வில்லிவாக்கம், தி.நகர், மயிலாப்பூர் உள்பட 5 தொகுதிகளின் பிரசாரத்தை ரத்து செய்தார் விஜய்

சென்னை: நடிகர் விஜய் தி.நகர், வில்லிவாக்கம், மயிலாப்பூர் உள்பட 5 தொகுதிகளின் பிரசாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி முதல் முறையாக தேர்தலைச் சந்திக்கிறார். அந்த கட்சி மற்ற கட்சிகளின் கூட்டணியை எதிர்பார்த்திருந்த நிலையில், எவரும் வராததால் தனித்து நிற்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால், தவெக சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அக்கட்சியின் தலைவர் விஜய் ஏற்கனவே சென்னையில் பெரம்பூர், கொளத்தூர் ஆகிய தொகுதிகளிலும் திருச்சி கிழக்கிலும் பரப்புரை மேற்கொண்டார். அதேபோல், புதுச்சேரியிலும் பரப்புரை செய்தார். கடந்த வாரம் வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து பரப்புரை செய்யத் திட்டமிட்டிருந்தார். ஆனால், தவெக தொண்டர்கள் கட்டுப்பாடுகளை மீறியதால் நெரிசல் ஏற்பட்டது. ஆனால் தவெக தரப்பு காவல்துறை பாதுகாப்பு வழங்குவதில் குறைபாடு என்று காரணத்தைக் கூறி வில்லிவாக்கத்தில் நடைபெற இருந்த பரப்புரையை ரத்து செய்தது.

அதேபோல், நேற்று வில்லிவாக்கம் மற்றும் தியாகராய நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கோரி தவெக சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் பரப்புரைக்கு அனுமதி வழங்கியது. ஆனால், தாங்கள் கேட்கும் நேரத்தில் காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்ற காரணத்தைக் கூறி நடிகர் விஜய் பரப்புரையை ரத்து செய்துவிட்டார். இந்நிலையில், இன்று சைதாப்பேட்டை தொகுதியில் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தனர். அந்த விண்ணப்பத்தில் காலை 11 முதல் மாலை 5 மணி வரை அனுமதி வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், சைதாப்பேட்டை போக்குவரத்து நெரிசல் மிகுந்த மற்றும் குறுகலான பகுதி என்பதால் காவல்துறை சார்பில் அவ்வளவு நேரம் அனுமதி வழங்கமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், தவெக சார்பில் வழக்கம்போல காவல்துறை மீது குற்றம்சாட்டி சைதாப்பேட்டை பரப்புரையையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். இதே காரணம்தான் தியாகராய நகருக்கும் சொல்லியது தவெக. இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கும் அரசியல் விமர்சகர்கள், சென்னையில் உள்ள தியாகராய நகர் உள்ளிட்ட இடங்கள் எப்போதும் நெரிசல் மிகுந்தவை. அந்தப் பகுதிகளில் எந்த கட்சிக்கும் 4 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆனால், தவெகவினர் தங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்குவதில்லை என்று கூறி பரப்புரைக்கு வராமல் தவிர்க்கிறார் விஜய் என விமர்சிக்கிறார்கள்.

Related Stories: