பாஜ எல்லாம் தருவார்கள் என்பது கையாலாகாத்தனம்: திருடனுடன் சேர்ந்தால் நீயும் திருடன்தான்; புதுச்சேரி என்டிஏ கூட்டணியை வெளுத்து வாங்கிய சீமான்

புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு தேர்தல் அறிக்கை வெளியிட்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுவையில் காங்கிரஸ் பல ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறது. தற்போது பாஜ அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இந்த மண்ணுக்கு ஒரு மாநில உரிமையை பெற்றுத் தர முடியவில்லை. கேரளாவில் மாகேவும், ஆந்திராவில் ஏனாம் என இரண்டு தொகுதிகள் உள்ளன. அங்கு நான் போய் நிற்க முடியவில்லை. அந்த மண் சார்ந்தவர்கள் தான் நிற்கிறார்கள். அந்த இரண்டு தொகுதிக்கும் அமைச்சர் கொடுத்து விடுகிறார்கள். அவர்கள் உள்துறை, வருவாய்த்துறை எடுத்துக் கொள்கிறார்கள்.

இங்குள்ள பாஜ தலைவரின் கருத்து என்ன? நான் மட்டும் இந்தியனாக இருக்க வேண்டும். அவர்கள் மட்டும் கன்னடனாக இருக்க வேண்டுமா? நதிநீர் பகிர்வில் உரிய ஒதுக்கீட்டை பெற்று தராத பாஜவுக்கு எதுக்கு ஓட்டு போட வேண்டும். எத்தனை முறை காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக ரங்கசாமி இருந்திருக்கிறார். அப்போது ஏன் மாநில அந்தஸ்து கேட்கவில்லை. நாங்கள் மாகே, ஏனாம் வேண்டாம், மாநில உரிமை வேண்டும் என்று முன்வைத்த பிறகு மாநில உரிமை கொடுங்கள் என்று முதல்வர் ரங்கசாமி கேட்கிறார். இத்தனை பிரச்னையை தந்தது யார்? இந்த ஆட்சியாளர்கள்தான். காமராஜரின் வாரிசு என கூறும் ரங்கசாமி, எப்படி பாஜவுடன் கூட்டணி வைக்கிறார். எந்த கொள்கையின் அடிப்படையில் கூட்டணி வைக்கிறார். பாஜவுடன் கூட்டணி வைத்தால்தான் நமக்கு எல்லாம் தருவார்கள் என்பது கையாலாகாத்தனம்.

2050க்குள் புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று பாஜவுடன் சேர்ந்துள்ள எல்ஜேகே கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறி இருக்கிறார். அவர் தனியாக நின்றிருந்தால் பரவயில்லை. ஏற்கனவே உள்ள திருடனுடன் சேர்ந்ததால், அவர்கள் சார்லசைதான் ஒழிப்பார்கள். திருட்டை ஒழிக்க முடியாது. யாருடன் நான் சேர மாட்டேன். என்னுடைய கொள்கையில் தெளிவு உள்ளது. குழப்பம் இல்லாமல் முடிவு எடுப்பேன். என்ஆர் காங்கிரஸ் 2 சீட் வாங்கிவிட்டு புதுச்சேரியை எப்படி சிங்கப்பூராக மாற்ற முடியும். தனியாக நின்று தோற்று, தோற்று தன்னுடைய தத்துவத்தை மக்களிடம் விதைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

* தலைவர்கள் இன்று…
முதல்வர் மு.க.ஸ்டாலின் சீர்காழி,
கடலூர்
எடப்பாடி பழனிசாமி
(அதிமுக பொதுச்செயலாளர்) பெரம்பலூர், உளுந்தூர்பேட்டை
செல்வப்பெருந்தகை
(காங்கிரஸ் மாநில தலைவர்) பெரும்புதூர்
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்) கோவில்பட்டி, சாத்தூர்
நயினார் நாகேந்திரன் (பாஜ தலைவர்) சாத்தூர்
பெ.சண்முகம் (சி.பி.எம்.மாநில செயலாளர்) பழனி
மு.வீரபாண்டியன்
(சி.பி.ஐ.மாநில செயலாளர்) திண்டிவனம்
திருமாவளவன்
(வி.சி.க தலைவர்) காட்டுமன்னார்கோவில்
பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்) விருத்தாசலம்
அன்புமணி
(பாமக தலைவர்) சென்னை
ஜி.கே.வாசன்
(தமாகா தலைவர்) திருவையாறு, அரியலூர்
சீமான்(நாதக
ஒருங்கிணைப்பாளர்) சென்னை
டி.டி.வி.தினகரன்
(அமமுக பொதுச்செயலாளர்) பூந்தமல்லி
விஜய் (தவெக தலைவர்) பனையூர்

* மோடியுடன் பிரசாரம் பண்ணப் போறேன்: எடப்பாடி தகவல்
சேலம் மாவட்டம் இடைப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில் 8வது முறையாக தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவர், இத்தொகுதியில் கடந்த 1989 தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு நடைபெற்ற 1991, 1996, 2006, 2011, 2016, 2021 சட்டசபை தேர்தல்களிலும் இவரே வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதில், 1989, 1991, 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றார். 1996, 2006 ஆகிய சட்டசபை தேர்தல்களில் தோல்வி அடைந்தார். தற்போது 8வது முறையாக, மீண்டும் இடைப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

வேட்புமனு தாக்கலுக்கு பின், எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: இடைப்பாடி தொகுதியை முன்மாதிரியாக மாற்றி இருக்கிறேன். மக்கள் வைத்த பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கிறேன். ஒன்று இரண்டு கோரிக்கைகள் விடுபட்டு இருந்தால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றி தரப்படும். இடைப்பாடி தொகுதி மக்கள் எனக்கு மீண்டும் வாய்ப்பு தருவார்கள். வருகிற 15ம் தேதி கன்னியாகுமரியில் பிரதமர் கலந்து கொள்ளும் பிரசார கூட்டத்தில் நானும் கலந்து கொள்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி தான், அதிக இடங்களில் வெற்றி பெறும். அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Related Stories: