பாஜவில் பதவி வழங்காததால் கடும் அதிருப்தி; சரத்குமாருடன் பியூஸ் கோயல் திடீர் சந்திப்பு

 

நடிகர் சரத்குமார் கடந்த 2024ம் ஆண்டு தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை பாஜவுடன் இணைத்தார். அப்போது, அவருக்கு பாஜவில் தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரிய அளவிலான பொறுப்புகள் ஏதும் அவருக்கு வழங்கப்படவில்லை. இதற்கிடையே, பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார். சரத்குமாருக்கு தேசிய அளவிலான பொறுப்புகள் வழங்காதது அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சென்னையில் அண்மையில் சரத்குமார் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்கள், ‘மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும். அப்போதுதான் நமக்கான அங்கீகாரம் கிடைக்கும். முக்கிய பொறுப்புகள் இல்லாததால் தேர்தல் களத்தில் செயல்படுவது சிரமமாக இருக்கிறது. உங்களுக்கு அங்கீகாரம் வழங்காவிட்டால் பாஜவில் எங்களுக்கு வழங்கிய பொறுப்புகளை ராஜினாமா செய்துவிட தயாராக இருக்கிறோம்’ என சரத்குமாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து பாஜவில் பொறுப்பு வழங்காமல் எப்படி செயல்பட முடியும் என்றும், அடுத்தக்கட்ட முடிவை விரைவில் அறிவிப்பேன் என்றும் சரத்குமார் தெரிவித்தார். மேலும், ‘‘தேர்தலுக்கு முன்பு பொறுப்புகள் வருவது அவசியம் என்றும் பிரதமர் மோடியின் மீது கொண்ட பற்றால் மட்டுமே நான் பாஜவில் இணைந்தேன். பொறுப்பு இல்லாமல் எப்படி செயல்படுவது என்று எனக்கு தெரியவில்லை’’ என சரத்குமார் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
தொடர்ந்து பாஜவில் பொறுப்பு வழங்கக்கோரி, மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் சரத்குமார் கடிதம் வழங்கினார். அப்போது அவர், ‘‘எங்களின் கோரிக்கைகளை கடிதமாக கொடுத்துள்ளோம். பரிசீலிப்பதாக கூறியுள்ளனர். நல்லதே நடக்கும்; நம்பிக்கை இருக்கு. பாஜவின் முடிவை பொறுத்தே அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது குறித்து முடிவெடிப்பேன்’’ என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் சரத்குமாரை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் ஒன்றிய அமைச்சரும், தமிழக பாஜ மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், ‘‘கட்சிக்கு பணியாற்ற வேண்டும். விரைவில் பெரிய பதவி வழங்கப்படும்’’ என்று பியூஸ் கோயல் உறுதியளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சரத்குமார் கூறுகையில், ‘‘சந்திப்பு மிகவும் சுமுகமாக இருந்தது. நல்ல நம்பிக்கையுடன் அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளேன். நான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்ற முடிவில் உறுதியாக இருந்தேன். பாஜ வேட்பாளர்களின் வெற்றிக்காக முழுமையாக உழைப்பேன். என்னுடன் பயணித்தவர்கள் அதிருப்தியில் இருந்தனர். அவர்களுக்காக குரல் கொடுத்தேன். தனி மனிதர்களை தாக்கி தான் தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்கிறாரே தவிர புதாக ஒன்றுமில்லை’’ என்றார்.

 

Related Stories: