சட்டமன்ற தேர்தலில் திருத்தணி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று அதிமுக, தேமுதிக வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 14 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தமாக 32 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். சசிகலா கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ பி.எம்.நரசிம்மன் கடந்த ஒரு மாதமாக தேர்தல் பிரசாரத்தில் ஆர்வமாக ஈடுபட்டு வந்தார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவர் கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவரது ஆதரவாளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சசிகலா தரப்பில் இருந்து போதிய ஒத்துழைப்பு இல்லாததால், பி.எம்.நரசிம்மன் தேர்தலில் போட்டியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. 4 முறை எம்எல்ஏவாக இருந்த அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பி.எம்.நரசிம்மன் சசிகலா அணியில் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்த நிலையில், அங்கேயும் அவருக்கு போதிய ஆதரவு இல்லாததால் தேர்தலில் போட்டியிட முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாவும், அவரது ஆதரவாளர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் பேசப்படுகிறது. இது, சசிகலாவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
