நான் யார் தெரியுமா? ஆண்ட கட்சி அமைச்சர்: போலீசை மிரட்டிய திருப்பூர் அதிமுக வேட்பாளர்

திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் எம்எஸ்எம் ஆனந்தன் நேற்று தனது ஆதரவாளர்களுடன் அனுப்பர்பாளையம் புதூரில் உள்ள கருப்பராயன் கோயிலில் இருந்து வேட்புமனுதாக்கல் செய்ய ஊர்வலமாக வந்தார். அளவுக்கு அதிகமாக கூட்டம் வந்ததால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதன் பின்னர் மண்டல அலுவலகத்திற்கு முன்புறம் 100 மீட்டர் தாண்டி குறிப்பிட்ட நபர்களை மட்டுமே அனுமதிப்போம் என போலீசார் தெரிவித்தனர். ஆனால் போலீஸ் தடுப்பையும் மீறி அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மண்டல அலுவலகம் நோக்கி சென்றனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனடியாக நுழைவாயில் கதவுகளை மூடினர். பின்னர் எம்எஸ்எம் ஆனந்தன் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் வேட்பாளர் யார்? பெயர் என்ன? என்று கேட்டனர். இதனால் கோபமடைந்த எம்எஸ்எம் ஆனந்தன், நான் யார் தெரியுமா, ஆண்ட கட்சி அமைச்சராக இருந்து உள்ளேன். சுயேச்சை வேட்பாளரை யார் என்று கேட்பது போல் கேட்கிறீர்கள். இவ்வாறு கேட்கக் கூடாது என போலீசாரை மிரட்டினார். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து நிர்வாகிகள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

* உதயசூரியனுக்கு ஓட்டு கேட்ட அதிமுக கூட்டணி கட்சி தலைவர்
அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுக நிகழ்ச்சி கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் பேசுகையில், ‘‘பாமக வேட்பாளர் திலகபாமாவுக்கு மாம்பழ சின்னத்திலும், துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் ராயபுரம் மனோவுக்கு உதயசூரியன் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும்’’ என்றார். இதை கேட்ட அதிமுக, பாமக தொண்டர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்து போயினர். உடனே, கூட்டத்தில் இருந்த ஒருவர் சின்னத்தை மாற்றி கூறுகிறீர்கள் ஐயா, எனக்கூற பதறிப்போன என்.ஆர்.தனபாலன் சாரி சாரி என கூறி ராயபுரம் மனோவிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும், என்றார். தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் ஏற்கனவே திமுக உடன் கூட்டணி வைத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* நெல்லையில் நாளை விஜய் பிரசாரம்
தவெக தலைவர் விஜய் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 22 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நாளை நெல்லையில் பிரசாரம் செய்கிறார். இதற்காக காப்பர் லீப் அருகே அனுமதி கேட்டு தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த இடத்தை ஆய்வு செய்த போலீசார் பல்வேறு நிபந்தைகளுடன் அனுமதி வழங்கி உள்ளனர். இந்த இடத்தில் நடக்கும் பிரசாரத்தில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வரும் விஜய், அங்கிருந்து நெல்லைக்கு வருகிறார். நெல்லை இந்நிலையில் பிரசார நடக்கும் இடத்தை தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

* சட்டசபையில விசில் அடிக்க முடியாது: n அவங்கள தியேட்டருக்கே அனுப்புங்க…. திருமாவளவன் விளாசல்
புதுச்சேரி உழவர்கரை தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் புஷ்பலதாவை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் எம்பி திறந்த வேனில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரியில் விசிக போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரிக்கும் நிலையில் ஒரு ஓட்டு கூட சிந்தாமல் சிதறாமல் விசிக வேட்பாளருக்கு போட வேண்டும். இங்கு சில பேர் விசில் அடிக்கிறார்கள். தியேட்டரில்தான் விசில் அடிக்க முடியும். சட்டமன்றத்தில் விசில் அடிக்க முடியாது என்று அவர்களை (தவெக) தியேட்டருக்கே அனுப்ப வேண்டும். சட்டமன்றத்திற்கு அனுப்பக்கூடாது. தியேட்டரில் வேண்டுமானால் விசில் அடித்துக்கோ… சட்டமன்றத்தில் விசில் அடிக்க இடம் கிடையாது.

தாமரை மலர கூடாது. அது ஆபத்து. பாஜ, அதிமுக இவர்கள் எல்லாம் மதவாத அரசியலை உயர்த்தி பிடிக்கிறார்கள். சகோதரத்துவத்தை சிதைக்கிறார்கள். சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். மெல்ல மெல்ல பாஜ, அதிமுகவை விழுங்கி கொண்டிருக்கிறது. அதிமுக பல இடங்களில் போட்டியிட்டு ஒரு காலத்தில் புதுச்சேரியில் ஆட்சியை கைப்பற்றிய இயக்கம். இப்போது நம்மைவிட ஒரு சீட்டுதான் அதிகமாக போட்டியிடுகிறது. அதிமுக நிலை பரிதாபமாக மாறியுள்ளது. இதற்கு காரணம், பாஜதான். இந்த தேர்தலில் அவர்கள் அனைவரையும் (தேஜ கூட்டணி) வீட்டிற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* விசில் ஊதினால் சளி போகும்: செங்ஸ் காமெடி
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே, தவெக பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது:
கோபி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியதை காட்டிலும், உங்களோடு இருக்கும்போது எனக்கு வயது 20 குறைந்து விட்டது. 1967ல் அண்ணா, 1977ல் எம்ஜிஆர், இப்போது 2026ல் கோட்டையை பிடிப்பவர் விஜய் தான். எல்லோரும் விஜய் அறிவித்த திட்டங்களை எப்படி நிறை வேற்ற முடியும்? என்று கேட்கிறார்கள். விஜய்யால் அதை நிறைவேற்ற முடியும்.

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிற்கே வழிகாட்டுகிற ஒரே தலைவர் விஜய் மட்டும் தான். விசில் சின்னம் தான் இந்தியாவையே நாளை ஆளப்போகிறது என்பதை மறந்து விடக்கூடாது. சின்ன குழந்தைகளுக்கு சளி பிடித்தால் விசில் அடித்தால் போதும் சளி நின்று விடும். ஆயுர்வேதத்தில் மூச்சுப் பயிற்சி வேண்டும் என்று சொல்வார்கள். நல்ல பெரிய விசிலாக அடித்தால் இதயம் நன்றாக பம்பாகும். ஏனென்றால் விசில் இயற்கையோடு வாழ்கிற தொடர்புடைய ஒரு சின்னம். 2026 தேர்தலை பொறுத்தவரை 234 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறுவோம். இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.

Related Stories: