தவெக வேட்பாளர் மீது ஆபாச படம் வழக்கு: அவரே சொல்லி இருக்காரு… இல்லீகலா சரக்கு வித்த கேசும் இருக்காம்…

‘‘இது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் அல்ல, மக்களுக்கான காப்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம். நமது வேட்பாளர்கள் சாதாரண பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் என சொல்லுவார்கள். மக்களுடன் நிற்கும் வேட்பாளர்களை நான் தேர்ந்தெடுத்து உங்கள் முன் அறிமுகப்படுத்துகிறேன். அவர்களை எம்எல்ஏ ஆக்க வேண்டியது உங்கள் பொறுப்பு’’ என கடந்த மார்ச் 29ம் தேதி தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியிருந்தார். ஆனால், அவர் பேசிய பேச்சுகளுக்கு நேர்மாறாக தான் களத்தில் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார் என்பதில் இங்கு பலருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. அதனை மேலும் நிரூபிக்கும் வகையில் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதி தவெக வேட்பாளர் லெப்ட் பாண்டியின் வேட்பு மனுவில் இணைத்துள்ள ஆவணங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், லெப்ட் பாண்டி மீது கொலை மிரட்டல், ஆபாசப் படங்கள் அனுப்பியது, உயிரிழப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட 9 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது வாக்காளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உறுதிமொழிப் பத்திரத்தில் தன் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அவர் அளித்துள்ள விவரங்கள் பின்வருமாறு:
* தென்கரை காவல் நிலையத்தில் பொது இடத்தில் போஸ்டர் ஒட்டியது.
* தேனி காவல் நிலையத்தில் அபாயகரமாக வாகனம் ஓட்டியது மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கலவரத்தில் ஈடுபட்டது.
* ஆபாசமான படங்களை அனுப்பியது, தகாத வார்த்தைகளால் பேசியது மற்றும் குற்றவியல் மிரட்டல் (கொலை மிரட்டல்) விடுத்தது.
* சட்டவிரோதமாகக் கூடி, வழிமறித்து பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்தது.
* சட்டவிரோதமாகக் கூடி பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தது.
* சட்டவிரோதமாகக் கூடி வழிமறித்தது தொடர்பான மற்றொரு வழக்கு.
* சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டது.
* ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் சட்டவிரோதமாகக் கூடி பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்தது.
* அல்லிநகரம் காவல் நிலையத்தில் மோட்டார் வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டி காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்படுத்தியது என மொத்தம் 9 வழக்குகள் தன் மீது இருப்பதாக வேட்பாளர் லெப்ட் பாண்டி குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற சமூக காவல் உள்ளிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தவெக தலைவர் விஜய் வாக்குறுதி கொடுக்க, அவரது கட்சி வேட்பாளர் தன் மீது மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்ததாக வழக்கு உள்ளது என கூறுகிறார். இவரை போன்றவர்களை தான் பார்த்து பார்த்து நடிகர் விஜய் தேர்ந்தெடுத்தாரா என நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். தவெக வேட்பாளர் லெப்ட் பாண்டி மீது, மது விற்பனை மற்றும் உயிரிழப்பு ஏற்படுத்திய வழக்கு உட்பட இத்தனை வழக்குகள் இருப்பது ஆண்டிபட்டி தொகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமீபத்தில் இதே தவெக வேட்பாளர் லெப்ட் பாண்டி பெண்கள் குறித்து ஆபாசமாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

* கிருஷ்ணகிரியில் வீரப்பன் மனைவி போட்டி
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி போட்டியிடுவார் என அக்கட்சியின் நிறுவனர் வேல்முருகன் அறிவித்திருந்தார். இதையடுத்து, முத்துலட்சுமி நேற்று கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகானிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவரது மகள் வித்யாராணி, மேட்டூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: