பில் தவெக மாவட்ட செயலாளர் சிவா வேட்புமனு தாக்கல் செய்தார். இதில், மதுரை மாநாட்டில் விஜய்யின் பாதுகாவலர்கள் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை தாக்கி தூக்கி வீசியதாக விஜய் மீது தொடரப்பட்ட வழக்கு மற்றும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக விஜய் மீது தொடரப்பட்ட வழக்குகளின் விவரங்களை சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விஜய் பெயரில் உள்ள ரூ.6 கோடி மதிப்பிலான கேரவன் வாகனம் குறித்த தகவல் மற்றும் அவரது வயதையும் மாற்றம் செய்து மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், திருத்தம் செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்பு மனுவுக்கு பதிலாக, புதிதாக அனைத்து தகவல்களையும் ஒன்றடக்கிய புதிய வேட்பு மனுவை 3வது முறையாக விஜய் சார்பில் மாவட்ட செயலாளர் சிவா தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாவிடம் நேற்று மீண்டும் தாக்கல் செய்தார். இரண்டாவது முறை செய்யப்பட்ட வேட்புமனுவில் சில திருத்தங்களை உரிய ஆவணங்களோடு மீண்டும் தேர்தல் அதிகாரியை சந்தித்து தவெக வழக்கறிஞர்கள் கொடுத்திருந்தாலும், ஒருவித பயத்தில் அனைத்தும் சரியாக இருக்குமாறு பார்த்து நேற்று 3வது வேட்புமனுவை தாக்கல் செய்திருப்பதாகவும் எந்த காரணம் கொண்டும் விஜய்யின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. 2வது முறை திருத்தம் செய்யப்பட்ட வேட்பு மனுவே போதுமானது என்ற போதிலும் ஒருவித பயம் காரணமாகவே தவெகவினர் 3வது முறையாக வேட்பு மனுவை தாக்கல் செய்திருப்பதாக தெரிகிறது. இதே மனுவை திருச்சி கிழக்கு தொகுதியிலும் விஜய் தாக்கல் செய்து உள்ளார்.
