அதிமுக முகமூடி போட்டுள்ள பாஜ தமிழகத்தில் எப்போதும் காலூன்றவே முடியாது: செல்வப்பெருந்தகை திட்டவட்டம்

 

பெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 230 தொகுதிக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும். தமிழக முதல்வர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவரும் தமிழகத்தில் இன்னும் ஒரு இரு நாட்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளனர். பரப்புரை நேரமும், தேதியும் பின்னர் அறிவிக்கப்படும். பாஜ ஆளும் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு குறித்தும், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற குறித்தும் ஒப்பிட்டு பார்த்துவிட்டு பேச சொல்லுங்கள். தமிழகத்தில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் குற்றம் பெரிதளவு குறைந்துள்ளது.

தமிழக முதல்வர் இரும்புக்கரம் கொண்டு குற்ற சம்பவங்களை தடுத்து வருகிறார். சில சமூக விரோதிகள் செயலால், ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடந்தால் அதனை சுட்டிக்காட்டி சட்ட ஒழுங்கு சரி இல்லை என பேசி வருகிறார்கள். அவதூறு, அகங்காரம், ஆணவ பேச்சு தான் பியூஷ் கோயலிடம் பார்க்க முடியும். பாசிசம் மற்றும் மதவாத அரசியலுக்கு தமிழ்நாட்டில் என்றும் இடமில்லை. பல்வேறு வகையில் ஐந்து வருடங்களாக தொந்தரவு கொடுத்தும், தமிழக முதல்வர் சிறப்பான முறையில் ஆட்சி செய்திருக்கிறார். அதிமுக முகமூடி அணிந்து வந்துள்ள பாஜ எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: