கேரளத்தில் பாஜ-சிபிஎம் ரகசிய டீல்; சொல்கிறார் கர்நாடக துணை முதல்வர்

 

கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கேரளாவில் மொத்தம் 140 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் 96 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஆட்சிக்கு வந்தால் இந்திரா கேரண்டி திட்டத்தை காங்கிரஸ் அரசு அமல்படுத்தும். உறுதிமொழி கொடுத்தால் அதை காங்கிரஸ் கண்டிப்பாக நிறைவேற்றும். அப்படி ஒரு பாரம்பரியம் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் காங்கிரஸ் கொடுத்த இந்திரா கேரண்டி வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிபிஎம்-பாஜ இடையே ஒரு ரகசிய டீல் இருக்கிறது. அதனால்தான் ஏராளமான ஊழல் புகார்கள் இருந்த போதிலும் பினராயி விஜயன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் ஊழல் புகார்களை கூறி அமைச்சர்களை ஒன்றிய அரசு அவமானப்படுத்துகிறது. ஆனால், கேரளத்தில் அப்படி ஒரு நிலை இல்லை. பாஜவுடன் ரகசிய டீல் இருப்பது தான் இதற்கு காரணமாகும். பினராயி விஜயனின் குடும்பத்தின் மீது கூட ஊழல் நிழல் படிந்துள்ளது. ஆனால், இதுவரை இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: